Friday, June 27, 2014

காசுமீர் பெண்களை சீரழித்த இந்திய இராணுவத்தின் திமிர்!

எழுத்தாளர்: க.அருணபாரதி
தாய்ப் பிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
பிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஏப்ரல் 16 - 2014
வெளியிடப்பட்டது: 27 ஜூன் 2014

நன்றி: கீற்று http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamildesaithamilarkannotam-april-16-2014/26767-2014-06-27-06-49-10

Indian- military- -600

து 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாளின் இரவு. காசுமீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள குனன் மற்றும் போஷ்போரா ஆகிய இரு அருகமை கிராமங்களின், இருட்டைக் கிழித்துக் கொண்டு ‘தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் இந்திய இராணுவத் தினர் திபுதிபுவென நுழைந்தனர். இந்திய இராணுவத்தின் நான்காம் ராஜ்புதனா படையணி அது!

உள்ளே நுழைந்ததும், ‘விசாரணை’ என்ற பெயரில், அங்கிருந்த ஆண்கள் தனியே பிரித்து கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்த 2 வீடுகளில் ஆண்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டு பூட்டப் பட்டனர். வெளியில், தனித்து நின்றிருந்த பெண்களை, மிருகங்களைப் போல் வேட்டையாடிய இந்திய இராணுவம், அவர்களை கொடூரமான பாலியல்வன் புணர்வுக்கு ஆளாக்கினர்.

அதில், சிறுமிகள் முதல் முதியவர்கள் வரையாரும் தப்பவில்லை! எங்கும் கதறல் ஒலி! எங்கும் மரணஓலம்! கதறல் ஒலி கேட்டு செய்வதறியாது, மூடிய அறைக்குள் முதியவர்களும் இளைஞர்களும் என ஆண்கள் கூக்குரல் எழுப்பினர். கேட்பார் யாருமில்லை! ஏனெனில், அது காசுமீர்! இந்திய இராணுவத்தின் ஆக்கிர மிப்பிலுள்ள காசுமீரிகளின் தாயகம்!

பிப்ரவரி 24 அன்று வரை, யாரும் கிராமத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. முழு கிராமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்! அங்கிருந்து தப்பிய இரண்டு கிராமத்தினர், மாவட்ட இணை ஆணையர் எஸ்.எம். யாசினிடம் இக்கொடூரம் குறித்து நேரில் முறையிட்டனர். இதனால் அச்சமடைந்த, இராணுவம் கிராமத்தைவிட்டு வெளியேறியது.

மறுநாள் காலை விடிந்தும் கூட, அந்த கிராம மக்களுக்கு அது விடியலைத் தரவில்லை! கண்ணீரும் குற்றுயிருமாக கிராமத்துப் பெண்களும், ஆண்களும் செய்வதறியாது அழுதனர். நிகழ்வு நடைபெற்று 2 வாரங்கள் கழித்து, மார்ச் 8 அன்று 23 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

இந்திய இராணுவத்தினரால், சற்றொப்ப 100க்கும் மேற்பட்ட பெண்கள் அன்றைய இரவில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக் கப்பட்டிருந்தனர். பலர் அதை வெளியில் சொல்லக் கூடத் தயங்கிப் புழுங்கினர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதலில், அப்பகுதியிலிருந்த இராணுவ அதிகாரிகளிடம் கிராம மக்கள் கூறினர். அவர்கள் கேட்பதாக இல்லை. அதன் பின்னர், மாவட்ட நீதிபதியிடம் நேரில் சென்று முறையிட்டனர். அவர் கிராமத்தை நேரில் வந்து பார்த்து நிலைமையை உணர்ந்தார். பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 23 பெண் களின் வாக்குமூலங்களுடன் அவர் வெளிப்படுத்திய அறிக்கை, பெரும் அதிர்வலைகளை எழுப்பியது.

