Wednesday, May 21, 2014

உங்களுடைய வீடுகளிலும் நூலகம் அமைக்கலாமே!

 

- நெல்லை சலீம்

“கோவில் இல்லாத ஊர்களில் கூட குடியிருக்கலாம், ஆனால் நூலகம் இல்லாத ஊர்களில் குடியிருக்க கூடாது”  என்பார்கள். உண்மைதான்! நூலகம் என்பது ஒவ்வொரு ஊர்களிலும் மட்டுமின்றி வீடுகளிலும் இன்றியமையாத ஒன்றாகும். உங்களுக்கு பிடித்த இன்பமான  ஒர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது, “என் மனதிற்க்கு பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே” என்றார்.

முன்போரு காலத்தில் எல்லா ஊர்களிலுமே நூலகம் இருந்தது. அன்றாட செய்திகளை படிக்கவும், தெரிந்து கொள்ளவும் நூலகத்தையே தொடர்பு கொள்வார்கள். நூலகத்தின் மூலமே அன்றைய அரசியல் பணிகளில் இருந்து, ஆட்சி அதிகாரம் வரை உள்ள அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ள நூலகத்தையே நாடிச் செல்வர். ஆனால் இன்று நூலகம் என்பது அரிதாகி விட்டது.

இதற்கு பிரதான காரணம் இன்றைய இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதன் எதிரொளியே, நூலகங்கள் நம்மை விட்டுச் சென்று விட்டன. அரசு நூலகங்கள் ஒவ்வொரு ஊர்களிலும் மூடப்பட்டு வருகின்றன. அதனுடைய வெளிப்பாடு தான் சமூகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும், குழப்பங்களும் அதிகரித்துள்ளதன் சூழல் வளரும் இளம் தலைமுறையினர் எந்த வித இலக்கும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு சமூகத்தைப்பற்றிய அக்கறை இல்லாமலும், தங்களைப் பற்றிய சிந்தனை இல்லாமலும் சென்று கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. படிப்பதில் இருந்த ஆர்வம் தற்பொழுது உள்ள விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் குறைந்து விட்டது என்று சொல்லலாம். அனைவரிடமும் தொலைபேசி இல்லாமல் இல்லை. நல்ல பெரிய மொபைல் போன்களை வைத்துக் கொண்டு ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆஃப் போன்ற சமூக வலைதளங்களில் தங்களுடைய நேரங்களை செலவழித்து வருகின்றனர்.

இதன் மூலம் ஒரு தகவலை தெரிந்து கொள்ள முடியுமே தவிர, வாழ்க்கையின் எதார்த்தங்களை எடுத்துச் சொல்லாது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்துள்ளார்களோ இல்லையோ, இந்த சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் இல்லாமல் இருக்காது. இது அவர்களின் நேரங்களை வீணடிப்பதிலும், அவர்களின் மூளையையும் சோர்வடைய செய்கிறது.

இதில், சில பயன்தரக்கூடிய தகவல் பரிமாற்றங்கள் இருந்தாலும், பெரும்பாலான இளைஞர்கள் பொழுது போக்கிற்காகவே பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் ஒரு சிலரை தவிர, பிறர் அனுப்பப்படக்கூடிய விஷயங்களை  பகிரக்கூடியவர்களாகவும் அல்லது அதை லைக் கொடுப்பவர்களாகவும் தான் இருக்கின்றனர்.அவர்கள் சொந்தமாக எந்த தகவல்களையும் பதிவு செய்வதில்லை. பெரும்பாலனவர்கள் தங்களுடைய புகைப்படங்களை  பல கோணங்களில் அனுப்புவதற்கே நேரம் சரியாக இருக்கின்றது.

ஃபேஸ்புக்கும் சில போராட்டங்களில் பங்கு பெற்றது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட மக்கள் போராட்டத்தின் ஒவ்வொரு துளிகளையும் ஃபேஸ்புக்கின் மூலம் தெரிந்து கொண்டனர். உலக மக்களுக்கும் சென்றடைய இலகுவாக இருந்தது.

அதேப்போன்று தமிழகத்திலும் கூடன்குளம் போன்ற போராட்டங்களின் செய்திகளை மக்கள் முன் கொண்டு போய் சேர்ப்பததில் ஃபேஸ்புக்கின் பங்கு அளப்பறியது. செய்திகளை பரிமாறிக் கொள்ளக்கூடிய ஒரு கருவிதானே ஒழிய நம்முடைய அறிவை வளர்ப்பதற்கு தகுந்த இடமாக ஏற்றுக் கொள்ள முடியாததே என்றே சொல்லலாம்.

இது போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களிடம் எந்தவித சமூக முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர்களுக்கு சமூகத்தை பற்றிய சிந்தனைகள் ஏற்படுவதில் குறைவுதான் ஏற்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் அறிவு எவ்வாறு அதிகமாகின்றது என்று பார்த்தால், நூலகத்தை தொடர்பு கொள்வதன் மூலமும், நூல்களை ஆழ்ந்து படிப்பதன் மூலமே ஏற்படும். முன்பெல்லாம் படிக்கத் தெரியவில்லையென்றாலும் கூட, புத்தகத்தை வாங்கி வீட்டில் வைப்பார்கள். வரக்கூடிய நம் சந்ததிகளாவது படிப்பார்கள் என்று. ஆனால், இன்று எந்தப் பெற்றோரும் தம்முடைய குழந்தைகளின் அறிவை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் புத்தகங்களை படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதில்லை.

நம்முடைய  வீட்டில் கம்யூட்டர், டீவி, கிச்சன் என்று தனித்தனி அறைகளை ஒதுக்குகின்றோம். ஆனால், நூலகத்திற்கு என்று இடங்கள் ஒதுக்குவதில்லை. நாம் நம்முடைய வீடு கட்டும் திட்டத்தில் நூலகத்தைப் பற்றிய எந்தத் திட்டமும் தீட்டுவதில்லை. நம்முடைய குழந்தைகளுக்கு நூல்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. அதனுடைய முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களிடம் எடுத்துக் கூறவது கிடையாது.

இதனால், வளரும் இளம் பருவத்தினர் எந்தவித ஆர்வமுமின்றி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளை நூலகங்களாக மாற்றுங்கள். சிறியளவிலாவது அதனை ஏற்படுத்தி உங்கள் பிள்ளைகள் மட்டுமின்றி, உங்கள் அண்டை வீட்டார், உறவினர் ஆகியோர்களை நூலகத்தைப்பற்றிய அவசியத்தைப் ஏற்படுத்துங்கள். எதிர்காலத்தில் ஊர்களில் அல்ல; ஒவ்வொரு வீடுகளிலும் நூலகங்கள் உண்டு என்ற நிலையை உருவாக்குவோம். எதிர்காலத்தில் ‘வாசிப்பு’ நிறைந்த சமூகமாக மாற்றியமைப்போம்.

No comments:

Post a Comment