Monday, December 16, 2013

காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து: 370 கூறுவது என்ன?

Updated: December 16, 2013 08:31 IST 

அமிதவ மட்டூ

காஷ்மீர் மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து தரும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370 தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஜம்முவில் நடந்த லால்கர் பொதுக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார் நரேந்திர மோடி. அர்த்தமுள்ள வகையில் இந்த விவாதம் நடந்தால் கற்பனை அகன்று உண்மை வெளிப்படும், மாயை விலகி யதார்த்தம் புரியும். இந்த விவாதம் தொடர்பாக அடிக்கடி எழுப்பப்படும் சில கேள்விகளுக்கு விடையளிப்பதே என்னுடைய நோக்கம்.

1. அரசியல் சட்டப்பிரிவு 370, இந்திய அரசியல் சட்டத்தில் ஏன் சேர்க்கப்பட்டது? அல்லது மிகப் பெரிய சிந்தனையாளரும் கவிஞருமான மௌலானா ஹஸ்ரத் மோகினி, அரசியல் சட்ட (வகுப்பு) பேரவையில் 1949 அக்டோபர் 17-ம் தேதி கேட்டதைப் போல, இந்த பாரபட்சம் ஏன்?

இதற்கான விடையை நேருவின் நம்பிக்கைக்கு உரியவரும் அனைவராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தஞ்சாவூர் பிராமணருமான கோபாலசாமி ஐயங்கார் அளித்தார். (முதல் மத்திய அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகித்தவர் கோபாலசாமி ஐயங்கார். ஜம்மு - காஷ்மீர் சமஸ்தான மகாராஜா ஹரி சிங்கின் திவானாக இருந்தவர், அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ வகுத்ததில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு.)

“பல்வேறு காரணங்களால், மற்ற சுதேச சமஸ்தானங்களைப் போல காஷ்மீர் பகுதி இந்திய அரசுடன் சேருவதற்கேற்ற வகையில் பக்குவநிலையில் இல்லை. ஜம்மு - காஷ்மீர் பகுதிக்காக பாகிஸ்தானுடன் இந்தியா சண்டை செய்ய நேர்ந்திருக்கிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் நிலைமை வழக்கத்துக்கு மாறாகவும் அசாதாரணமாகவும் இருக்கிறது.

பிரதேசத்தின் ஒரு பகுதி கலகக்காரர்களிடமும் எதிரிகளிடமும் சிக்கியிருக்கிறது. ஐ.நா. சபையில் முறையிட்டதால் சர்வதேசக் கவனத்துக்கும் இது கொண்டுசெல்லப்பட்டு, புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினைக்குத் திருப்திகரமான தீர்வுகாணப்பட்டால்தான் இது தீரும். மக்களுடைய விருப்பமானது, காஷ்மீர் மாநில அரசியல் சட்டப்பேரவை மூலம் - மாநிலத்துக்கான சட்டங்களையும் மத்திய அரசுக்கு இந்த மாநிலம் மீதுள்ள அதிகாரங்களையும் - தீர்மானிக்கும்” என்றார் கோபாலசாமி.

சுருக்கமாகச் சொன்னால், நாட்டின் பிற பகுதிகளைப் போல ஜம்மு - காஷ்மீர் மாநிலமும் ஒரு நாள் முழுமையாக இணைந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் இந்த அரசியல் சட்டப்பிரிவுக்கான தலைப்பிலேயே, ‘தற்காலிக அடிப்படையில்’ என்று குறிப்பிட்டார்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவும்போதும், மக்கள் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கும்போதும்தான் இது நடைபெறும்.

2. இந்த அரசியல் சட்டப்பிரிவை அப்போதைய உள்துறை அமைச்சர் படேல் எதிர்த்தாரா?

நேரு-படேல் உறவை இப்படியெல்லாம் அற்பமாகக் கேட்டு கொச்சைப்படுத்துவது வரலாற்றையே கேலி செய்வதுபோல் ஆகும். ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக அவர்களுடைய உண்மையான அணுகுமுறையைத் தவறாகப் புரிந்துகொண்டு விமர்சிப்பதுமாகும். காஷ்மீரைப் பொருத்தவரை நேருஜிக்குக் காதலும் லட்சியமும் இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. படேலோ காஷ்மீர் பிரச்சினையை யதார்த்த நிலையில் நின்று பார்த்தார். காஷ்மீரத் தலைவர்களுக்குச் சுயநல எண்ணங்களும் பிரிவினை நோக்கங்களும் இருந்தன. படேல் அதையெல்லாம் அங்கீகரிக்கும் நிலையில் இல்லை.

