Sunday, December 1, 2013

குஜராத் படுகொலைகள்

 

 குஜராத் படுகொலைகள் நிகழ்ந்து ஏழாண்டுகள் கடந்துவிட்டன. அது ஒரு வகுப்பு கலவரம் அல்ல. அரசாங்கத்தின், காவல் துறையின், அரசு இயந்திரத்தின் மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்ட குரூரமான அழித்தொழிப்பு என்பதற்கு எண்ணற்ற நேரடி சாட்சியங்கள் முன்வைக்கபட்டுவிட்டன. இந்தப் படுகொலையை நிகழ்த்தியவர்களின் நேரடி வாக்குமூலங்களை தெஹல்கா இதழ் உலகத்தின் பார்வைக்கு கொண்டுவந்தபோது அது நீதியின்பால், அரசியல் அமைப்பின்பால் கொண்ட கொண்ட நம்பிக்கைகளைச் சிதைத்தது. ஆயினும் நரேந்திரமோடி மீண்டும் வெற்றி பெற்றார். இன்று இந்தியாவை வளரச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு தலைவராக அவர் சித்தரிக்கப்படுகிறார். ஒரு நாள் அவர் இந்தியாவின் பிரதமராகவும் வரக்கூடும். குஜராத் வன்முறையின்போது மோடியின் அரசின் இனவாத பாசின நடவடிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் முக்கிய பங்குவகித்தவர் அப்போது அங்கு உளவுத் துறை கூடுதல் தலைவராக பணியாற்றியவர் கேரளாவைச் சேர்ந்த ஸி.ஙி.ஸ்ரீகுமார். மோடியும் அவரது அரசு எந்திரமும் நரவேட்டைக்கு உறுதுணையாக இருந்ததுடன் எவ்வாறு அதை முன்னின்று நடத்தினார்கள் என்பதை அவர் மனத்துணிவுடன் அம்பலப்படுத்தினார். அவை அரசாங்கத்தின் பாத்திரம் குறித்த அதிகார பூர்வமான, தீர்மானமான நிரூபணங்கள். ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் மோடியின் அரசுக்கு எதிராக அவர் நேருக்கு நேர் நின்று போராடினார். குஜராத் வன்முறையின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக்கொண்டுவருவதந்தில் பெரும் பங்கு வகித்தார். . குஜராத்தில் காந்திநகரில் ஸ்ரீகுமாருடன் நிகழ்த்திய நேர்காணலிருந்து திரு.கே.மோகன்லால் தொகுத்த சித்திரம் இது. இன்னும் கேட்க முடிகிறவர்களை, இன்னும் பார்க்க முடிகிறவர்களை கலங்கச் செய்யும் சித்திரம்.

மலையாள மனோரமா 2008 ஆம் ஆண்டு ஓணம் சிறப்பிதழில் வெளிவந்து பலத்த அதிவுகளை ஏற்படுத்திய பேட்டிக் கட்டுரையின் தமிழாக்கம் இது.

2002 பிப்ரவரி 28. அகமதாபாத்தில் ஆயுதப்படையின் கூடுதல் டி.ஜி.பி.யாக நான் இருந்தேன். குஜராத்தில் முக்கிய நகரங்களில் இனக்கலவரம் வெடிக்கத் துவங்கியிருந்தது. மாடியின் மேல் நின்று அகமதாபாத் நகரத்தை மனம் துடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம் நானும் என் மகள் தீபாவும். முஸ்லீம்கள் வசிக்கின்ற குடியிருப்புகளில் இருந்து நெருப்பும் கடும்புகையும் எழுவதைக் காணமுடிகிறது. அதே குடியிருப்பில் வசிக்கின்ற இன்னொரு காவல்துறை அதிகாரியின் மகளும் எங்களுடன் இருந்தாள். அந்த இளம்பெண் உற்சாகத்துடன் “அங்கிள், அவனுங்க தங்கி இருக்கின்ற இடத்தில் இருந்து புகைவர்றதைப் பார்த்தீங்களா, எல்லோரும் எரிஞ்சிருப்பானுக... செத்திருப்பானுக...”.

இருபத்திரண்டு வயதுள்ள அந்தப் பெண்ணின் முகத்தை அதிர்ச்சியுடன் நான் பார்த்தேன். அன்று இரவு என்னால் தூங்கமுடியவில்லை. அன்று மட்டுமல்ல. தொடர்ந்து வந்த பல தினங்களிலும். நரோதா பாட்யாவிலும், பிணங்கள் வரிசையாகப் படுக்கவைக்கப்பட்டிருந்த பொது மருத்துவமனையிலும் அடுத்த தினங்களில் நான் கண்ட காட்சிகள்... பெண்களை மானபங்கம் செய்தபின் அவர்களின் உடல்களை பல்வேறு முறைகளில் அவமானப்படுத்தியிருக்கின்றனர். 1979 முதல் ஒன்றரை வருடங்கள் அகமதாபாத் காவல்துறை கமிஷனராக நான் இருந்ததனால் முஸ்லீம்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள் அனைத்தும் எனக்கு நன்கு தெரிந்தவைகளாக இருந்தன. எல்லா இடங்களும் இப்போது மயானங்கள்.

என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டது “நீ பெரிய அடிஷனல் டி.ஜி.பி தானே? என்ன செய்யமுடிந்தது உன்னால்?”

குஜராத்திலுள்ள பூஜ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பத்தாயிரக்கணக்கான பிணக்குவியல்களுக்கு நடுவில் நின்று மீட்புப்பணிகளுக்குத் தலைமை தாங்கியிருக்கிறேன். பலமுறை இனக் கலவரங்களை அடக்கி ஒடுக்கிய அனுபவமும் இருக்கிறது. ஆனால் இங்கே நான் தடுமாறி விட்டேன்.

கலவரத்தின் ஆரம்பநாட்களில் எதுவுமே செய்யமுடியாமல் செயலற்ற நிலையில் நான் இருந்ததால் நான் என் மனத்துயரை வழக்கறிஞர் ஆக இருந்த என் மகள் தீபாவுடன் பகிர்ந்து கொண்டேன். இறுதியில் எல்லாவற்றையும் என் டயரியில் குறித்தும் வைத்தேன்.

எல்லாம் ஒரு செயலிழந்தவனின் நினைவுக்குறிப்புகள்.

1
கலவரம்
2002.
பிப்ரவரி 27.

மதியம் டி.ஜி.பி கே. சக்கரவர்த்தி என்னை அழைத்தார். “ஸ்ரீகுமார், பெரும் பிரச்சினை துவங்கிவிட்டது. சீருடை அணியும் அதிகாரம் இருக்கின்ற அனைவரையும் தயார் நிலையில் இருக்கச்சொல்லுங்கள். லீவ் அனைத்தும் கேன்சல் செய்யுங்கள். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்!”

அன்று காலையில்தான் கோத்ரா சம்பவம் நடந்திருந்தது. சபர்மதி எக்ஸ் பிரஸ் கோத்ரா ரெயில் நிலையத்தில் தீப்பிடித்தது. விபத்தில் 59 பேர் வெந்து மடிந்தனர். எனக்கு 11 பட்டாலியன்களின் பொறுப்பு இருந்தது. உடனடியாக எனக்குக் கீழே இருக்கின்ற காவல்படைக்கு ஆயத்தமா வதற்கான ஆணைகளை வழங்கினேன். சக்கரவர்த்தி நல்ல மனிதனாக இருந்தார். அதுதான் அவருடைய பிரச்சினையும். ஊழல் இல்லை, மதுப் பழக்கமில்லை. சராசரி போலீஸ்காரர்களின் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. ஆனால் நெருக்கடிகளை சமாளிக்க அவரால் முடியாது. அமைதி நிலவும் காலத்து டி.ஜி.பியாக இருக்கமட்டும்தான் அவரால் இயலும்.

மீண்டும் சக்கரவர்த்தி என்னை அழைத்தபோது கூறினார், “கோத்ரா சம்பவம் எதேச்சையாக நிகழ்ந்ததாயிருக்கலாம்; ஒரு வேளை பரஸ்பரம் மோதும்போது நிகழ்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், ஸ்ரீகுமார்... உங்களுடைய சென்ட்ரல் இன்டலி ஜென்ஸ் பியூரோவைச் சேர்ந்தவர்கள், இது முன்கூட்டி திட்டமிட்ட சதி என்று கருதி விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

நான் நீண்டகாலம் C.I.B. யில் பணியாற்றி இருந்ததனால் கிண்டலாய் “உங்களுடைய இன்டலிஜென்ஸ் ஆட்கள்” என்றுதான் அவர் கூறுவார்.

“சார் அப்படிச் செய்யக்கூடாது. நம்மைப்போன்ற போலீசார் நியாயமாகவும் திறந்த மனதுடனும் நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும்'' என்று நான் கூறினேன்.

தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அது சதித்திட்டம் இல்லை என்றும், இராம பக்தர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்புத் தகராறுதான் என்றும் அவர் சொன்னார். முகமதியர்கள் வலுவான செல்வாக்குள்ள பகுதி கோத்ரா.

எஸ்-6 ரெயில் பெட்டியில் பயணித்த நபர்கள் வரும் வழியில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் கீழிறங்கி வியாபாரிகளையும் மற்றவர்களையும் கொள்ளையடித்தனர் என்று தகவல். இராம பக்தர்களாக இருந்தாலும், இளைஞர் காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்தல் என்பது தானே நமது பண்பாடு? கோத்ராவில் வியாபாரிகளில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்களாக இருந்தனர். அதுவுமின்றி ஓரு முஸ்லீம் இளம் பெண்ணைக் கடத்திச்சென்றதாகவும் வதந்தி பரவியது. இவையெல்லாம் தான் கோத்ரா சம்பவத்துக்கு வழி வகுத்திருந்தன.

மாலை ஐந்து மணி அளவில் டில்லியில் இருந்து அப்போதைய துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அத்வானியின் அறிக்கை ஊடகங்களில் வெளியாயிற்று. “இந்த நிகழ்ச்சி பாகிஸ்தானின் சதித்திட்டம்.” இப்போது தெளிவாகிவிட்டது, உளவுத்துறைதான் இதன் பின்னால் என்று. அன்றைய ஓர் இணை இயக்குநராக இருந்த ராஜேந்திரகுமார் என்பவர்தான் இதன் பின்னணியாகச் செயல்பட்டவர் என்றும் டி.ஜி.பி கூறினார். நான் டி.ஜி.பி. யிடம் சொன்னேன். “சார் அடுத்த மீட்டிங்கிற்கு நீங்க போகும்போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நான் நேரடியாக ராஜேந்திரகுமாரிடம் இதைப்பற்றிக் கேட்கிறேன், எதன் அடிப்படையில் இப்படிச் சொன்னீர்கள் என்று. எங்கிருந்து தடயங்கள் கிடைத்தன. நம் ஒற்றர்கள் யாரேனும் தந்தார்களா என்று.” டி.ஜி.பி. உடனே இராஜேந்திரகுமாரை அழைத்துக் கேட்டார். இராஜேந்திரகுமார் அளித்த விளக்கங்கள் ‘பிரமாதமானவையாக’ இருந்தன. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஓரிரு தொலைபேசி அழைப்புகள் போயிருக்கிறதாம்.

எது உண்மை? கோத்ரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலும் சுற்றுவட்டாரங்களிலும் திருமணம் செய்துள்ளவர்கள். இவர்கள் ‘ஹாச்சி முஸ்லீம்கள்’. சுல்தான் மற்றும் நவாபுகளின் படைவீரர்களாக இருந்தவர்கள் இவர்கள். கேரளாவில் பழைய நாயர்பட்டாளம் என்று சொல்வோமில்லையா. நாயர்களும் மற்றவர்களும் கல்வி மற்றும் வேலை தேடி ஏனைய துறைகளுக்குள் புகுந்ததுபோல் இவர்களால் முடியவில்லை. காலனி ஆட்சி ஏற்பட்டு தொழில் இழந்தவர்களான பின்னர் இவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர், வழிப்பறிக்காரர்களாகவும், கிரிமினல்களாகவும் உருவாகினர். இதுதான் உண்மையான வரலாறு.

வி.எச்.பி.யினரும், சங்கபரிவாரைச் சேர்ந்தவர்களும் 27ஆம் தேதி மாலை கடையடைப்புக்கு அறைகூவல் விடுத்தனர். மறுநாள் செய்தித்தாள்களில் கலவரம் துவங்குவதன் அறிகுறிகள் முன்கூட்டியே செய்திகளாக வெளி வந்தன. மறுநாள் டி.ஜி.பியை நான் சந்தித்தபோது அவர் மிகவும் சோர்ந்து போயிருந்தார். அவர் சொன்னார் “சம்பவங்கள் மிகவும் பரிதாபகரமான நிலையை நோக்கிப் போகிறது. நான் எதுவும் செய்ய முடியாமலிருக்கிறேன். எனக்குக் கவலையாக இருக்கிறது.”

