Tuesday, December 10, 2013

மதக் கலவரத் தடுப்புச்சட்ட எதிர்ப்புகள் நியாயமானவையா?

Updated: December 10, 2013 08:51 IST

அ.மார்க்ஸ்

மதக் கலவரத் தடுப்புச் சட்டம் வரும் நாடாளுமன்றத் தொடரில் முன்வைக்கப்படலாம் என மத்திய அரசு அறிவித்தவுடன், எதிர்பார்த்த முனைகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பா.ஜ.க. இதனை இந்துக்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்படுவதாகக் குற்றம்சாட்டுகிறது. இன்னொரு பக்கம், மாநிலக் கட்சிகள் இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் முயற்சி என எதிர்க்கின்றன. வழக்கம்போல இதில் ஜெயலலிதா முன்நிற்கிறார். எதிர்ப்புத் தெரிவிக்கும் மூன்றாவது பிரிவினர் உயர் அதிகாரவர்க்கத்தினர்.

தாம் அரசியல்ரீதியாகப் பழிவாங்கப்பட இது ஒரு கருவியாக அமையும் என்கின்றனர். மனித உரிமை அமைப்பினரும் இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப் படும் நிலையிலுள்ளோரும் இதை வரவேற்கின்றனர். சுருக்கமாக, ‘மதக் கலவரத் தடுப்புச் சட்டம்’ என அழைக்கப்பட்டபோதும் இதன் எல்லை இன்னும் விரிவானது. ‘மதக் கலவரம் மற்றும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைத் தடுப்பு (நீதி மற்றும் மறுவாழ்வு பெறுதல்) சட்ட வரைவு’ என்பது இதன் முழுப் பெயர். ‘குறிவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை’ என்பதன்மூலம், தனிப்பட்ட பகை ஏதும் இல்லாமலேயே ஏதோ ஓர் இன, மொழி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது பட்டியல் சாதியினர் என்பதற்காகவே ஒருவர் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க முனையும் சட்ட வரைவு இது.

இந்துக்களுக்கு எதிரானதல்ல...

பா.ஜ.க-வினர் கூறுவதுபோல இது இந்துக்களுக்கு எதிரானது அல்ல. இந்தச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் மட்டுமின்றி காஷ்மீர், பஞ்சாப் மற்றும் மேகாலயா மாநிலங்களில் இந்துக்களும் கர்நாடகம், மும்பை போன்ற இடங்களில் தமிழர்களும், மகாராஷ்டிரத்தில் பீஹாரிகள் முதலான இந்தி பேசும் மக்களும், டெல்லி முதலான இடங்களில் சீக்கியர்களும், நாடெங்கிலும் தலித் மற்றும் பழங்குடியினரும் குறிவைத்துத் தாக்கப்படும் சிறுபான்மையினராகக் கருதப்பட்டுப் பாதுகாப்புப் பெறுவர்.

தவிரவும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கும் சம அளவில் இழப்பீடுகள் வழங்கப்படும். இந்தியா போன்ற மத, மொழி, சாதி அடிப்படையிலான பல்வேறு சிறுபான்மையினர் வசிக்கும் நாடுகளில், இவ்வாறு சிறுபான்மை அடையாளங்களை அங்கீகரித்து, அவர்களது பாதுகாப்புக்கான சிறப்புச் சட்டங்களை இயற்றுவது புதிதல்ல. ஜனநாயக நாடுகள் பலவற்றில் இத்தகைய சட்டங்கள் உண்டு.

தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இத்தகையதே. இப்படியான சட்டப் பாதுகாப்பு மற்றும் இட ஒதுக்கீடு அளிப்பது முதலானவற்றைப் பக்கச் சார்பானது (biased) என உலகம் பார்ப்பதில்லை. மாறாக, இவை ‘முற்போக்கு நோக்கிலான வேறுபடுத்தல்கள்’ (positive discrimination) என்றே அழைக்கப்படுகின்றன.

இத்தகைய சட்டங்கள் (1) புதிய குற்றங்களை வரையறுத்து, அவற்றுக்குக் கூடுதல் தண்டனை அளிப்பது, (2) இத்தகைய குற்றங்களை முன்கூட்டித் தடுப்பது, மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியையும் மறுவாழ்வையும் அளிப்பதற்கான பொறியமைவை உருவாக்குவது, (3) கலவரங்களின்போது நடவடிக்கை எடுக்காமல் சார்பு நிலை எடுக்கும் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்வது முதலான அம்சங்களைக்கொண்டிருக்கும்.

இந்தியச் சுதந்திரம் ஒரு பெரும் மதக் கலவரத்துடன்தான் விடிந்தது. 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும், 1961 முதல் சிறிதும் பெரிதுமாக ஏராளமான கலவரங்கள் நடந்துள்ளன. 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி முதலிய நகரங்களிலும், 2002-ல் குஜராத்திலும் நடந்த வன்முறைகள் இவற்றின் கொடுமுடிகளாக அமைந்தன. சுதந்திரத்துக்குப் பிந்திய மதக் கலவரங்களை ஆய்வு செய்த ஸ்டீபன் வில்கின்சன் இவற்றில் 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறார். இவர்களில் 90 சதவீதம் சிறுபான்மையினர்.