இந்தியாவை நிர்வகிப்பதில் நேருவும் படேலும் காட்டிய ஆற்றலை அரசியல் சட்டப்பிரிவு 370 உருவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். 1949 அக்டோபரில் ஷேக் அப்துல்லாவுக்கும் ஐயங்காருக்கும் இடையில் 370-வது பிரிவின் சில அம்சங்கள் தொடர்பாக (அந்தப் பிரிவு தயாரான வேளையில் 306ஏ என்றே அது அழைக்கப்பட்டது) கடும் கருத்துவேறுபாடுகள் தோன்றிவிட்டன. நேரு அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தச் சென்றிருந்தார். “எங்கே சுதந்திரத்துக்குத் தீங்கு நேருகிறதோ, நீதி மிரட்டப்படுகிறதோ, ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அங்கு நாங்கள் நடுநிலையோடு இருக்க முடியாது, இருக்கவும் மாட்டோம்” என்று முழங்கினார்.

இதற்கிடையில் ஐயங்கார், ஷேக் அப்துல்லா வுடன் போராடிக்கொண்டிருந்தார். அரசியல் சட்ட நிர்ணய சபையிலிருந்தே விலகிவிடுவதாகவும் எச்சரித்தார். “கடந்த முறை உங்களிடமிருந்து கடிதம் பெற்றதிலிருந்து இருந்த நிலையைவிட மேலும் என்னைக் கவலைக்குள்ளாக்கிவிட்டீர்கள். பண்டிட்ஜி அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொறுப்புகள் என்மீது சுமத்தப்பட்டுவிட்டன” என்று ஷேக் அப்துல்லாவுக்கு அக்டோபர் 15-ல் எழுதிய கடிதத்தில் கோபாலசாமி குறிப்பிட்டிருந்தார்.

நேரு வெளிநாடு போயிருந்த இந்தச் சமயத்தில், ஷேக் அப்துல்லா ஏற்படுத்திய பிரச்சினைகளிலிருந்து மீள யாருடைய உதவியை கோபாலசாமியால் பெற முடியும்? படேலைவிட்டால் வேறு யார் இருக்க முடியும். அப்துல்லாவின் கோரிக்கைகள் குறித்து படேல் அஞ்சவில்லை. அப்துல்லா தன்னுடைய நிலையை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பதாகப் படேல் கருதினார்.

“தன்னுடைய நிலையிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம், தன்னுடைய மாநில மக்களுக்குத் தான் ஆற்ற வேண்டிய கடமைகள் இவை என்று ஷேக் சாஹிப் கூறுகிறார்” என்று கோபாலசாமி ஐயங்காருக்கு ஆறுதல் அளிக்கும்வகையில் கடிதம் எழுதினார் படேல். இறுதியாக படேல்தான் தலையிட்டு, ஷேக் கோரிய திருத்தங்கள் சேர்க்கப்படாமல் காங்கிரஸ் கட்சி மூலமும் அரசியல் சட்ட நிர்ணய சபை மூலமும் இந்திய அரசியல் சட்டத்தின் அங்கமாக பிரிவு 370 இடம்பெற வழிவகுத்தார்.

3. அரசியல் சட்டப்பிரிவு 370 தொடக்கத்தில் இருந்தபடியே அழிவில்லாமல் அப்படியே நீடிக்கிறதா?

அரசியல் சட்ட நிர்ணய சபையில் கூறப்பட்ட ‘சுயாட்சி’ என்பது அப்படியே இன்னமும் நீடிப்பதாகக் கருதப்படுவது மாயைதான். அடுக்கடுக்காக வந்த குடியரசுத் தலைவரின் ஆணைகள் அரசியல் சட்டப்பிரிவின் 370-ஐ கணிசமாக அரித்துவிட்டது. 1950-ல் பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் ஆணையும் 1952-ல் செய்துகொள்ளப்பட்ட டெல்லி ஒப்பந்தமும் மத்திய அரசுக்கும் காஷ்மீருக்கும் உள்ள உறவு, தன்மை குறித்து ஷேக் அப்துல்லாவின் உதவியோடு பல்வேறு விளக்கங்களை அளித்தன.