அவர் விளக்கிக் கூறினார். 27ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு சீப் செக்கரட்டரி ஜி.சுப்பாராவ், டி.ஜி.பி.சக்கரவர்த்தி, அகமதாபாத் சிட்டி கமிஷனர் (இவர் தற்போது குஜராத் காவல்துறை தலைவராக இருக்கிறார்) பி.சி. பாண்டே, அடிசனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன், முதல் அமைச்சரின் சிறப்பு செயலாளர் பி.சி.மிஸ்ரா (இப்போது இவர் மத்திய அமைச்சர் சரத்பவாரின் செயலாளர். இவர் ஆட்சித்தலைமைக்கு உயர்த்தப்பட்டதை கவனிக்கவும்) இவர்கள் அனை வரும் சேர்ந்து முதல் அமைச்சரின் முன்னிலையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் முதல்வர் கூறினார். “இந்து மக்களைப் பொறுத்தமட்டில் மிகவும் துரதிருஷ்டவசமான, வேதனை நிறைந்த விஷயங்கள்தான் நடந்து இருப்பவை. சாதாரண நிலையில் நீங்கள், ஒரு இனக் கலவரம் வெடிக்கும் போது இந்துக்களையும், முஸ்லீம்களையும் சரிசமமாகக் கைது செய்வீர்கள். அந்த நடைமுறை இங்கு எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது. மூன்று நாட்களுக்கு இங்கு இந்துக்களின் பழிவாங்கும் நெருப்பு பொங்கி எழும். யாரும் அதைக் கண்டுகொள்ளவும் கூடாது, அதில் தலையிடவும்கூடாது. இது என் பிரத்தியேகமான உத்தரவு.”

அதற்கு யாரும் பதில் கூறவில்லை “சார், கலவரம் நடைபெற்றால் அதில் தலையிடாமல் இருக்க முடியாது. எங்களுக்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது!” என்று ஒருவராவது கூறியிருக்கலாம். முதலமைச்சரின் முகத்தை நோக்கி மறுத்துக்கூற சிலருக்குத் தயக்கம் இருந்திருக்கலாம். இருப்பினும் வெளியில் வந்தபிறகு தங்களின் கடமையை, நாணயமாக அவர்கள் மேற்கொண்டிருக்கவேண்டும். அதையும் அவர்கள் செய்யவில்லை.

நகரபோலீஸ் கமிஷனர் பி.சி பாண்டே 27ஆம் தேதி தனக்குக் கீழே உள்ள அதிகாரிகளை அழைத்து இனக் கலவரத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இனக் கலவரங்களை எதிர்கொள்வதற்கான கட்டளைகளையும் அவர் அளித்திருந்தார். அதற்குப் பிறகுதான் முதலமைச்சரின் தலைமையிலான மேற்குறிப்பிட்ட கூட்டம் நடைபெற்றது.

காவல்துறையினரால் வகுப்புவாத மோதல்களை மிகத் துரிதமாகவும் முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலும் எதிர்கொள்ளமுடியும். அந்த அளவிற்கு திறன் வாய்ந்த வகையில் சட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. ஒரு சர்ஜன் எந்த அளவுக்கு நுணுக்கத்துடன் அறுவை சிகிச்சையை செய்து முடிக்கிறாரோ அதுபோன்றுதான் காவல்துறையினர் கலவரங்களை அடக்குவதும். ஒரு கணபதி ஹோமம் எப்படி நடத்துவீர்கள் என்று பூஜாரியிடம் கேட்டால் ஹோமத்தின் துவக்கம் முதல் இறுதிவரை செய்ய வேண்டியதை வரையறுத்துக் கூறிவிடுவார். அவ்வளவு துல்லியமானதுதான் கலவரத்தை அடக்கும் காவல்துறையின் திட்டமும்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டாம் என்று இவர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். மதியம் மோதலை ஒடுக்குவதற்குத் தேவையான ஆணைகளை அளித்திருந்த பி.சி.பாண்டே, இந்தக் கூட்டத்திற்குபின் தனது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இவ்வாறாக முதலமைச்சர் நரேந்திரமோடியின் தலைமையில் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்படுத்தியவைதான் குஜராத்தில் அரங்கேறியவை. இந்துக்கள் அக்கிரமச் செயலில் ஈடுபடுவார்கள், அவர்களுக்கு எதிராக நீங்கள் யாரும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற உத்தரவு கொடுத்தபோதே 120-பியின் படி  (குற்றம் புரிவதற்கான இரகசிய ஆலோசனை) நரேந்திரமோடி கிரிமினல் குற்றம் புரிந்தவர் ஆகிறார்.

அன்றைய இரவே அதிகாரிகள் அந்த இரகசிய ஆலோசனையை நடைமுறைபடுத்தத் துவங்கினர். ‘சர்குலர் ஆப் கம்யூனல் பீஸ்’ என்ற சிற்றேட்டில் சொல்லியிருக்கும் விஷயங்களை முறியடிக்கும் வேலையைத்தான் அதிகாரிகள் செய்தனர். தவிர, 1997 ஆம் ஆண்டில் பொறுப்பிலிருந்த கேரளாவைச் சேர்ந்தவரான டி.ஜி.பி. ஜோசப் என்பவர் பிரத்தியேகமாக ஒரு சிற்றேடு உருவாக்கியிருந்தார். ‘ஸ்ட்ராடஜிடு கன்ட்ரோல் அண்ட் கன்டெயின் கம்யூனல் வயலன்ஸ்.’ வகுப்புக் கலவரம் உருவாகும்போது என்னவெல்லாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிலும் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார். ஒரு சிறுவனுக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுப்பது போல் இலக்கமிட்டு அனைத்தும் அதில் அவர் சொல்லி இருக்கிறார். அதையும் இவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. அவ்வாறு இவர்களாகவே மனப்பூர்வமாக கலவரத்துக்கு சந்தர்ப்பம் உருவாக்கினர்.

அன்றைய இரவே அகமதாபாத் ரெயில் நிலையத்தில் இரண்டு முஸ்லீம்களை விஷமிகள் வெட்டிக் கொன்றனர். உத்திரபிரதேசத்தில் இருந்தோ பீகாரில் இருந்தோ வந்தவர்கள் அவர்கள். கலவரத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். முகத்தில் தாடிவைத்திருந்தனர் என்ற ஒரே காரணத்தினால்தான் நிரபராதிகளான அவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தச் செயலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் சட்டப்படி எடுக்கப்படவில்லை.

அன்று பாண்டேவுடன் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு அதிகாரி வேறொரு விஷயத்தை என்னிடம் கூறி இருந்தார். முதலமைச்சர் அக் கூட்டத்தின்போது இன்னொரு விஷயத்தையும் அழுத்தமாகக் கூறினாராம். “கோத்ராவில் இறந்த 59 பேருடைய பிணங்களையும் எரிந்துபோன ரயில்பெட்டியையும் உள்ளது உள்ள படியே கொண்டுவந்து குஜராத்திலுள்ள முக்கிய நகரங்களில் காட்சிக்கு வைக்க வேண்டும்.”

சீண்டினால் வகுப்பு மோதல் வெடிக்கும் அழுத்தமான சூழ்நிலையிலுள்ள இடங்களில் இதைக் கண் காட்சி வைத்து அரசியல் இலாபம் பெறத் திட்டமிட்ட அந்த மனிதனின் மனோதத்துவத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு அரசாங்கம் இப்படி யோசிக்கிறது! வேறெங்கும் இப்படி நடந்திருக்காது, பிரிட்டிஷ் இந்தியாவில் கூட!

ஆனால் முதுகெலும்புள்ள ஒரு பெண் அதிகாரியினால், அவர்களின் திட்டம் நடக்காமல்போனது. ஜெயந்தி ரவி என்பவர்தான் அன்றைய கோத்ரா கலெக்டராக இருந்தவர். “அது நடக்காது” என்று அவர் கூறினார்.

நமது சர்வீஸ் சட்டப்படி மாவட்ட ஆட்சியாளருக்கும், மாவட்ட போலீஸ் சூப்ரண்டிற்கும் மறுக்க முடியாத அதிகாரங்கள் இருக்கின்றன.

பல்வேறு விஷயங்களிலும் இவர்களைத் தாண்டிச் செல்ல (ஓவர் ரூல் செய்ய) மேலிடத்தில் இருப்பவர்களால் முடியாது. அதற்கான அதிகார உரிமை அவர்களுக்கு இல்லை. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பான ஒரு பக்கம் இது. இவர்களுக்கு வழங்கியுள்ள பல அதிகாரங்களை இவர்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளிக்கவில்லை.  “இந்த உடல்களை தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு நிலையின் அடிப்படையில் காட்சிப் பொருளாக வைக்கக்கூடாது” என்று ஜெயந்தி ரவி முடிவு செய்தால் அதை உள்துறை செயலாளர் கூட எதிர்க்க முடியாது. நடந்ததும் அதுதான். முதலமைச்சர் மற்றும் அவர் கூட்டாளிகளின் வாய்மொழி உத்தரவுகளுக்கு ஜெயந்தி ரவி கீழ்ப்படியவில்லை. ரயில்பெட்டியை எடுத்துச் செல்லக் கூடாது என்று ஜெயந்தி ரவி எழுதிக்கொடுத்தார். அதனால் மோடியின் பல்வேறு திட்டமிட்ட சதிச்செயல்களும் நடைபெறவில்லை. ஜெயந்தி ரவி கறாராக இல்லாமல் போயிருந்தால் குஜராத் மேலும் எரிந்து போயிருக்கும். அப்படி வீரத்துடன் போராடும் பெண்மணியாக இருந்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயந்தி. கோத்ரா தீ வைப்பு பற்றி ஜெயந்தி கொடுத்த அறிக்கை, அது ஒரு எதேச்சையான சம்பவம்தான் என்று சொல்கிறது. கரசேவகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு தான் அந்த நிகழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் விளக்கமாக இருக்கின்றன.

ரயில்பெட்டியோடு விட்டுக் கொடுக்காததால் பிணங்களை மட்டும் வாகனத்தில் கொண்டு வந்து இந்தியாவிலேயே வகுப்புக் கலவரத்துக்குச் சாத்தியக்கூறு மிகுந்த பகுதியான அகமதாபாத்தின் தெருக்கள் வழியாக காட்சிப்பொருளாக பிணங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள்.

கடவுளுக்கும் மனிதனுக்கும் பொறுக்காத செயலாக இருந்தது அது. கொடூரக் குற்றவாளிகள் மட்டும் செய்யக்கூடியது. இறந்துபோனவர்களில் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் பதினாறு அல்லது பதினேழு பேர் மட்டுமே. மீதி, நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான உடல்கள் அடையாளம் தெரி யாதவை. அடையாளம் தெரியாத உடல்களை எப்படி இந்துக்களுடையது என்ற முத்திரையுடன் ஊர்வலத்தில் கொண்டுவரமுடியும்? பீகாரியாகவோ மலையாளியாகவோகூட இருக்கலாம். நெய்யாற்றின்கரையில் இறந்தவனை எடுத்துவந்து கண்ணூரில் ஊர்வலம் நடத்தினால் எப்படியிருக்கும்? முழு அடைப்பு தினத்தில்தான் இந்தப் பேரணி நடந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் தருணத்தில் காவல்துறைத் தலைவர் அந்தக் கும்பலிடம் என்ன கூறி இருக்க வேண்டும்? பிரேதங்களை முதலில் பிணக்கிடங்கில் வைக்கவேண்டும். அடையாளம் கண்டுகொண்ட பிறகு, காவல்துறை நடவடிக்கைகள் முழுக்க முடித்துவிட்டு சூழ்நிலை அமைதியான பின் ஒப்படைக்கிறோம் என்றுதானே?

நடந்தது அதுவல்ல. 1969ஆம் ஆண்டும் 1984 ஆம் ஆண்டும் வகுப்புக்கலவரம் நடந்திருக்கிறது இங்கு. வரலாற்றிலேயே சுதந்திரத்திற்குப் பின் வகுப்புக் கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கின்ற அகமதாபாத்தில் இந்தப் பேரணியை அவர்கள் நடத்தியது எதற்காக? அதன் நோக்கம் என்ன?  இவர்கள்தானா இந்தியாவை நேசிப்பவர்கள்?

2
பொலிஸ் ஹமாரே சாத்

‘’யே அந்தர் கா பாத் ஹெ, பொலிஸ் ஹமாரே சாத்ஹெ.” மறுநாள் அகமதாபாத் நகரத்தில் வன்முறையாளர்களின் கண்மூடித்தனமான அட்டகாசத்தின் இடையில் இந்தக் கோஷம் முழங்கிக் கொண்டிருந்தது.

நான் அந்த நகரத்தினூடே போலிஸ் ஜீப்பில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். எங்கு பார்த்தாலும் ஜனத்திரள் சாலைகளிலுள்ள கடைகளை தீ வைத்துக் கொளுத்திக் கொண்டிருந்தது. காவல்துறையினர் அதைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். நான் பல்வேறு இடங்களில் ஜீப்பை நிறுத்தி போலீசாரிடம் கேட்டேன், “வன்முறையை வேடிக்கை பார்த்துக் கொண்டா நிற்கிறீர்கள்?” அவர்கள் சொன்னார்கள், ‘சார், எங்களுக்கு ஆர்டர் கிடைக்கவில்லை.’

காவல்துறையினருக்கு மேலிடத்தில் இருந்து ஆர்டர் கிடைக்கவில்லை. இந்தத் தகவல் வன்முறை வெறியர்களுக்கும் தெரிந்துவிட்டிருந்தது. உடனே அவர்கள் கோஷம் எழுப்பத் துவங்கிவிட்டிருந்தனர். “யே அந்தர் கா பாத்ஹெ. பொலிஸ் ஹமாரே சாத் ஹெ” என்று. காவலர்களும் நாமும் ஒன்றுதான் என்பது இதன் அர்த்தம். இது அனைத்து பத்திரிகைகளிலும், சானல்களிலும் வந்த விஷயம் தான்.