மார்ச் 17 1991 அன்று, ஜம்மு காசுமீரின் தலைமை நீதிபதி முப்தி பரூக்கி தலைமையில் உண்மை அறியும் குழு ஒன்று, குனன் மற்றும் போஷ்போரா கிராமங்களுக்கு வந்தது. இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட 53 பெண்கள் வெளிப் படையாக வந்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர். தனது 43 ஆண்டுகால நீதிமன்ற வாழ்க்கையில் இப்படியொரு கொடூரத்தைப் பார்த்ததில்லை எனச் சொன்ன, தலைமை நீதிபதி, ஏன் உள்ளூர் அளவிலான முதற்கட்ட விசார ணையைக் கூட காவல்துறை இந் நிகழ்வுக்கு நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

விசாரணை செய்வதற்கென காவல்துறையால் நியமிக்கப்பட்ட துணைக் கண்காணிப்பாளர் தில்பாக்சிங் என்பவர் அப்போது விடுப்பில் இருந்தார் என பதில் சொல்லப் பட்டது. விடுப்பு முடிந்து வந்த அந்த அதிகாரி கூட, சூலை மாதத்தில் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்தளவிற்கே காவல்துறையின் முதற்கட்ட “விசாரணை’’ இருந்தது.

அதன்பின்னர், அந்த மாவட்டத்தின் பகுதி ஆணையர், போராளிகளின் நெருக்கடி காரணமாகவே கிராம மக்கள் பொய் சொல்வதாகவும், இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் நம்பும்படியாக இல்லை எனவும் அறிக்கையளித்தார். அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இராணுவம் மறுத்தது.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அறிவிக்கும் வகையில், இந்திய பத்திரிக்கையாளர் சபை (Press council of India)யை, இந்நிகழ்வு குறித்து விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டது, இராணுவம். இந்நிகழ்வு நடை பெற்று 3 மாதங்கள் கழித்து சூன் மாதத்தில், விசாரணை நடத்திய அவ்வமைப்பு, இராணுவம் மீது எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லை என இராணுவத்தின் பேச்சாளராகவே மாறிப்பேசியது. 3 மாதங்கள் கழித்து மருத்துவப் பரிசோ தனை செய்துவிட்டு, பாலியல் வல்லுறவுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றது அவ்வமைப்பு!

எனினும், மனித உரிமை ஆர்வலர்களின் தொடர் முயற்சியால் உலகின் கவனத்திற்கு வந்தது, இக்கொடூரம். வளைகுடாப் போரின் போது இந்திய அரசு, அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுத்திருந்ததால், இந்நிகழ்வு குறித்து விசாரிக்க வேண்டுமென “மனித உரிமை“ வேடம் போட்டது, வட அமெரிக்கா. அமைதி - அகிம்சை என்றெல்லாம் பேசுகின்ற இந்தியாவின் இராணுவம், இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுகளில் ஈடுபடலாமா என மேற்குலக ஊடகங்களும் கேள்வி எழுப்பினர்.

ஆனால், இந்த நிமிடம்வரை, இவற்றை பொருட்படுத்தாமல் தமது இராணுவத்தினரை பாதுகாக்கும் முயற்சியிலேயே உள்ளது இந்திய அரசு. அதற்கென பல்வேறு நாடகங்களையும் நடத்தி வருகிறது.

அதோடு, எல்லாவித விசாரணைகளையும் மூடி மறைத்தது இந்திய அரசு. செப்டம்பர் மாதம், இவ்வழக்கில் ஒன்றுமில்லை எனக் கூறி அதை முடித்து வைப்பதாக, குற்றவியல் இயக்குநர் அறிவித்தார்.

23 ஆண்டுகளுக்குப் பிறகும் அம்மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. தில்லியிலும் மும்பையிலும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பும் வடநாட்டு இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்களும், வடநாட்டு மேட்டுக் குடியினரும் குனன் போஷ்பரா நிகழ்வு குறித்து மூச்சுகூட விடுவதில்லை.

இந்த கொடூர நிகழ்வால் பாதிக்கப்பட்ட காசுமீரி கிராமப் பெண்கள், இன்றைக்கும் அனுபவித்து வரும் வலிசொல்லி மாளாதது. இன்றுவரை, அந்த கிராமத்தில் உள்ள பெண்களையாரும் திருமணம் செய்து கொள்ள முன்வருவ தில்லை. அந்த கிராமத்தைச் சேர்ந்த 16 அகவை சிறுமியை, 3 குழந்தை களுக்குத் தந்தையான 50 அகவை பெரியவருக்கு திருமணம் செய்து வைத்தக் கொடுமையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு அம்பலப் படுத்தியது. (காண்க: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 21.07.2013).