அடுத்தடுத்து வந்த குடியரசுத் தலைவர் ஆணைகளால் பெரும்பாலான மத்திய அரசின் சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும் என்பதே நடைமுறையாகிவிட்டது. உண்மையில், காஷ்மீர் அனுபவிக்கும் ‘சுயாட்சி’ என்பது, ஆரம்பத்தில் கூறப்பட்ட ‘சுயாட்சி’யின் நீர்த்துப்போன வடிவமே!

ஜம்மு - காஷ்மீரைத் தன்னுடைய அதிகார வரம்பிலும் கவனத்திலும் கொள்ளாத மத்திய அரசு நிறுவனங்களே இப்போது இல்லை எனலாம். பிற மாநிலங்களுக்கும் காஷ்மீரத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம் நிரந்தரக் குடிமக்கள், அவர்களுடைய உரிமைகள் ஆகியவற்றில்தான். உள்நாட்டுக் கலவரம் தொடர்பாக நெருக்கடி நிலையை மத்திய அரசு அறிவிப்பதாக இருந்தால், காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதல் பெற்றால்தான் முடியும்.

மாநிலச் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அந்த மாநிலத்தின் பெயரையோ எல்லைகளையோ மத்திய அரசு மாற்றியமைக்க முடியாது. நினைவிருக்கட்டும்… ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் தனி அந்தஸ்து தரப்பட்டுவிடவில்லை, அரசியல் சட்டப்பிரிவு 371, 371-ஏ, 371-ஐ ஆகிய பிரிவுகளின் கீழ்வரும் வேறு சில மாநிலங்களும் உண்டு.

4. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு நினைத்தால் தானாகவே ரத்து செய்துவிட முடியுமா?

அரசியல் சட்டப்பிரிவு 370-ன் 3-வது துணைப் பிரிவு இதைத் தெளிவுபடுத்துகிறது. குடியரசுத் தலைவர் பொது அறிவிப்பின் மூலம், இந்தச் சிறப்புப் பிரிவு இனி செயல்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறது என்று அறிவித்துவிட முடியும். காஷ்மீர் மாநிலத்துக்கு என்று புதிய அரசியல் சட்ட நிர்ணய சபை நியமிக்கப்பட்டு, அதுவும் ரத்துசெய்துவிடலாம் என்று சம்மதித்து அனுமதி கொடுத்தால்தான்.

அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவைத் திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், அப்படி நாடாளுமன்றம் தானாகவே சட்டத்திருத்தம் செய்தாலும் அது சரியா, தவறா என்று ஆராயும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. மத்திய அரசுக்கும் காஷ்மீர அரசுக்கும் அடிப்படையான உறவை நிர்ணயிக்கும் இந்தப் பிரிவை அவ்வளவு சுலபமாகத் திருத்திவிட முடியாது.

5. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்று தகுதியிழப்பு செய்யும் அளவுக்கு அரசியல் சட்டப்பிரிவு 370 பாலினப் பாகுபாடு கொண்டதா?

அரசியல் சட்டப்பிரிவு 370 என்னவோ பாலின பாரபட்சமற்றதுதான். 1927 ஏப்ரலிலும் 1932 ஜூனிலும் மகாராஜா ஆட்சியின்போது வெளியிடப்பட்ட அறிவிக்கைகளின்படி, பாலினப் பாகுபாடு இருப்பதாகத் தோற்றம் ஏற்பட்டுவிட்டது. 1927-ல் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை கூறுகிறது: “இந்த மாநிலத்தைச் சேர்ந்த குடிமகனின் மனைவி அல்லது கணவனை இழந்த பெண், அவருடைய கணவர் அனுபவித்துவந்த உரிமைகளை இந்த மாநிலத்தின் குடிமகள் என்ற வகையில் தொடர்ந்து பெறலாம் - இதே மாநிலத்தில் குடியிருக்கும் வரையில் அல்லது நிரந்தரக் குடியிருப்புக்காக வேறு மாநிலத்துக்குச் செல்லும் வரையில்.”