நகரத்தில் உடல்களை காட்சிப் பொருட்களாக வைத்தபோது அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பச்சை பச்சையாய் வார்த்தைகளை முழக்கமிட்டனர். உள்ளூர்ப் பத்திரிகைகளும் இங்குள்ள கேபிள் டி.வி.காரர்களும் நடைபெறும் அநாகரிகமான அராஜகச் செயலை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர் - இந்த வன்முறையில் அவர்களும் பங்கு பெற்றார்கள்.

அன்று ஒரு மணி வரை ஊரடங்குச் சட்டம் பிரகடனப் படுத்துவதற்கு கமிஷனர் பி.சி.பாண்டே தயாராக இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை இங்கு உருவாகும் என்று காவல்துறைக்கு முன்கூட்டித் தெரிந்து, இரவுச் சட்டம் பிரகடனப் படுத்த வேண்டும் என்பது காவல்துறையின் சட்ட நூல்கள் அனைத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. ஜாம்நகர், ராம்கோட், பரோடா, சூரத் போன்ற நகரங்களில் அன்றைய தினம் காலையில் இருந்தே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நகரங்களெல்லாம் இந்த அளவு வகுப்புக் கலவரத்துக்கான சாத்தியக் கூறுகள் கொண்டவையல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்தக் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கு மேலானவர்கள் கொல்லப்பட்டதில், அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் அகமதாபாத்தில்தான்.

வகுப்புக் கலவரங்கள் ஏற்படும் போது கைது செய்யப்படுபவர்களின் பட்டியல் காவல் துறையினரின் கையில் இருக்கும். ஆனால் சங்க பரிவாரின் ஒரு தலைவர்கூட கைது செய்யப்படவில்லை.

பொழுது சாய்ந்த போது முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்புகள் வன்முறையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சீரழிவதை நான் நேரில் பார்த்தேன். பல இடங்களிலும் பயந்து போன மக்கள் வன்முறையாளர்களின் வருகையைக் கண்டு வீட்டுக்குள் புகுந்து திகிலடைந்து கதவுகளை இழுத்து மூடி உள்ளே சத்தம் போடாமல் இருப்பார்கள். அந்த வீடுகளின் வாசல் கதவை வன்முறையாளர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் வைத்து வெடிக்கச் செய்வார்கள். அந்த சிலிண்டர் வெடிப்பினால் அந்த வீட்டுக்குள்ளே இருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக உயிர் இழப்பார்கள். இந்த அளவுக்குக் கொடுமையான கொலைகள் ஒரு வேளை செர்பியாவிலோ போஸ்னியாவிலோ நிகழ்ந்து இருக்கலாம். ஆனால் இங்கு இறந்தவர் எவருமே கோத்ரா நிகழ்ச்சியில் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அன்றைய போலிஸ் கமிஷனர் பி.சி. பாண்டே பிபிசி நிருபர்களிடம், “நாங்க செய்ய வேண்டியதை அனைத்தும் செய்தாயிற்று. காவலர்களும் இந்தச் சமூகத்தின் ஓர் அங்கம்தானே?” என்று கூறினார். அரசாங்கச் சம்பளம் பெற்று இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் கலவரம் நடக்கும்போது எப்படி சமூகத்தின் பாகம் ஆவார்கள்? கலவரத்தில் பங்கு பெற விரும்புகிறவர்கள் வேலையை ராஜிநாமா செய்து விட்டு வி.எச்.பி.யில் சேர்ந்துவிடுங்கள் என்று எனக்குக் கீழே பணிபுரிபவர்களிடம் சொன்னேன். இரண்டும் சேர்ந்து நடக்காது.

அன்று மாலையில் இருந்து என் நிலைமை மோசமானது. டென்ஷன், எதையும் செய்ய முடியவில்லையே என்ற சங்கடம். எனது குணம் அப்படி. அதுதான் அரசுடனான எனது மோதலின் துவக்கம். நான் மகளிடம் கூறினேன், ‘இத்தனை மனிதர்களைக் கொலை செய்கிறார்கள், நான் காவல்துறை சீருடை அணிந்து, அதன் மீது நட்சத்திரங்களை வரிசையாகக் குத்திவைத்து, கூடுதல் டி.ஜி.பி. என்று பேர்சொல்லி நடமாடிக்கொண்டிருக்கிறேன். என்ன கஷ்டம் இது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே.’

எனக்கோ உறக்கமும் வரவில்லை. இந்த நிலையில்தான் நானும் என் மகளும் சேர்ந்து இதையெல்லாம் எழுதிவைப்பது என்ற முடிவை எடுத்தோம். தேதியைக் குறிப்பிட்டு அந்த நாட்களில் நாங்கள் பார்த்த சம்பவங்களையும் டி.வி.யில் கண்ட சம்பவங்களையும் எழுதி வைக்கத் தொடங்கினோம். நான் என்னுடைய டயரியில் அவற்றையெல்லாம் குறித்து வைத்தேன். மகள் தீபா அந்தக் குறிப்புகளை விரிவாக எழுதி ஜனாதிபதி உட்பட நாற்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணனின் செயலாளர் கேரளாவைச் சேர்ந்தவர். அவரை என் மகள் தொலைபேசி மூலம் அழைத்து ஜனாதிபதிக்கு நாங்கள் அனுப்பிய தகவல் கிடைத்ததாக உறுதிபடுத்திக் கொண்டாள்.

3
தலைக்கு மேல் பணம்

“யார் இங்கே உளவுத்துறை தலைவர்? இங்கு நடைபெற்ற விஷயங்களை ஏன் அவர்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளவில்லை?” குஜராத்தைப் பார்வையிட வந்த பிரதமர் வாஜ்பாய் கேட்டார். நகரத்தில் கலவரக்காட்சிகளைப் பார்த்த பிறகு ரிவ்யூ கூட்டத்தில் பிரதமர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி வாஜ்பாய் அகமதாபாத்துக்கு வந்தார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுவாகவே அப்படித்தானே, இறுதியில் எல்லாமே இன்டலிஜென்ஸின் தவறுதான் என்று சொல்லித் தப்பித்துவிடுவது. கூடுதல் ஞி.நி. றி யாக ணி.சி ரெய்கா என்பவர்தான் அப்போதைய பொறுப்பில் இருந்தவர். அவரோ உளவுத்துறையில் போதிய அனுபவம் இல்லாதவராக இருந்தார். இறுதியில் அனைவருமாகச் சேர்ந்து நடைபெற்ற துரதிஷ்ட சம்பவங்களின் முழுப் பொறுப்பையும் ரெய்காவின் தோளில் சுமத்தினர்.

ஏப்ரல் 8. அன்றைய தினம் இன்டலிஜென்ஸ் தலைவராக என்னை நியமனம் செய்தார்கள். டி.ஜி.பி என்னை அழைத்துச் சொன்னார். “பிரதமர் வாஜ்பாய் உளவுத்துறை அனுபவமுள்ள ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருப்பதால் உங்களிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கிறோம். உங்களுக்கு உளவுத்துறையில் பதிமூன்றாண்டுகள் அனுபவம் இருக்கிறது.”

“சார்! நான் முழுக்க சோர்வடைந்து தளர்ந்து போயிருக்கிறேன். மானசீகமான அழுத்தத்திலிருக்கிறேன். நான் உண்மைகளை மட்டுமே அறிக்கையாக அளிப்பேன். ஆட்சியில் இருப்போரும் விசுவ இந்து பரிஷத்காரர்களும் இந்தக் கலவரத்தின் பின்னணியில் செயல்பட்டார்கள் என்பதையும், முஸ்லீம்களின் எப்.ஐ.ஆர்கள் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதையும்; அவர்களுக்கெதிரான எப்.ஐ.ஆர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் அவர்கள் குற்றங்களைப் பற்றி கொடுத்த புகார்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதையும் சங்கபரிவார்தான் இதற்குப் பின்னால் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக அளிப்பேன்” என்று கூறினேன்.

டி.ஜி.பி ஒரு நிமிடம் எதையும் பேசவில்லை. நான் மீண்டும் சொன்னேன் “சார்! எனக்கு விருப்பமில்லை.”

சங்கபரிவாருக்கு நான் ஆகாதவன் என்று எனக்குத் தெரியும். கச்சி என்ற மாவட்டத்தில் நான் டி.எஸ்.பி யாக இருந்தபோது 1986இல் ஏற்பட்ட ஒரு வகுப்புக் கலவரத்தை நான் வன்மையாக அடக்கினேன். அதன் பலனாக என் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது, அங்குள்ள வி.எச்.பி காரர்கள் தொடுத்ததுதான் இவ்வழக்கு. கச்சின் தலைமை இடமான புஜ் என்ற இடத்தில் நிகழ்ந்த வகுப்புக் கலவரத்தை ஒடுக்க சங்க பரிவார் தலைவர்களைக் கைது செய்து இருந்தேன். அதனால் இரண்டு மணி நேரத்திற்குள் கலவரத்தை அடக்க என்னால் முடிந்தது. அங்குள்ள வி.எச்.பியின் தலைவர்கள் அனைவரும் ஊரறிந்த கிரிமினல்கள். வி.எச்.பியின் முக்கியஸ்தர் ஒருவர் பிரபல வியாபாரி. அவரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போது சீறினார், “என்னையெல்லாம் கைது செய்ய உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது?”

நான் சொன்னேன், “எங்களிடம் உள்ள பெயர்ப் பட்டியலில் உங்க பேரும் இருக்கிறது. நீங்களும் இந்தத் தாடிக்காரர்களைப் போலத்தான்”.

அதற்குப் பிறகு அவர் மௌனமானார். ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார், “முஸ்லிம்களுடன் என்னை லாக்அப்பில் வைக்காதீர்கள்” என்று. நான் சொன்னேன், “லாக்அப் புனிதமானது. அதில் அனைவரும் சமம்”.

உங்களுக்குப் பாடம் கற்பிப்பேன் என்று அலறினார் அவர். கற்பித்துக் கொள்ளுமாறு நானும் கூறினேன். அவர்கள் என் மீது வழக்கு போட்டார்கள். நான் இதை இப்போது கூறும்போதும் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அரசாங்கம்தான் எனக்காக வாதாடியது. இந்த சம்பவத்துடன் சங்கபரிவார்காரர்களுக்கு என்னை சுத்தமாகப் பிடிக்காமல் போயிற்று. அதனால்தான் டி.ஜி.பியிடம் அப்படிக் கூறினேன். ஆனால் டி.ஜி.பி. ஒப்புக்கொள்ளவில்லை.

ஏப்ரல் 11 ஆம் தேதி முதலமைச்சர் நரேந்திரமோடி என்னை நேரில் அழைத்தார். மோடி சொன்னார் “நமது உளவுத்துறையை உடைத்து மாற்றி புதிய ஒன்றாய் உருவாக்க வேண்டும். பணம் ஒரு பிரச்சினையில்லை. ஒரு கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.” 

“சார்! எனக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டாம். அதை வைத்து எதுவும் ஆகப் போவதில்லை” என்றேன் நான்.

“ஏன் அப்படி?” என்று கேட்டார் மோடி.

“சார், பணத்தைக் கொடுத்து இன்டலிஜென்சை வாங்க முடியாது. ஒரு இளம் பெண்ணை நேசிப்பது போலதான் ஓர் இன்டலிஜென்ஸ் அதிகாரி அணுக வேண்டியுள்ளது. மூலத்தைக் கண்டடைந்து வளர்க்க வேண்டும். அதற்கேயான காலம் அதற்குத் தேவை.”

“ஆகட்டும்!” என்றார் மோடி.

ஆனால் அதற்கிடையில், பணத்தை வாரி இறைத்து சில வேலைகளை அரசாங்கம் நேரடியாகச் செயல்படுத்துவதாக எனக்குத் தகவல்கள் கிடைத்தன. பிரபல நடனக் கலைஞரும், மனித உரிமைகளுக்காகப் பாடுபடுபவருமான மல்லிகா சாரா பாய், நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது ஒரு வழக்குத் தொடுத்து இருந்தார். அவருடைய வழக்கறிஞருக்குப் பத்து லட்சம் ரூபாய் வாக்குறுதி அளித்து அந்த வழக்கை அரசாங்கம் தோற்கடித்த செய்தியும் எனக்குக் கிடைத்தது.

மறுநாளும் முதலமைச்சர் என்னை அழைத்தார். தலைமைச் செயலர் சுப்பாராவ் மற்றும் டி.ஜி.பி. சக்கரவர்த்தியும் அங்கு இருந்தனர். என்னைப் பார்த்ததும் முதலமைச்சர் கூறினார்,  “சங்கர் சிங் வகேலாவின் தொலைபேசியை டேப் செய்யவேண்டும்.”

குஜராத் முன்னாள் முதலமைச்சரும், அப்போதைய எதிர்கட்சித் தலைவராகவும் இருப்பவர் வகேலா. நான் பட்டென்று சொன்னேன், “சார்! அது முடியாது!” “ஏன் முடியாது?” என்று கேட்டார் மோடி.