கடந்த 2004ஆம் ஆண்டு, பாலியல் வல்லறவுக்கு ஆளான குனன் போஷ்பரா கிராமத்துப் பெண் ஒருவர், காசுமீரின் மனித உரிமை ஆணையத்திடம் இவ் வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்கக் கோரினார். 2007ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்ட கிராமத்தினர் ஒன்றுதிரண்டு நீதி கேட்டு, போராடத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட பல பெண்கள், அவ்வாறே காசுமீர் மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டனர்.

இதன் விளைவாக, 2011ஆம் ஆண்டு காசுமீர் மனித உரிமை ஆணையம் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிகழ்வு நடைபெற்ற பிப்ரவரி 23 அன்றைய தினத்தை, ஒவ்வொரு ஆண்டும் காசுமீரி மக்கள் “காசுமீரிப் பெண்கள் தற்காப்பு தினம்’’ என்ற பெயரில் நினைவு கூறுகின்றனர். இவ்வாண்டு, அவ் வாறு நடைபெற்ற ஓர் நினைவேந் தல் நிகழ்ச்சியில், இந்திய அரசின் அலட்சியப் போக்கால் மனம் நொந்த ஓர் அதிகாரி, 23 ஆண்டு களுக்குப் பிறகு இந்நிகழ்வு குறித்து மனம் வெளிப்படையாகப் பேசியுள்ளது, மீண்டும் அந்நிகழ்வு குறித்த விசாரிக்க வேண்டுமென்ற கோரிக் கையை மேலெழுப்பியுள்ளது.

குப்வராமாவட்டத்தின் இணை ஆணையராக இருந்து எஸ்.எம்.யாசின் என்ற அந்த அதிகாரிதான், அந்நிகழ்வு குறித்து விசாரிப்பதற்காக இந்திய அரசால் அனுப்பப் பட்ட முதல் அதிகாரி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்க தாகும். அவரது வாக்குமூலம், இவ்வழக்கில் புதிய வெளிச்சங்களைபரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இராணுவத்தினர் அக்கிராமப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய உண்மையை வெளியில் சொல்லக் கூடாது என தாம் மிரட்டப் பட்ட தாகவும், அதற்கு கைமாறாக பணம், பதவி உள்ளிட்ட பல சலுகைகள் தருவதாகவும் இந்திய அரசு அதிகாரிகள் பேசியதையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்திய இராணுவத்தினர் பேய்களைப் போல் நடந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு தாம் அரசிற்கு அறிக்கை அளித்ததாகவும், அந்த அறிக்கை வெளியிடப் படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையை அனுப்பியக் குற்றத் திற்காக, 15 நாட்களில் தாம் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் உள் விசாரணையில் இராணுவத்தினர் குற்றம் இழைத்திருப்பது மெய்பிக்கப் பட்ட தாகவும், இருப்பினும் அதை வெளி யில் சொல்ல விரும்பவில்லை என்றும் தனக்கு நெருக்கமான ஓர் இராணுவ அதிகாரி கூறியதாக, ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்யாசின் என்ற அந்த அதிகாரி.

காசுமீர் தாயகத்தை ஆக்கிர மித்துள்ள இந்திய அரசும், இராணுவமும் குனன் போஷ்பரா போன்ற எத்தனையோ கொடூரங்களை அங்கு நிகழ்த்திக் கொண்டே உள் ளனர். காசுமீர் மட்டுமின்றி, மணிப் பூர், மிசோரம் என நீளும் இந்திய இராணுவத்தின் கோரக்கரங்கள், தமிழகத்தையும் விட்டுவைக்காது. இந்திய ஆபத்தை உணர வேண்டும்.

நன்றி: http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamildesaithamilarkannotam-april-16-2014/26767-2014-06-27-06-49-10

No comments:

Post a Comment