இதைத்தான் தவறாகப் புரிந்துகொண்டு, இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண் வேறு மாநிலத்தவரைத் திருமணம் செய்துகொண்டால், குடியுரிமையையும் சொத்துரிமையையும் இழந்துவிடுவார் என்று கூறுகின்றனர். ஆனால், 2002 அக்டோபரில் கூறிய தீர்ப்பில், ஜம்மு - காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்ச் (ஒரு நீதிபதி மட்டும் மாற்றுத் தீர்ப்பு அளித்தார்), “இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண் - வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டாலும், இந்த மாநிலக் குடிமகள் என்ற உரிமையை இழக்க மாட்டார், அத்துடன் சொத்துரிமை உள்பட எல்லா உரிமைகளும் அவருக்கு உண்டு” என்று அறிவித்தது.

6. இறுதியாக, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு பிரிவினைவாதப் போக்குகளுக்கு உரமூட்டி விட்டதா?

தங்களுடைய தனித்தன்மைக்கு ஆபத்து, தங்க ளுடைய எதிர்காலம் என்னாகுமோ என்றெல்லாம் கவலைப்படும் உள்ளூர் மக்கள் அத்தகைய அச்சம் நீங்கி, மாநிலத்தின் நிர்வாகத்தில் பங்கேற்கக் கொண்டுவரப்பட்டதுதான் 370-வது பிரிவு. அது மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான பிரிவு. அவர்களும் அரசின் ஒரு பங்குதான் என்பதை உணரச் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டது. அரசு நிர்வாகத்தில் அவர்களும் பங்கெடுத்து, அரசு நிறுவனங்களும் துறைகளும் தங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைக் கேட்டுப் பெற வேண்டும், பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டது.

அடிப்படையில், இந்த 370-வது பிரிவு என்பது அரசின் அதிகாரத்தைப் பரவலாக்குவது, மாநில மக்களுக்குச் சுயாட்சி வழங்குவதாகும். இப்போது நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் வலியுறுத்துவதும் இதைத்தான். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்ற கருத்துக்கும் அரசியல் சட்டம் வகுத்தபடி காஷ்மீர் மாநிலம் சுயாட்சியுடன் செயல்பட வேண்டும் என்பதற்கும் எந்த வகையிலும் முரண்பாடே இல்லை.

அரசின் கொள்கை வகுக்கும் நடைமுறை களிலிருந்து மக்களைத் துண்டிக்கும்போதும் அரசின் அதிகார பீடங்களிலிருந்து அவர்களை விலக்கும்போதும்தான் பிரிவினைவாதம் வளர் கிறது. மாறாக, அதிகாரங்கள் மக்களுக்கே தரப் பட்டால் அரசியல் நிர்வாகத்தில் அவர்களுடைய பங்களிப்பு அதிகரிக்கிறது. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவினால் அல்ல - அந்தப் பிரிவை உள்ளபடியே அமல்படுத்தாமல் அதிகாரக் குவிப்பு ஏற்பட்டதால்தான் மக்கள் பிரிவினை எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதே சரி.

1982-ல் ஸ்ரீ நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்துகொண்ட பாரதிய ஜனதாவின் இந்நாள், முன்னாள் தோழமைக் கட்சிகள் அனைத்துமே, “காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவைப் பாதுகாத்து, அதில் உள்ளவற்றை உளப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றின. 370-வது பிரிவுகுறித்து பாரதிய ஜனதாவும் விருப்பு வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தினால், அதன் மூத்த தலைவர் வாஜ்பாய் கையாண்ட அதே அணுகுமுறைக்குத்தான் இன்றைய பாரதிய ஜனதாவும் ஆதரவு தெரிவிக்கும். அப்படிச் செய்வதன் மூலம்தான் ஜம்மூரியாத், காஷ்மீரியாத், இன்சானியாத் என்ற கோஷங்களுக்கு அர்த்தம் இருக்கும்.

தமிழில்: சாரி

Copyright© 2013, தி இந்து

No comments:

Post a Comment