“அவர் எதிர்க் கட்சித் தலைவரே தவிர குற்றவாளியோ ஒற்றரோ அல்ல” என்றேன்.
உடனே உள்துறைச் செயலர், “அப்படியானால் நாங்கள் ஆர்டர் கொடுத்தால்?”

“உத்தரவு தந்தால் அதற்கு நான் கட்டுப்படுவேன்” என்றேன்.
“ஸ்ரீகுமார்! நீங்கள் ஒரு திட்ட முன் மொழிதலை (Proposal) அனுப்புங்கள்” என்றார் தலைமைச் செயலர்.

எனக்குள் எரிச்சலும் சிரிப்பும் தான் வந்தன.

“சார்! நான் எதற்காக புரப்போசல் அனுப்ப வேண்டும்? எனக்கும் திரு. சங்கர் சிங் வகேலாவுக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லையே?” என்றேன்.

“ஓகோ.... அப்படியா?” என்றார் தலைமைச் செயலர். “ஆமாம் சார்! சார், நீங்கள் உங்கள் கைப்பட எழுதி ஓர் ஆர்டர் என்னிடம் தந்தால் எப் பேர்ப்பட்டவர்களின் போனாக இருந்தாலும் நான் டேப் செய்கிறேன் சார்!” என்றேன். எனது வார்த்தைகளில் நான் அறியாமலே கிண்டல் தொனித்தது. இடையில் புகுந்தார் மோடி. அவருக்கு வரும் அபாயத்தை மோப்பம் பிடித்துவிட்டார். “நோ. டோன்ட்டு இட்” என்றார்.

உளவுத்துறையினர் ஆட்சியாளர்களுக்காக அவர்கள் ஆணையிட்ட வேலைகளைச் செய்ய வேண்டியவர்கள் அல்ல. நாட்டுக்கு நாசம் விளைவிக்கும் அபாயகரமான செயல்களை முன் கூட்டித்தெரிந்து கொண்டு அந்தச் செயல்களை முறியடிப்பதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டியவர்கள். தொலைபேசிகள் டேப் செய்வது அதிகாரபூர்வமாத்தான் இருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் முடியாது. டேப் செய்வதற்காக திட்ட முன் மொழிதல் அனுப்புவதற்கான அதிகாரம் கூடுதல் டி.ஜி.பி.க்கு மட்டும்தான். அவர் தனக்குக் கீழே பணியாற்றும் உத்தியோகஸ்தர்களிடம் இருந்து பெறப்படும் அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகுதான் மயக்க மருந்துகள் கடத்தல், ஒற்றர் செயல்பாடுகள், ஏனைய குற்றச் செயல்கள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவர்களின் தொலை பேசிகளை பதிவு செய்வதற்கு ஆணை வழங்குவார். அந்த ஆணையின் கோப்பு உள்துறை செயலரிடம் அனுப்பி வைக்கப்படும். இறுதியில் உள்துறை செயலர்தான் அனுமதி வழங்குவார்.

இதற்காக தொலைபேசித்துறை ஊழியர்கள் ஒரு பாரலல் லைன் இழுத்துக் கொடுப்பார்கள். அந்த லைனைப் பயன்படுத்தி ஒட்டுக் கேட்க வேண்டியவருடையது மட்டுமின்றி, அருகாமையில் இருக்கும் இருபத்தி ஐந்து பேர்களுடைய தொலை பேசிகளையும் டேப் செய்வார்கள். பாரலல் லைன் பொதுவாக யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். அப்படிக் கண்டுபிடித்தாலும் அத்துடன் சேர்ந்துள்ள இருபத்தைந்து பேருடைய தொலைபேசி டேப் செய்வது யாருக்கும் தெரியப் போவதில்லை. டெலிகாம் ஊழியர்களுக்கு பெரிய தொகையைக் கொடுத்துத்தான் இதைச் செய்கிறார்கள்.

இதை ‘அப்செட் ஹிஸ் பட்ஜெட்’ என்று நாங்கள் கூறுவோம். தனக்குக் கிடைக்கின்ற சம்பளத்தை வைத்து உயிர் வாழ்கின்ற ஊழியருக்கு,  கண்ணைப் பறிக்கும் பணத்தைக் கொடுத்து அவர்களின் குடும்ப பட்ஜெட்டையே தலைகீழாக்கிவிடுவது. மாதம் 5000 ரூபாய் உங்கள் மாதச் சம்பளம் என்றால் நாங்களும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் அளிப்போம். ஆறுமாதம் இப்படியே நடந்தால் நீங்கள் ஊதாரியாகி விடுவீர்கள். பிறகு அந்தத் தொகை இல்லாமல் உங்களால் வாழ்க்கை நடத்த முடியாது. பணம் கிடைப்பதால் அவர்கள் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல மாட்டார்கள். சொன்னாலும் நிரூபிக்க முடியாது.

தொலைபேசி டேப் செய்வதன் சட்டமுறைகளை மோடிக்குச் சொல்லிப் புரிய வைப்பதற்கு பதிலாக அந்த அதிகாரிகள் பேடித்தனமாக உட்கார்ந்திருந்தார்கள்.

எது எப்படியோ மூன்றாம் நாளிலிருந்து சங்க பரிவாரின் பங்களிப்பைப் பற்றிய அறிக்கைகளை நான் கொடுக்கத் தொடங்கினேன். 24ஆம் தேதி. வி.எச்.பியினர் சட்டம் ஒழுங்கை எவ்வாறு சீர்குலைக்கிறார்கள் என்றும், அதற்கு எதிராக எந்த எந்த விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும், தெள்ளத் தெளிவாக நான் அறிக்கை கொடுத்தேன். அறிக்கைகள் மேலிடத்துக்குச் சென்றடைந்தவுடனே அதன் அதிர்வுகளும் அங்கிருந்து ஏற்பட்டது. தலைமைச் செயலரும், கூடுதல் தலைமைச்செயலரும் என்னை நேரில் அழைத்து நம்பமுடியாமல் கேட்டார்கள், “நீங்க இந்தமாதிரிதான் அறிக்கைகள் அனுப்பு வீர்களா?” அவர்கள் இருவரிடமும் நான் சொன்னேன், “சார்! அடிப்படை உண்மை (Ground Reality) என்ன என்பதை அறிக்கையாகக் கொடுப்பது தான் எனது பணி. நான் குஜராத் அரசாங்கத்தின் ஒற்றர் தலைவன். பூமிக்குள்ளே நடப்பவை முதற்கொண்டு முன்கூட்டித் தெரியப்படுத்தி எச்சரிப்பதுடன் முன் நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசாங்கத்துக்கு உதவுவது தான் எனது கடமை.”

நான் செய்வது அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு எதிரான காரியங்கள் என்றார்கள் அவர்கள். அரசாங்கத்தின் விருப்பங்கள் எனக்குத் தேவையில்லை என்று நானும் கூறினேன். நான் உறுதி மொழி எடுத்து பணியில் சேர்ந்தது அரசியலமைப்புச்சட்டத்தின் மீது ஆணையிட்டுத்தான். நான் அரசியலமைப்பின் காவலாளியே தவிர விசுவ இந்து பரிஷத்தின் காவலன் அல்ல.

அதன் பிறகு முதல்வர் மோடி என்னை அழைத்தார். “நீங்களா இந்த அறிக்கைகளை அனுப்புகிறீர்கள்?”

நான், “சார்! கிரவுண்டு ரியாலிட்டி அதுதான்” என்று பதிலளித்தேன்.

“இல்லை. அப்படி இல்லை. உங்களுக்குத் தெரியாது” என்றார்.

“இல்லை சார்! அடிமட்ட சூழ்நிலை அவ்வாறுதான்.”

“உங்களுக்குத் தெரியுமா? ஒரு இந்து வீட்டில் ரெய்ட் நடத்தினால் ரெய்ட் நடத்துபவர்களுக்கு எந்த வித இடையூறும் குழப்பமும் இல்லாமல் ரெய்டு நடத்தமுடியும்” என்றார் மோடி.

“அது எப்படிப்பட்ட இந்து என்பதைப் பொறுத்து இருக்கும். குண்டர்கள் வீட்டுக்குச் சென்றால் கண்டிப்பாகக் குழப்பம் ஏற்படும்” என்றேன்.

“இல்லை ஒரு போதும் ஒரு இந்து வீட்டில் அப்படி நடக்காது. இந்துக்கள் வீட்டில் இருந்து நமக்கு ஆயுதங்கள் கிடைக்குமா?” என்று கேட்டார் மோடி.

“கிடைக்கலாம். அது எந்த இந்து என்பதைப் பொறுத்தது! உங்கள் வீட்டில் கிடைக்காமல் இருக்கலாம்; என் வீட்டிலும் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு கிரிமினலின் வீட்டில் கண்டிப்பாகக் கிடைக்கலாம்” என்றேன்

“இல்லை! அங்கு அவர்களின் பூஜைக்கான பொருட்கள்தான் இருக்கும்!” என்ற முதல்வர் தொடர்ந்து, “நீங்க இப்படி எல்லாம் எழுத வேண்டிய அவசியம் என்ன?  இதை எல்லாம் தலைமைச் செயலரிடம் நேரில் சொன்னால் போதாதா?”

“காவலர் கையேடு (Police Manual) க்குக் கட்டுப்பட்டு பீரியாடிக்கலாக ரிப்போர்ட் அனுப்புவதுதான் மரபு.”

அதிருப்தியுடன் தலைமைச் செயலரை சந்தித்துச் செல்லும்படி என்னிடம் கூறி அனுப்பினார் மோடி.

தலைமைச் செயலர் சுப்பாராவைப் பார்ப்பதற்காக நான் போனேன். ஓர் அதிகாரி என்ற நிலையில் மட்டுமின்றி ஒரு மனித ஜீவி என்ற நிலையிலும் தலைமைச் செயலரிடம் பரிதாபம் தோன்றத்தான் வேண்டும். இவ்வளவு கேவலமாக தரம் தாழ்ந்து போக வேண்டுமா என்று எனக்குத் தோன்றியது.

“குமார். நீங்க இப்படித்தான் அறிக்கை அனுப்புவீங்களா?” தலைமைச்செயலர் கேட்டார்.

“அது என் டூட்டி சார்!” என்றேன்.

“இதை எல்லாம் நீங்க இங்கே வந்து நேரில் சொன்னால் போதும்” என்றார் அவர்.

“சார்! அது ஓர் உத்தரவாக எழுதித் தந்துவிடுங்கள். நாளை நீங்களும் போய்விடுவீர்கள்; நானும் போய்விடுவேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வுக் கூட்டம் வரும். அப்போது அவர்கள் திரு.ஸ்ரீகுமார் பீரியாடிக்கலாக ரிப்போர்ட் அனுப்பவில்லை என்று எழுதி வைப்பார்கள். அப்போது உங்களாலும் என்னைக் காப்பாற்ற முடியாது. அதனால் வாய் மொழியாக இங்கு வந்து சொன்னால் போதும், எதையும் எழுதிக் கோப்பில் சேர்க்க வேண்டாம் என்று ஒரே ஒரு வரியில் நீங்கள் எனக்கு எழுதிக் கொடுத்தால் போதும் சார்... Only verbal briefing is enough… no need sending a report என்று ஒரு சென்டன்ஸ் உங்கள் கையால் எழுதித் தந்தால் போதும் சார்!”

அதன்பின் அவர் பேசவில்லை.

அப்படி ஓர் உத்தரவையும் அவர் அனுப்பவில்லை.

4
ஹிமாம்சு பட்

நரோதா பாட்யா.

நூற்றுக்கு மேற்பட்டவர்களை வெட்டிக் கூறு போட்டுக் கிணற்றில் வீசி, தீ வைத்து எரித்தது அகமதாபாத் நகரத்தின் இந்த இடத்தில்தான். அங்கு கணக்கற்ற பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். அனைத்தையும் இழந்த திரளான மக்கள் கூட்டம் கால்நடைத் தொழுவங்களுக்கு நிகரான கேம்புகளில் தங்க வைக்கப்பட்டனர். வாஜ்பாய் ஒரு முகாமுக்குச் சென்று கண்ணீர் சிந்தி, ராஜதர்மம் பற்றிப் பேசினார். அவர், அவர்களிடம்  “நாட்டில் தர்மத்தை அமல்படுத்த நான் முதல் அமைச்சரிடம் கூறுகிறேன்” என்றார். பின்னால் நின்று கொண்டிருந்த மோடி சட்டென்று பதிலளித்தார். “நான் அதைதான் செய்து கொண்டு இருக்கிறேன்!”

இதன் அர்த்தம் என்ன? ஏதோ ஒரு சக்தி மையத்தில் மோடிக்குப் பிடியிருந்தது. அந்தச் சக்தி மையம் சங்கபரிவார்தான்.

இதற்கிடையில் மேலும் ஒரு சதித் திட்டமிடல் நடைபெற்றது. கலவரத்தை ஒடுக்குவதற்கு இராணுவம் வந்திருக்கும் வேளை. வந்திறங்கிய இராணுவத்தின் பெரும்பகுதியினரை ராஜ்கோட்டிற்கும், சூரத்துக்கும் அனுப்பிவைத்தனர். இராணுவத்தின் ஒரு சிறு பிரிவை மட்டும் அகமதா பாத்தில் நிறுத்தி விட்டுள்ளனர் என்று அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் மைய அரசுக்கு முறையிட்டனர். மைய அரசிடமிருந்து கேள்வி எழுந்தபோது மேலும் இராணுவத்தினர் கலவரத்தை எதிர்கொள்ள குஜராத்தில் இறங்கினர். அதற்குள்ளாகவே ஆயிரத்துக்கு மேற்பட்ட மசூதிகள் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டிருந்தன. இருப்பினும் இராணுவம் வந்தவுடன் மேலும் தாக்குதல்கள் நடத்த முடியாமல் போயிற்று.