காவல் துறை உயர் அதிகாரியாக இருந்து, மதக் கலவரங்களைக் கையாண்ட அனுபவமிக்க முனைவர் விபூதி நாராயணராவ், ஆய்வறிஞர் ஆசுதோஷ் முகர்ஜி முதலானோர் எந்தக் கலவரங்களும் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், அது அரசு மற்றும் காவல் துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடன்தான் நடக்கின்றன என்பதை வலியுறுத்தியுள்ளனர். தவிரவும், இவை திடீரெனத் தன்னெழுச்சியாக நடப்பதுமில்லை. அரசியல் நோக்குடன் திட்டமிட்டும், தொடர்ந்த வெறுப்புப் பேச்சுக்களின் பின்புலத்துடனும்தான் நடைபெறுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுபோன்ற கலவரங்களை ஆய்வுசெய்த 31 விசாரணை ஆணையங்கள் இவற்றில் அதிகாரிகள், காவல் துறையினர், அமைச்சர்கள் ஆகியோரின் பங்கு இருந்ததையும் நிறுவியுள்ளன.

சும்மா இருக்க இயலாது...

‘நிறுவனமயப்பட்ட ஒரு வன்முறை அமைப்பு’ (Institutionalised riot system) செயல்படுவதையும், வன்முறையின் பலன் களை (fruits of violence) வன்முறையாளர்களே அனுபவிப்பதையும், அவர்கள் எந்தத் தண்டனையுமின்றித் தப்பிவிடுவதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதில் உள்ள குறைபாடுகளையும் ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்தச் சட்ட வரைவு பிற நாடுகள் சிலவற்றில் உள்ள ‘ஆணைப் பொறுப்பு’ (command responsibility) என்கிற கருத்தாக்கத்தை அறிமுகம் செய்கிறது. எந்த ஒரு அதிகாரியும் தனக்கு மேலிடத்திலிருந்து ஆணை வரவில்லை என்றோ, இல்லை நடவடிக்கை வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது என்றோ கூறி சும்மா இருக்க இயலாது. அப்படி இருந்தால், அவர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதைப் பழிவாங்கலுக்கு வழிவகுக்கும் எனக் கூறி, அதிகார வர்க்கம் எதிர்ப்பதில் பொருளில்லை. அரசும் அதிகாரிகளும் மக்களுக்குப் பொறுப்பாக இருத்தல் வலியுறுத்தப்படும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டுள்ளோம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

நால்வர் பெண்கள்

வெறுப்புமூட்டும் பேச்சுகள் முதலியவற்றைக் கண்காணிப்பதிலும், கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் அரசுகளுக்கு ஆலோசனை வழங்க ஏழு உறுப்பினர்கள் கொண்ட, ‘மத ஒற்றுமை, நீதி, மறுவாழ்வு தொடர்பான தேசிய ஆணையம்’ ஒன்றையும் மாநில அளவிலான ஆணையங்களையும் அமைப்பதற்கும் இந்தச் சட்ட வரைவு வழி வகுக்கிறது. இந்த ஏழு உறுப்பினர்களில் நால்வர் பெண்களாக இருப்பர். நான்கு உறுப்பினர்கள் சிறுபான்மை மற்றும் பட்டியல் சாதியினர்களாக இருக்க வேண்டும். ஓய்வுபெற்ற அதிகாரிகள் நால்வருக்கு மேல் இருக்கக் கூடாது என்கிற வகையில், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், சிவில் சமூகக் குழுவினர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மாநில அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதற்கு இது வழிவகுக்கும் என ஜெயலலிதா போன்றோர் கூறுவதில் பெரிய நியாயங்கள் இல்லை. இந்த ஆணையங்கள் வெறும் ஆலோசனைக் குழுக்கள் மட்டுமே. இவர்களின் ஆலோசனைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது. ஏதேனும் நடவடிக்கை அவசியம் எனத் தோன்றினால், அவர்கள் நீதிமன்றங்களை அணுகித்தான் ஆணை பெற இயலும். தவிரவும் குற்றங்களைப் பதிவுசெய்வது, புலனாய்வது, வழக்கை நடத்துவது எல்லாமே மாநில அரசுகளின் பணிதான்.

49 திருத்தங்கள்

இந்த ஆணைய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவிலும் பிரதமர், உள்துறை அமைச்சர், சபாநாயகர் தவிர, அனைத்து எதிர்க் கட்சித் தலைவர்களும் இருப்பர். 2005 முதல் கிட்டத்தட்ட நான்கு முறைகளுக்கும் மேல் இந்தச் சட்ட வரைவில் பல்வேறு விமர்சனங்களையும் கணக்கில்கொண்டு, 49 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எதையும் கலவரப் பகுதியாக அறிவிக்கும் மத்திய அரசின் அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல கலவரப் பகுதிகளில் குவிக்கப்படும் மத்திய அரசுப் படைகளின் அபரிமிதமான அதிகாரங்களும் நீக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளைக் கலைக்கும் 355-வது பிரிவுகுறித்த தேவையற்ற குறிப்பும் நீக்கப்பட்டுள்ளது.

‘மதச்சார்பின்மையைக் குலைக்கும் வகையிலான’ நடவடிக்கைகள் எனப் பொதுவாகப் பயன்படுத்துவது, பல்வேறு விளக்கங்களுக்கும் வழி வகுக்கும் என ஜெயலலிதா, மோடி முதலானோர் கூறுகின்றனர். ஒருவேளை இதுதான் பிரச்சினை என்றால், இதையும்கூட நீக்கலாம். அதற்காக இந்தச் சட்ட வரைவையே தூக்கி எறிய வேண்டும் எனச் சொல்வது நீதியாகாது. இந்த நாட்டின் எந்த ஒரு பிரிவினரும் தமக்கு நீதி கிடைக்க வழியில்லை என உணர்வது தேச ஒற்றுமைக்கு வழிவகுக்காது.

- அ.மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: professormarx@gmail.com

 

Copyright© 2013, தி இந்து

No comments:

Post a Comment