கலவரத்தை அடக்க வந்த இராணுவப் படையின் தலைமை ஏற்றிருந்தவர் நடிகர் நஸ்ரூதீன் ஷாவின் உறவினர் ஆவார். 12ஆம் தேதி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்தது எனக்கு. அழைத்த ஊழியர் சொன்னார், “இங்கு வந்திருக்கும் அந்த இராணுவ அதிகாரி ஒரு பெண்பித்தன் என்று தகவல் கிடைத்திருக்கிறது. பொழுது போனால் அவர் பெண்களுடன் திரிகிறார். நீங்கள் அதை ரிப்போர்ட் செய்ய வேண்டும்!” நான் சொன்னேன், “அது என் வேலை இல்லை. அது ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையுமில்லை. சட்ட ஒழுங்கு பற்றிய ரகசியங்களைக் கண்டுபிடித்து அறிக்கை கொடுப்பதுதான் என் வேலை. அந்த அதிகாரி வீட்டுக்கு வருவது அவர் மனைவியா கேர்ள் பிரண்டா என்று கண்காணிப்பதற்காக அரசு என்னைப் பணிக்கு அமர்த்தவில்லை. இங்குள்ள தலைமைச் செயலரைக் கண்காணிக்கச் சொன்னால் அதை நான் செய்வேன். இந்த வேலை எனக்கில்லை. நீங்கள் குறிப்பிடும் அந்த அதிகாரி பாகிஸ்தானுக்கு ஒற்றனாக உளவு வேலை செய்கிறார் என்று நீங்கள் சொன்னால் நான் ஆய்வு செய்வேன். ஏனென்றால், அது எனது கடமை.”

இந்தச் சூழ்நிலையில் குஜராத் கலவரம் பற்றி விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட நானாவதி கமிஷன் விசாரணைக்காக வந்து சேர்ந்தது. உளவுத்துறையின் அதிகாரபூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க விசாரணை கமிஷன் உத்தரவிட்டது. டி.ஜி.பி. சக்கரவர்த்தி உளவுத்துறை தரப்பு விளக்கமளிக்க வேண்டிய குறிப்புகளை என்னிடம் கேட்டார். நான் இப்பதவியில் பொறுப்பு எடுத்துக் கொண்டது ஏப்ரல் 9ஆம் தேதிதான். கமிஷன் கோருவது ஏப்ரல் 30 வரையிலான ஆறுமாதத்தைய செயல் அறிக்கைகளை. நான் டி.ஜி.பியிடம் கூறினேன். “அறிக்கை என்னால் தர முடியும். ஆனால், முழுமை பெறாததாக இருக்கலாம். கலவரம் தீவிரமாக இருந்தது மார்ச் மாதத்தில்தான். அதனால் எனக்கு முன் பொறுப்பில் இருந்தவருக்குத்தான் முழுமையான விபரங்கள் தெரிந்து இருக்கும்” என்றேன்.

என் முன்னிலையில் டி.ஜி.பி. முன்னாள் பொறுப்பில் இருந்த E.C.ரெய்காவை வரவழைத்தார். வந்து சேர்ந்தவர் காலைப் பிடிப்பதுபோல் படபடப்புடன் டி.ஜி.பியிடம் ஏதேதோ சொல்லி நழுவ முயன்றார். எனக்கு உளவுத்துறையில் அனுபவம் போதாது சார். ஸ்ரீகுமாரிடம் கூறுங்க சார்! எழுத்து கை வந்தவர் அவர்தான் சார்!” என்றெல்லாம் தப்பிக்கப் பார்க்கும் ரெய்காவிடம் நான் சொன்னேன், “வேண்டுமென்றால் ஒரு குமாஸ்தா வைப்போல் நான் எழுதித் தருகிறேன்.” நானே அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. கூறினார்.

“சார்! நான் உண்மையையும், என் கண்டறிதல்களையும் மட்டுமே எழுதித்தருவேன். அது அரசாங்கத்தின் பிம்பத்தை உடைக்கும். மனசாட்சியையும் அரசியலமைப்புச் சட்டங்களையும் வஞ்சனை செய்து என்னால் ஒன்றும் எழுத முடியாது” என்று கூறினேன்.

டி.ஜி.பி ஒன்றும் பேசவில்லை.

கோப்புகளை எடுத்துப் பார்த்த போதுதான் தெரிந்தது - பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நீடித்த வகுப்புவாதக் கலவரத்தைப் பற்றி ஓர் அறிக்கைகூட ரெய்கா தன் கையொப்பத்துடன் அனுப்பியிருக்கவில்லை.

எல்லாவற்றையும் விளக்கமாகவே நான் எழுதினேன். என் பணிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் என் பெயரிலும், ரெய்கா காலத்தவை பதிவேடுகள் பார்த்தும். ரெய்கா பொறுப்பில் இருக்கும்போதும் சட்டப்படி கொடுக்க வேண்டிய முன் எச்சரிக்கைகள் கொடுத்துத்தான் இருந்தார். அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்த உண்மையை நான் எழுதியதுதான் அரசாங்கத்துக்குத் தீங்காக அமைந்தது.

காவல்துறையினரை பேடிகளாக மாற்றியது எவ்வாறு என்பதற்கு ஹிமாம்சு பட் என்பவரின் அனுபவத்தைப் பார்த்தால் போதும். இளம் ஐ.பி.எஸ் அதிகாரியும் நேர்மைக்கு இலக்கணமானவருமான ஹிமாம்சுபட் கலவரக் காலத்தில் பனத்கண்டா மாவட்டத்தில் எஸ்.பி.யாக இருந்தார். அவர் ரோந்து போய்க்கொண்டு இருக்கும்போது அதிர்ச்சியூட்டும் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தார். ஒரு முஸ்லீம் குடியிருப்பில் ஒரு சப்இன்ஸ்பெக்டரும் காவலர்களும் நின்றிருந்தனர். எஸ்.ஐ. கையில் நீண்ட வீச்சரிவாள். ஹிமாம்சு பட் உடனே டி.எஸ்.பி யிடம் தொடர்பு கொண்டு ஓர் அறிக்கை கேட்டார். மறுநாள் அந்த எஸ்.ஐ.யை சஸ்பென்ட் செய்தார்.

அன்று இரவோடு இரவாக ஹிமாம் சுபட் இடமாற்றம் செய்யப்பட்டார். சற்று நேரத்திற்குள் அதே காவல் நிலையத்தில் அதே எஸ்.ஐ. பதவியில் இருந்தார். எல்லாம் மின்னல் வேகத்தில்.

இடமாற்றம் செய்யப்பட்ட ஹிமாம்சு பட் உளவுத்துறைக்குத்தான் மாற்றப்பட்டிருந்தார். தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறிய அவரிடம் நான் சொன்னேன், “நீங்கள் இளைஞர், கம்ப்யூட்டரில் திறன் பெற்றவர். அச்சப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எனக்குக் கீழே இருக்கும்வரை பயமின்றி எதையும் தைரியமாக அறிக்கை தரலாம். நாம் இணைந்து போராடலாம்.”

அதன் பிறகு அறிக்கைகள் தயாரிப் பதில் ஹிமாம்சு பட்டின் உதவி எனக்குக் கிடைத்தது. நான் கொடுத்த அறிக்கைகள்தான் உச்ச நீதிமன்றம்வரை ஏற்றுக் கொள்ளபட்டவை. எனது பகுப்பாய்வு (Analytical) அறிக்கை படித்த பின் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தைக் கேட்டது “உங்களின் உளவுத்துறைத் தலைவரே கலவரத்தை அடக்குவதற்கான நடவடிக்கைகள் அறிக்கையில் குறிப்பிட்டு முன் மொழிந்துள்ளார். நீங்கள் என்ன செய்தீர்கள்?”

சுவாரஸ்யமான விஷயமே அந்த அறிக்கையின் மீது நீதிமன்றம் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை என்பதுதான். ஏனென்றால் நான் கிரவுண்ட் ரியாலிட்டியை மட்டுமே எழுதியிருந்தேன்.

இதனிடையில் மேலும் மேலும் பல தொல்லைகள் தொடர்ந்து வரவே, ஹிமாம்சு பட் விடுமுறைக்கு மனுச் செய்தார். அரசாங்கம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இறுதியில் விடுமுறை அனுமதிக்காகக் காத்து இருக்காமல் அவர் அமெரிக்கா சென்றார்; பி.எச்.டி செய்வதற்கு. இனி அவரை டிஸ்மிஸ் செய்யலாம். அப்படி டிஸ்மிஸ் செய்தாலும் அவருக்கு பிரச்சினை இல்லை. அவருக்கு இங்கு கிடைப்பதை விட நான்கு மடங்கு அதிகமாக ஊதியம் அங்கு கிடைக்கிறது.

5
தேர்தலுக்கான சூழ்ச்சி

மாவட்ட ஆட்சியாளருக்கு ஒரு நாள் மோடியிடமிருந்து உத்தரவு ஒன்று கிடைத்தது. அகதி முகாம் அனைத்தையும் இழுத்து மூடச்சொல்லி.

சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறது அரசு. மாநிலத்தில் அனைத்தும் சுமுக நிலையில் இருக்கின்றன என்று தேர்தல் கமிஷனுக்குத் தெரிய வைப்பதற்கான முயற்சி இது.

ஜுன் மாதம் ஏழாம் தேதி சட்டசபையைக் கலைத்துவிட்ட மோடி, உடனடியாக மாநிலத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு எழுதினார். ஆறுமாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதானே விதி. தேர்தல் கமிஷன் ஆராய்ந்தபோது பெரும்பாலான இடங்களில் சூழ்நிலை நல்லபடியாக இல்லை, நிவாரண முகாம்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு இலட்சத்து எழுபதினாயிரம் மக்கள் அவர்கள் வசித்து வந்த பகுதிகளிலேயே அகதி முகாம்களில் இருக்கிறார்கள். இவ்வாறு சொந்த நிலத்திலேயே அகதிகளாக வாழ்கின்றவர்களை தேச விரோதச் சக்திகள் யாராவது உபயோகித்துக்கொண்டால் அம்மக்களை எப்படிக் குற்றம் கூற முடியும்? இதை எல்லாம் தெரிந்துதான் கேம்புகளை இழுத்து மூடும்படி மோடியின் அரசாங்கம் ஆணையிட்டது.

அரசு ஆணை கிடைத்ததும் அடுத்த நாள் அகதிகளாக்கப்பட்டவர்களை காரணமின்றி மிதித்து வெளியேற்றி விட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முகாம்களை இழுத்து மூடினார்கள். மக்கள் நாலாபக்கமும் சிதறுண்டு ஓடினார்கள். பெருவாரியானவர்கள் சேரிகளுக்குச் சென்றனர். அவர்கள் இப்போதும் அந்தச் சேரிகளில் நரக வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

ஏழைப் பெண்களின் கருவில் இருக்கும் சிசுக்களையும் வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்துக் கொன்றவர்களையும், குழந்தைகளின் கைகளை வெட்டி எறிந்தவர்களையும் மன்னிக்க முடியாத மன நிலையில் நான் அன்று இருந்தேன். சில நிகழ்ச்சிகளை நான் நேரில் பார்த்தேன். மார்ச்சு மாதம் பிணக் குவியல்களினூடேதானே நான் பயணித்தேன். அப்படிக் கனன்று கொண்டிருக்கும் நேரத்தில்தான் தேர்தல் கமிஷன் முன் செல்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை எனக்கு.

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி தேர்தல் கமிஷன் முழு பெஞ்சின் கூட்டம். அதற்கு இரு தினங்களுக்கு முன்பாக கூடுதல் தலைமைச் செயலர் அசோக் நாராயணன் என்னை அழைத்து, என்னிடம் சொன்னார், “ஸ்ரீகுமார், சூழ்நிலை மிக விரைவாக சுமுக நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது. 182 சட்டசபை தொகுதிகளில் 54 தொகுதிகளில் மட்டும்தான் கலவரம் நடந்துள்ளது.”

“எங்கள் பதிவேடுகளின் பிரகாரம் நீங்கள் சொல்லும் கணக்கு சரியானதல்ல. 154 தொகுதிகளில் கலவரம் நடந்திருக்கிறது” என்று இடைமறித்துச் சொன்னேன் நான்.

“அய்யோ.. நீங்கள் அந்த மாதிரி அறிக்கை எதையும் அனுப்பிவிடாதீர்கள்.”

“சார்! நான் உள்ளது உள்ளபடியே தான் அனுப்புவேன். நாளை என்னை நேரில் அழைக்கும் போதும் அதைத் தான் நான் சொல்வேன்” என்றேன் நான்.

“அய்யயோ... அப்படி எதையும் சொல்லாதீங்க!” என்று என் காலில் விழுந்து கெஞ்சுவது போல். அவர் மீண்டும் மீண்டும் கெஞ்சினார். (அசோக் நாராயணனுக்கு அதற்கான வெகுமதி கிடைத்தது. அவர் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தும் தற்போதும் விஜிலன்ஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார்)

அன்று மாலையில் நான் 154 தொகுதிகளில் கலவரம் நடைபெற்றது என்றும், அதனால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகள் எவை என்றும் அறிக்கை தயாரித்து அனுப்பினேன்.

அவ்வாறு அதுநாள் வரையிலான எனது துன்பியல் அனுபவங்கள் முடிந்து மிகவும் மகிழ்ச்சியான சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் கமிஷன் கூட்டம். கமிஷன் உறுப்பினர் லிங்தோதான் விபரங்களைக் கேட்டவர். சூழ்நிலைகள் தற்போது சாதகமாகிவிட்டன. தற்போது எங்கும் அமைதி நிலவுகின்றது என்றார் தலைமைச் செயலர்.

டி.ஜி.பி. சற்றே Sensible ஆக இருந்தார். அவர் 100 கம்பெனி கூடுதல் படைகளை மட்டும் கோரினார்.

“நிலைமை அமைதியாக சாதகமாக இருப்பதாகக் கூறும் உங்களுக்கு எதற்காக 100 கம்பெனி படையினர் தேவைப்படுகிறது?” உடனே கமிஷன் அவர்களிடம் கேள்வி கேட்டது.

“உங்களின் மதிப்பீட்டைக் கூறுங்கள்” கமிஷனின் அடுத்த கேள்வி என்னிடம்.
“சார், நான் உண்மையான மதிப்பீடு தான் வழங்க வேண்டுமா?” என்றேன் “என்ன கேள்வி இது? உண்மை நிலையைக் கூறுங்கள்” என்றார் லிங்தோ.

“சார்! அரசாங்கமும் தலைமைச் செயலரும் கூறுவதை முழுமையாக மறுக்கிறேன். இங்கு 154 தொகுதிகளில் பிரச்சினைகள் இருக்கின்றன. ஏராளமான காவல் நிலைய சரகங்களில் அமைதி குலைந்து இருக்கின்றது. தற் போதுள்ள சூழ்நிலை தேர்தல் நடத்துவதற்குத் தோதானது அல்ல என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் கூறலாம். ஒன்றே முக்கால் லட்சம் பேர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். அவர்களைத் தங்க வைத்து இருந்த முகாம்கள் அனைத்தையும் இழுத்து மூடிவிட்டனர். தற்போது அந்த அகதிகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது. குறைந்த பட்சம் ஒரு லட்சம் பேரிடம் அவர்களது அடையாளத்தை நிரூபிப்பதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை. அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று யாராவது சொன்னாலும் இல்லை என்று நிரூபிக்க அவர்களால் முடியாது. அதனால் அவர்களை மீண்டும் தங்களது பழைய இடங்களில் குடியமர்த்தாமல் தேர்தல் நடத்தக்கூடாது என்பதுதான் உளவுத்துறைத் தலைவர் என்ற நிலையில் எனது திடமான கருத்து. அதுமட்டுமின்றி இவ்வளவு பேர் தப்பிப் பிழைக்கச் சென்றுள்ளதனால் அரசியல் கட்சியினர் இவர்களின் பெயர்களில் கள்ள ஓட்டை எளிமையாகப் போட்டுவிடுவார்கள்!”

என் விளக்கத்தைக் கேட்ட லிங்தோ சொன்னார், “எங்கள் மதிப்பீடும், ஸ்ரீகுமாரின் மதிப்பீடும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஸ்ரீகுமார் சொன்னவை அனைத்தையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.”

இப்படியாக இன்னொரு பூகம்பத்தைச் சுமந்துகொண்டு ஆகஸ்ட் 16இல் தேர்தல் கமிஷனின் தீர்ப்பு வந்தது. தேர்தலை நடத்த முடியாது. அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் மூன்று இடங்களில் என் பெயரை தனியாக எடுத்துரைத்திருந்தனர். அதில் ஒரு பத்தியில் “மாநில அரசாங்கம் குறிப்பிட்டவை நூறுசதவிகிதமும் முழுப் பொய் என்று கூடுதல் டி.ஜி.பி.யின் வாக்குமூலத்தில் தெளிவாக இருந்தது. கூடுதல் டி.ஜி.பி.ஸ்ரீகுமார் கொடுத்த விபரங்களை முழுமையாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். காரணம் அவை எதார்த்தமானவையும், உண்மையான மதிப்பீட்டின் அடிப்படையிலும் அமைந்துள்ளவை.”

கமிஷன் முன்னால் நான் வாக்கு மூலம் அளித்தபோது தலைமைச் செயலர் இடையில் புகுந்து “ஸ்ரீகுமார் உங்களுக்கு இந்தத் தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன” என்று கேட்டார், அதற்கு நான் சொன்னேன், “கீழ் நிலை ஊழியர்களிடம் இருந்து. எங்கெல்லாம் குழப்பங்கள் ஏற்பட்டன என்றும் எவ்வளவு பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் வீட்டை இழந்தார்கள் என்றும் படித்து காட்டட்டுமா?”

“No…. No…” என்றார் தலைமைச் செயலர்.

நடந்தவை என்ன என்று நான் கூறுகிறேன். பிரச்சினைகள் பற்றி அறிக்கை தருமாறு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு நான் கேள்வி கேட்டு எழுதி அனுப்பினேன். மாவட்ட ஆட்சியாளர்களிடமிருந்து கட்டம், கட்டமாகக் கீழ்மட்ட குமாஸ்தாக்கள் கையில் அவை போய்ச் சேர்ந்தன. குமாஸ்தாக்கள் உண்மையை மறைக்காத அறிக்கைகளைத் தயாரித்து மேலிடத்திற்கு அனுப்பினார்கள். இவ்வாறுதான் கறையற்ற உண்மை நிலைகளின் மதிப்பீடுகள் என் கையில் வந்து சேர்ந்தன. மற்ற அதிகாரிகள் எல்லாம் இந்த அறிக்கைகளைப் பார்க்காதவர்கள் போல பாவித்தனர்.

உண்மையில் இந்த அறிக்கைகள்தான் மாநில அரசாங்கத்துக்கு மிரட்டலாக மாறியது. Ground Realityயைப் பிரதிபலிக்கும் இந்த அறிக்கைகள்,  இன்றைக்கும் அவர்களின் தலைக்கு மேலே தொங்குகின்ற கூரான கத்தியாகும். அதனால் அகமதாபாத் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் என்னிடம் மனப்பூரிப்பால் சொன்னார், “ஸ்ரீகுமார்! மோடி அவரைப் பெற்றெடுத்த சொந்த அம்மா பெயரை மறக்கலாம். ஆனால் உங்கள் பெயரை அவரால் ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.”

6
நான் வெளியே

“நாம் ஐவர் நமக்கு இருபத்தி ஐவர் தேவையா” கேள்வியை எழுப்பியவர் நரேந்திரமோடி. முஸ்லீம்களை அவமதிக்கின்ற வார்த்தைகள்.

நரேந்திரமோடி தேர்தலுக்கு முன்பாக ‘கவுரவ் யாத்ரா’ நடத்திய சந்தர்ப்பம். இந்தப் பயணத்தில் முழுக்க முழுக்க மோடி பேசியவை அனைத்தும் வகுப்புவாதத்தைத் தூண்டிவிடும் முறையில் இருந்தன. இரண்டு இடங்களில் மிகவும் மட்டரகமான வார்த்தைகளை மோடி பயன்படுத்தினார். செப்டம்பர் 10ஆம் தேதி ஓர் இடத்தில் அவர் பேசியது, “நான் நர்மதா நதி நீரை அகமதாபாத்துக்குக் கொண்டு வந்தேன். எப்போது கொண்டு வந்தேன்? இந்துக்களின் புனித மாதமான சிராவண மாதத்தில். அது சில பேருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் விருப்பத்திற்கு நான் அதை ரம்ஜான் மாதத்திலா கொண்டு வர முடியும்?

இங்கு கேம்புகளை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர். பிள்ளைகளை உற்பத்தி செய்கின்ற கேம்புகளை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்களா? பிள்ளைகளை உற்பத்தி செய்யும் ஃபாக்டரி நடத்துவதற்கு நான் தயாரில்லை. பிள்ளைகளை உற்பத்தி செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? தேச விரோதச் செயல்கள்தானே செய்வார்கள்? நாம் ஐவர். நமக்கு இருபத்தி ஐவர் தேவையா?”

முஸ்லிம்கள் ஐந்து திருமணம் செய்து ஐந்து பிள்ளைகள் வீதம் பெற்றெடுக்கிறார்கள் என்பதுதான் அந்த வார்த்தைகளில் அடங்கியுள்ள தொனி.

ஊடகங்கள் இதை வெளியிட்டபோது தேசிய சிறுபான்மையினர் கமிஷன் வழக்குத் தொடுக்க வேண்டியதாயிற்று. அந்த கமிஷனின் தலைவராக இருந்தது தர்லோசன் சிங் சர்தார்ஜி. அவர் அதைக் குழப்பிவிட்டார். இருப்பினும் மோடியின் பேச்சின் முழு வடிவத்தைத் தரவேண்டும் என்று சிறுபான்மை கமிஷனின் கடிதம் வந்தது. பதில் கொடுக்க வேண்டியது என் கடமையாக இருந்தது. தலைமைச் செயலர் சிறுபான்மை கமிஷன் அனுப்பிய கடிதத்தில் இந்த விஷயம் குறிப்பிட்டு எனக்கு அனுப்பினார். கடிதம் என் மேஜைக்கு வந்ததும் டி.ஜி.பி. என்னை அழைத்தார். அவர் சொன்னார், “ஸ்ரீகுமார், அறிக்கை கொடுக்க வேண்டாம்” என்று.

“சார்! நீங்க தானே அறிக்கை அனுப்புமாறு என்னை வேண்டியது?” என்று கேட்டேன் நான்.

“ஆமாம்! ஆனா... அந்த விஷயத்தை விட்டுவிடுங்கள். அரசாங்கம் அதை மறுக்கப் போகிறது” என்று டி.ஜி.பி சொன்னார்.

“ஆனால் பதில் கொடுக்கும்படி தான் தலைமைச் செயலர் எனக்கு எழுதிக் கொடுத்துள்ளார்” என்று நான் சொன்னேன்.

“பரவாயில்லை! உங்களை அரசாங்கம் காப்பாற்றிவிடும்!” என்றார் டி.ஜி.பி.

எனக்கு அது ஏற்கக்கூடியதாக இருக்கவில்லை. நான் ஹிமாம்சு பட்டை அழைத்தேன். நாங்கள் நள்ளிரவு 12 மணி வரையில் அமர்ந்து பத்திரிகைகளில் வெளிவந்த மோடியின் பேச்சுகளை மொழிபெயர்த்து அறிக்கை தயாரித்து சிறுபான்மை கமிஷனுக்கு அனுப்பிவைத்தோம். அடுத்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி அறிக்கை அவர்களிடம் போய்ச் சேர்ந்தது. நிகழ்காலச் சூழலில் இதைப் போன்ற பேச்சுகள் ஏற்படுத்தும் ஆபத்துகளைப் பற்றியும் அதில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அன்று இரவு ஒரு மணி வாக்கில் எஸ்.ஐ.ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். என்னை இடமாற்றம் செய்த உத்தரவுடன் வந்திருப்பதாக வருத்தத்துடன் சொன்னார். நான் அவரிடம் சொன்னேன், “பரவாயில்லை. நீங்கள் உங்கள் பணியைத்தானே செய்கிறீர்கள்” என்று. எனது இடமாற்ற உத்தரவை நான் வாங்கிக் கொண்டேன்.

மறுநாள் டி.ஜி.பியைப் பார்த்த போது நான் கேட்டேன், “சார்! நான் எங்கும் ஓடிப்போக மாட்டேனே. இடமாற்ற உத்தரவை பகல் நேரத்தில் கொடுத்தால் போதாதா?” என்று.

“நானும் அப்படித்தான் சொல்லி இருந்தேன். ஆனால் நீங்க கோர்ட்க்குப் போய் ஸ்டே வாங்குவீர்கள் என்று தலைமைச் செயலருக்கு பயமிருந்தது” என்றார் டி.ஜி.பி.

அன்றைய தினம் எல்லா ஊடகங்களிலும் நான் முழுமையாக இடம் பெற்றிருந்தேன். ஸ்ரீகுமாரின் அறிக்கைப்படிதான் தேர்தல் கமிஷன் தேர்தலைத் தள்ளி வைத்தது என்று ஊடகங்கள் எழுதின.

அவ்வாறு ஐந்து மாதங்கள் நீடித்த பொறுப்பிலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன்.

உண்மையைச் சொல்வதானால், மோடியின் அனுபவக் குறைவுதான் இவ்வளவு காலம்
என்னை அந்தப் பதவியில் நீடிக்க வைத்தது என்று எனக்குத் தெரியும். ஒவ்வொருமுறையும் நான் அறிக்கை அனுப்பும் போதும் அதைத் தீவிரமாக எடுக்காமல் அலட்சியப்படுத்தலாம் என்றும், ஆட்சியைப் பயன்படுத்தி நிலைமைகளை தன்னுடைய போக்குக்குக் கொண்டு வர முடியும் என்பதும்தான் மோடியின் கணக்கு. இந்த அறிக்கைகள் என்றைக்காவது தனக்கும், அரசாங்கத்துக்கும் எதிராகத் திரும்பிவிடும் என்று அவர் கருத்தில் கொள்ளவில்லை.

ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆட்சி கூட நடத்தி அனுபவமில்லாமல்தான் மோடி முதல் அமைச்சர் ஆனார். எனது அறிக்கையின் பலத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டபோதுதான் அறிக்கைகளின் சக்தி மோடிக்குப் புரிந்தது.

7
அத்தாட்சிகள்

2004 ஆகஸ்ட் துவக்கத்தில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையில் முதல் பக்கத்தில் பெரிய ஒரு செய்தி வந்தது. நானாவதி கமிஷனுக்கு நான் அளித்த உறுதிமொழி அது. “பாலிடிகல் டைனாமிட் இன் தி அஃபிடவிட் ஆஃப் ஃபார்மர் அடிஷனல் டி.ஜி.பி” என்பது அந்தச் செய்தியின் தலைப்பு. அப்போது எந்த ஒரு வேலையும் இல்லாத துறையில் - “அடிஷனல் டி.ஜி.பி. பொலிஸ் ரிஃபார்ம்ஸ்” - என்னை உட்கார வைத்திருந்தார்கள். துணைக்கு ஒரு பியூன் மட்டும். குறிப்பிட்ட பணிகள் ஒன்றும் இல்லாததனால் இந்தக் காலகட்டத்தில் நான் எல் எல் எம், காந்தியன் ஸ்டடிசில் எம்.ஏ. போன்றவற்றில் தேர்வு பெற்றேன்.

பத்திரிகையில் செய்தி வந்தபோது தலைமைச் செயலர் அழைத்தார். செய்தி எதற்காகக் கொடுத்தீர்கள்” என்று கேட்டார். அது எனது வாக்குமூலம் தான் என்றும் அரசாங்கத்திடம் இருப்பதுதான் என்றும் நான் சொன்னேன். தலைமைச் செயலர் கோப்பு வரவழைத்துப் பார்த்தபோது சரியாக இருந்தது. ஆனால் அதை யாருமே படிக்கவில்லை என்பதுதான் உண்மை. நானாவதி கமிஷன் விசாரணைக்கான அழைப்புடன் இணைந்துதான் அந்த வார்த்தை வெளிவந்தது. இத்துடன் அடுத்த மோதலுக்கான களம் தயாராகியது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வந்தவுடன் மொகல் சின்ஹா என்ற சமூக நல ஊழியர் ஒருவர் நானாவதி கமிஷனிடம் என்னைக் கூடுதலாக விசாரணை செய்து உண்மைகளை மேலும் ஆராய்ந்து கண்டு பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கலவரத்துக்கு இரையானவர்களுக்காக செயல்படுகின்ற ஒரு என்.ஜி.ஓவைச் சேர்ந்த ஊழியர் மொகல் சின்ஹா. என்னை விசாரணை செய்ய கமிஷன் அழைத்தது. அப்போதுதான் அரசாங்கம் உஷாரானது. உள்துறையில் உள்ள எனது நண்பர்கள் உட்பட சிலரை என்னிடம் அனுப்பி வைத்து என்னை வசப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

முதலில் எனக்கு நெருக்கமான இரண்டு அடிஷனல் டி.ஜி.பிகள் வந்தனர். அவர்கள் என்னிடம், “ஸ்ரீகுமார், அந்த வாக்குமூலத்தை நீங்கள் மறுதலிக்க வேண்டும்” என்று வேண்டினர். இருவருக்கும் நான் கொடுத்தது ஒரே பதில்: “என் தந்தையின் பெயர் பாஸ்கரன் பிள்ளை என்பது. என் அப்பாவின் சம வயதுக்காரர்தான் ஜவஹர்லால் நேருவும். உண்மையில் நேருவின் மகன் என்று அறியப்படவே நான் விரும்புகிறேன். ஆனால், அது நடக்காதே!”

நான் மரியாதையுடன் அவர்களின் தந்தைகளை குறிப்பிட்டுச் சொன்னது என்று இருவருக்கும் புரிந்ததா என்று தெரியவில்லை.

மேலும் பலர் வந்தனர். அரசாங்கத்தின் சார்பாக என்னைப் பணிய வைப்பதற்கான முயற்சிதான் இவை என்று புரிந்துகொண்ட போது ஒரு முடிவுக்கு நான் வந்தேன். இதற்கெல்லாம் அத்தாட்சிகள் உருவாக்க வேண்டும். அவ்வாறு அனைத்தையும் பதிவு செய்ய நான் தீர்மானம் எடுத்தேன். பேனா உருவத்திலுள்ள ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கினேன். அடுத்தநாள் உள்துறையைச் சேர்ந்த அன்டர் செக்ரட்டரி ஒருவர் என்னிடம் வந்தார் - விக்னேஷ் காபிரியா. எனது நெருங்கிய நண்பர் அவர். ஆயுர்வேதத்திலும், சமஸ்கிருதத்திலும் ஈடுபாடுள்ளவர். நான் வேலை எதுவும் இல்லாமல் இருப்பதனால் அடிக்கடி வந்து அவருக்கு ஈடுபாடுள்ளவற்றைக் குறித்து நாங்கள் விவாதிப்பதுண்டு. வழக்கம் போல மற்ற விஷயங்களை பேசிய பிறகு புறப்படும் முன் காபிரியாவும் சொன்னார், “சார்! நீங்கள் சாட்சி சொல்லப் போகக்கூடாது” இந்த உரையாடலையும் நான் பதிவு செய்தேன்.

பிறகு உள்துறை செயலர் என்னை அதிகாரபூர்வமாகவே அழைத்தார். நானாவதி கமிஷனில் அரசாங்க பிளீடராக இருக்கும் அரவிந்த் பாட்யா, உள்துறையிலுள்ள ஜி.சி.முர்மு (இவர் இப்போது உள்துறை செயலர்) போன்றவர்கள்தான் என்னை அழைக்க வைத்தவர்கள். 89 ஆவது பேட்சில் ஜுனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் முர்மு. எனவே, நான் டி.ஜி.பியிடம் கேட்டேன், “சார்! எனக்கு ஜுனியர்களான அதிகாரிகள்தான் என்னை அழைக்கிறவர்கள். நான் போக வேண்டுமா?” “வேண்டும்! வேண்டும்” என்றார். தொடர்ந்து டி.ஜி.பி. “அரசாங்கம்தான் உங்களை அழைக்கிறது” என்றார்.

நான் அரசாங்கத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகவும், எனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முர்முவும், அரவிந்த் பாட்யாவும் மிரட்டினர். கடந்த காலத்தில் ஐ.எஸ். ஆர். ஒற்றர் வழக்கின் ஆய்வுக் குழுவில் நானும் இருந்தேன். அந்த வழக்குடன் தொடர்புடைய தொடர் வழக்குகளுக்குள் என்னையும் மாட்டி விடுவோம் என்று இருவரும் மிரட்டினர். அனைத்தையும் நான் பதிவு செய்வது அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. கிரிமினல் சட்டப்படி குற்றம் செய்யத் தூண்டிய பிரிவில் வரும் அவர்களின் இந்தத் தூண்டுதல்கள்.

உள்துறைப் பிரிவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மிதமிஞ்சிய சக்தி இருக்கிறது. டி.ஜி.பியே அவர்களுக்குக் கட்டுப்படுவார். அதனால்தான் அவர்களாகவே நேரில் வந்ததும், அவர்களின் சக்தி தெரிந்ததனால்தான் நான் ரெக்கார்ட் செய்யத் தீர்மானம் எடுத்ததும். அவர்கள் தந்த முன் எச்சரிக்கையில் இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை எனில் உங்களுடைய கேரியருக்கு ஆபத்துவரும் என்றும் கூறி இருந்தனர். அனைத்தையும் பதிவு செய்து அதை நான் கமிஷனிடம் வழங்கினேன்.

சிலநாட்கள் சென்ற பின் அதை என்.டி. டிவி ஒளிபரப்பு செய்தது. நண்பராகவும் இருந்த விக்னேஷ் காபிரியா சொன்னார், “எப்படியானாலும் உங்களுக்கு நான் நன்றி சொல்லணும் சார்! என் குரலை நாடு முழுதும் பரவச் செய்தீர்களே.”

(ரெக்கார்ட் செய்வதற்கு முடிவு எடுக்கும் முன் எனக்குக் கிடைத்த வாய் வழி உத்தரவுகளை நான் டயிரியில் குறிப்பிட்டு எழுதி வைத்திருந்தேன். ஆனால் அந்த டயரிக் குறிப்புகளைப் பரிசீலனை செய்ய கமிஷன் தயாரில்லை என்பது வருத்தத்தைத் தந்தது. அதனால் நான் கமிஷனிடம் சொன்னேன், “இந்த டயரி குறிப்பில் எழுதப்பட்டவை யாவும் சத்தியமானது என்பதை அறிய “பாலிகிராப் பிரெய்ன் மேப்பிங்” போன்று எந்தச் சோதனைக்கும் நான் தயார். இன்றைக்கும்தான், அன் கண்டிஷனலி)

2004 ஜீலை மாதம் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் யு.பி.ஏ. அரசாங்கம் அதிகாரத்தில் வந்தது. நானாவதி கமிஷன் ஆராயாத காரியங்களுக்காக மத்திய அரசு புதிய கமிஷனை நியமித்துவிடுமோ என்று மோடிக்கு சந்தேகம் ஏற்பட்டது. நானாவதி கமிஷன் மோடியின் சொந்த கமிஷன் என்று பொதுவாகவே ஒரு புகார் இருந்தது. ஒரு புதிய கமிஷன் வருவதைத் தவிர்ப்பதற்காக நானாவதி கமிஷனின் டேம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ் அதிகப்படுத்தினர். முதல் அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் உயர்நிலை உத்தியோகஸ்தர்களும் சேர்ந்த அதிகாரிகளின் பங்களிப்பைப் பற்றியும் விசாரணை நடத்தலாம் என்று தீர்மானம் எடுத்தனர்.

இப்போதும் ஒரு சதி ஆலோசனையும், விளையாட்டும் நடந்தது. செப்டம்பர் 30க்கு முன் அரசு ஊழியர்கள் வாக்குமூலம் அளிக்கலாம் என்பது உத்தரவு. அதற்குமுன் ஒரு நாள் டி.ஜி.பி. சக்கரவர்த்தி என்னைக் கூப்பிட்டார். அவர் சொன்னார், “ஸ்ரீகுமார், நான் அஃபிஷியலாகச் சொல்லவில்லை. நீங்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டாம்.”

“முடியாது சார், நான் கொடுப்பது என்றுதான் முடிவெடுத்திருக்கிறேன்” என்று நானும் சொன்னேன்.

நான் வாக்குமூலம் அளித்தேன். உடன் எனக்கு ஷோ காஸ் நோட்டீஸ் வந்தது. அதில் காரணம் இவ்வாறு இருந்தது. நீங்கள் ஐ.எஸ்.ஆர்.ஓ. ஒற்றர் வழக்கின் ஆய்வுக் குழுவில் உறுப்பினராக சில குளறுபடிகள் நடத்தி இருந்தீர்கள். அதற்கான திருப்திகரமான பதில் தராமலேயே 2000 ஆம் ஆண்டு ஆகஸ்டில் குஜராத்துக்குத் திரும்பி வந்து பணியில் சேர்ந்து விட்டீர்கள்.”

காலம் கடந்ததானாலும் தொழில் நுட்பப் பிரச்சினைகளை வைத்து என்னை விரட்டி விடுவதற்கான அவர்களின் பலவீனமான ஒரு முயற்சி. அதற்கு திருப்பித் தாக்குவது போல் அக்டோபர் ஆறாம் தேதி மீண்டும் நான் இரண்டாம் முறையாக ஒரு வாக்குமூலம் அளித்தேன். அதில் அன்றைய முதலமைச்சரின் ஆலோசகராக இருந்த கே.பி.எஸ். கில்லிடம் கொடுத்த அறிக்கைகளையும் உட்படுத்தினேன். தலைமைச் செயலர் உட்பட எந்த ஒரு அரசாங்க ஊழியருமே வாக்குமூலம் கொடுக்க முன்வரவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இங்குள்ள ஊழியர் கூட்டத்தின் தலைமை பீடத்திலிருக்கின்ற நபர் கூட ஒரு பதில், அது சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கட்டும், அளிக்காமல் முழுமையான கீழ்ப்படிதலைக் காண்பித்தார்கள்.

நானாவதி கமிஷனின் இரண்டாம் டேம்ஸ் ஆஃப் ரெஃபரன்சுக்கு உதவ வேண்டும் என்று அனைத்து ஊழியர்களிடமும் அரசாங்கம் கூறியது. ஆனால் வாக்குமூலம் கொடுக்க முன் வந்தது நான் மட்டுமே. ஏனெனில் அனைவரும் பயந்து பின்வாங்கினர். அப்படியானால் இரண்டாவது டேம்ஸ் ஆஃப் ரெஃபரன்சால் என்ன பிரயோஜனம்?

என் செயல்பாடுகளுக்கு தண்டனை வழங்குவதென கடைசியில் அரசாங்கம் தீர்மானித்தது. 2005 பிப்ரவரியில் டிப்பார்ட்மென்டல் பிரமோஷன் கமிட்டி சட்ட பிரகாரம் எனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வைத் தடுத்து வைத்தது. பதிலாக ஜுனியரான ஒருவருக்கு பதவி உயர்வை வழங்கினர். அத்துடன் எனது உத்தியோக வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படலாயிற்று. குஜராத் அரசாங்கத்துடனான இன்னொரு போராட்டத்தைத் தொடங்கினேன்.

8
பக்கபலமாக டீஸ்டா

டீஸ்டா செதெல்வாத் என் மகளிடம் அடிக்கடி கூறுவார், “அப்பாவுக்கு ஒரு கடிவாளம் போடுங்கள். புதிய வழக்குகளில் சென்று தலையிட்டால் வழக்கை நடத்த நாங்கள்தான் வேண்டும்” அவர் தமாஷாகச் சொல்கிறார் என்றாலும், உண்மைதான் அது.

பத்மஸ்ரீ வெகுமதி வழங்கி தேசம் ஆதரித்த டீஸ்டா செதெல்வாத்தான் அதற்குப் பின்னான என் வாழ்க்கையையும், போராட்டங்களையும் முன் னெடுத்துச் செல்வதற்கு எனக்கு உதவியவர். எனது போராட்டங்களின் வெற்றிகளுக்கு அவருக்கு நான் கடன் பட்டு இருக்கிறேன்.

நான் இரண்டாவதுமுறை கொடுத்த வாக்குமூலத்தால்தானே எனக்கு என் தகுதிக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வைத் தவிர்க்க அரசாங்கம் தீர்மானம் எடுத்தது. உண்மையில் இந்தச் செயல் அனைத்து உத்தியோகஸ்தர்களுக்குமான ஒரு எச்சரிக்கையாக இருந்தது. கமிஷனிடம் வாக்குமூலம் கொடுக்கப்போய் எதாவது ஒரு அதிகாரி பி.ஜே.பி- சங்க் பரிவார் தலைவர்களின் பெயர் சொன்னால் என்ன செய்வது என்ற பயம். எப்படியோ என்னை தண்டித்ததற்குப் பின் ஒரு வரும் வாக்குமூலம் கொடுக்கவில்லை.

பிப்ரவரியில் என் தகுதிக்குக் கிடைக்க வேண்டிய பிரமோஷன் கிடைக்காமல் போகவே, ஏப்ரல் மாதத்தில் நான் வழக்குத் தொடுத்தேன், முதலில் அகமதாபாத்தில் வழக்கறிஞர் கிடைக்க கஷ்டப் பட்டேன். இறுதியில் ஒருவர் கிடைத்தார் - இடதுசாரி பண்பாட்டுத் தலைவராகவும் இருந்த அச்சுத் ஆக்னிக்கின் மகன் ஆனந்த வர்தன் ஆக்னிக். ஆறு மாதம் கடந்தபோது அவர் கால்வாரி விட்டார். மூன்று மாதம் கடந்தபோதே அவர் தடுமாற்றத்துடன் காணப்பட்டார். நாம் வெற்றி பெறுவது கஷ்டம் தான் என்று அடிக்கடி புலம்பத் தொடங்கினார்.  “நீங்கள் மத்திய அரசுப் பணிக்குப் போகக் கூடாதா?” என்று என்னை அடிக்கடி கேட்கலானார்.  “அது யாருக்கு வேணும்?” என்றுதான் நான் அலட்சியமாகச் சொல்வேன்.

மத்திய அரசுக்கு டெபுடியூடேஷனில் செல்வதற்கு நான் தயாராக இருந்திருந்தால், இந்த மட்டம் தட்டு தலைத் தவிர்த்திருக்கலாம். என்னை மட்டம் தட்டி தரம் குறைத்ததும், பாரம்பரியமாகவே அவர்கள் இழைக்கும் கொடுமைகளின் தொடர்ச்சி தான். இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கிடையே எனது வழக்கறிஞர் மிரட்டலில் மாட்டி இருக்கிறார் என்ற விஷயம் உளவுத்துறை நண்பர்கள் வழியாக நான் தெரிந்து கொண்டேன் ஆனந்தவர்தன் கையாளும் அரசாங்க வழக்குகள் வாபஸ் வாங்கப்படும் என்பதும் மிரட்டல்களில் ஒன்று. ஒவ்வொரு முறையும் அரசாங்கம் சார்பாக நீதிமன்றம் செல்லும்போதும் பத்தாயிரம் ரூபாய் ஃபீஸாகக் கிடைக்கும். அதுதான் வக்கீலின் தடுமாற்றத்துக்குக் காரணம். இறுதியில் அகமதாபாத்தில் எனது வழக்கை எடுக்க வக்கீல்கள் தயாரில்லை.

இதனைத் தொடர்ந்துதான் டீஸ்டா செதெல்வாத்தை நான் தொடர்பு கொண்டேன். இங்கு வக்கீல்கள் கிடைக்காததனால் மும்பையில் இருந்து யாரையாவது தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க அவரிடம் சொன்னேன். அதற்குள் பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணையை மகாராஷ்டிராவுக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டு இருந்தது. நான் தொடர்புகொண்டபோது டீஸ்டா மகிழ்ச்சியுடன் சொன்னார், “நாங்களே உங்களிடம் தொடர்பு கொள்ள இருந்தோம். கண்டிப்பாக வக்கீலை ஏற்படுத்தித் தருகிறேன்” என்று.

2005 நவம்பர் மாதத்தில் மும்பை அட்வகேட் என் வழக்கை ஏற்க முன் வந்தார்.

இப்படியாக புதிய ஒரு பாதை எனக்காகத் திறக்கப்பட்டது. 2005 டிசம்பர் முதல் 2007 பிப்ரவரி (ஓய்வு பெறும்வரை) நான் டீஸ்டாவுடன் தொடர்பு கொண்டிருந்தது இரகசியமாகத்தான். நானும் 13 ஆண்டுகள் ஒற்றர் பணி செய்த நபர்தானே. ரகசியப் பரிவர்த்தனைகளில் எனக்கு நன்றாக பிடிப்பு இருக்கிறது.

கொலை மிரட்டல் இருப்பதனால் டீஸ்டா வீட்டுக்கு வெளியே சி.ஐ.எஸ். எஃப். காவலுக்கு இருக்கிறது. ஏழு காவலர்கள் ஒரே நேரத்தில் காவலுக்கு இருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியே நானும் காத்து நிற்பேன். நான் ஓர் அட்வகேட் என்றுதான் அங்குள்ளவர்களிடம் சொல்லி இருந்தேன். டீஸ்டாவிடம் முன்கூட்டியே அதை வலியுறுத்திக் கூறி இருந்தேன் “ஒரு காவல் அதிகாரியுடனோ நண்பருடனோ பழகுவது போல் பேசக்கூடாது” என்று.

டீஸ்டாவிடம் ஒரு பி.ஏ. இருந்தார் - ராம்சந்த். முதல்முறை சென்ற போது பெஞ்சில் காத்திருக்கச் சொன்னார் ராம்சந்த். ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகுதான் டீஸ்டாவைச் சந்தித்தேன். இப்படி அடிக்கடி சந்தித்த நானும் ராம்சந்தும் நண்பர்களானோம். ஓய்வு பெற்றபின் ஒருமுறை நான் சென்றபோது முன்னாள் டி.ஜி.பி வருகின்ற விஷயத்தை டீஸ்டா ராம்சந்திடம் கூறி இருந்தார். ஜீப்பில் வந்த நான் இறங்கிச் சென்றபோது ராம்சந்த் என்னைப் பார்த்துக் கேட்டார், “ஏய்! நீ என்ன ஜீப்பில் வர்றே? டி.ஜி.பி எங்கே” என்று.

நான் சொன்னேன் “நான்தான் டி.ஜி.பி.”

அதிர்ந்துபோனார் அவர்.

இப்படி இரகசியமாகத்தான் எங்களால் ஏதாவது செய்ய முடியும்.

மோடிக்கு டீஸ்டா என்றாலே பயம். அனைத்தையும் வெளிக் கொண்டு வந்தவர் டீஸ்டாதானே. அவருடைய விடாமுயற்சியினால்தான் சி.பி.ஐயின் முன்னாள் இயக்குநர் ஆர்.கே. இராகவன் தலைமையில் தனிப்பட்ட விசாரணைக் குழுவை நியமித்து மூன்று மாதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 10 வழக்குகளை மீண்டும் ஆய்வுசெய்து வெளிப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டது. டீஸ்டாவைப் போல் தீரம் மிகுந்தவரை நான் சந்தித்ததே இல்லை. அவருடைய அமைப்பு வெளிநாட்டுப் பணம் பெறுவதேயில்லை. அதே நேரத்தில் வெளிநாட்டு நிதி பெற்றும் பெறாமலும் செயல்படும் ஏராளமான என்.ஜி.ஒக்கள் இங்கு இருக்கின்றன. அவர்கள் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக ஓய்வு பெற்ற என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவே பயப்படுவார்கள். அப்படியானால் அவர்களால் கலவரத்துக்கு இரையானவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்? நான் அரசியல் சட்டத்தையும் அடிப்படை நீதியையும் கடைப்பிடித்துப் பணியாற்றிய ஒரு சீனியர் அலுவலர். இருந்தும் என்னை அழைக்கவும் பேசவும் அவர்களுக்கு பயம்.

9
அரசு தோற்றது. நீதி வென்றது

2005 டிசம்பர் மாதம் என் வழக்கை வாதாடுவதற்காக மும்பையில் இருந்து வழக்கறிஞர் வந்து சேர்ந்தார். என். எச். சிர்வாய் என்ற மிகப் பிரபல வக்கீல். ஒருமுறை அவர் நீதிமன்றத்திற்குள் வழக்காட நுழைய வேண்டும் என்றால் ரூபாய் ஐம்பது ஆயிரம் கட்டணமாகக் கட்டவேண்டும். ஆனால் எனக்காக அவர் இலவசமாகவே வாதாடினார். ஏற்கனவே வழக்குகள் நடத்தி நடத்தி சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத நான் அவரை எப்படி எனக்காக ஏற்பாடு செய்ய முடியும். பொருளாதார நிலையில் நான் நல்ல நிலையில் இல்லை. கேரளாவில் முன்னாள் பிரபலமான அரசியல்வாதியாகவும் முதலமைச்சராகவும் இருந்த பட்டம் தாணுபிள்ளையின் பேத்திதான் என் மனைவி. மனைவிக்கு அவர் குடும்பச் சொத்தில் பங்கு கிடைத்த திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டின் வாடகை மட்டும்தான் அப்போதைய எங்களுடைய வருவாய்.

ஆனால் என்னைக் காப்பாற்றுவதை தனது முழுக்கடமையாக சிர்வாய் ஏற்றுக் கொண்டார். இவருடைய வாதத் திறமையின் சிறப்பினால் முதலில் எனது பதவி உயர்வு வழக்கை எடுக்க மறுத்த சி.ஏ.டீ. (சென்ட்ரல் அப்லட் டிரைபியூண்) பிறகு ஏற்றுக் கொண்டது. அப்போது அதற்கு எதிராக குஜராத் அரசாங்கம் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஸ்டே வாங்கியது. சிர்வாய் விட்டுக்கொடுக்கவில்லை. அடுத்த ஃபிளைட்டிலேயே டில்லியில் சென்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஸ்டேயைத் தள்ளுபடி செய்த உத்தரவைப் பெற்று வந்தார். அனைத்தும் அவரது சொந்த செலவில். அவர் எனது வழக்கை அவரது தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டார்.

2006 செப்டம்பரில் டிவிஷன் பெஞ்சில் இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து வழக்கு டில்லியில் உள்ள சி.ஏ.டீ. சேர்மனிடம் மாற்றப்பட்டது. அவர் முழு விசாரணையை மீண்டும் ஒரு முறை நடத்தும்படி கூறி, புகாரை குஜராத் சி.ஏ.டீ. சேர்மனிடம் அனுப்பினார். 2007 பிப்ரவரி 28 ஆம் தேதி தான் நான் ஓய்வு பெற வேண்டிய நாள். அன்று மதியம் ஒரு மணிக்கு சி.ஏ.டீ. உத்தரவு வெளியிட்டது. எனது பதவி உயர்வை நிராகரித்தது சட்ட விரோதமான செயல் என்றும், அனைத்து சலுகைகளும் நிலுவைகளும் எனக்கு அளிக்க வேண்டும் என்பதும்தான் அந்தத் தீர்ப்பு.

ஆனால் பணி ஓய்வு பெற்றதனால் சும்மா விடுவார்கள் என்று நினைத்தது தப்பாகிவிட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசாங்கம் மீண்டும் உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யச் சென்றது. ஆனால், 2007 செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்குகையில் உயர்நீதிமன்றம் உத்தரவை ஸ்டே செய்ய மறுத்தது என்பது மட்டுமின்றி மிகவும் கடுமையாக அரசாங்கத்தை விமர்சனம் செய்தது. “நீங்கள் பதவி உயர்வைத் தடுத்தது தவறு. இருந்தும் ஓய்வு பெற்ற ஒருவரை மீண்டும் தொல்லை கொடுக்கிறீர்கள். மேலும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்றால் அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் ஸ்டிரிக்சர் பாஸ் செய்ய வேண்டியிருக்கும்” என்று நீதிமன்றம் கூறியது.

நீதிமன்றத்தின் எச்சரிக்கையை யாருமே எதிர்பார்க்கவில்லை. வம்பில் சிக்கிவிடுவோம் என்று உணர்ந்ததுடன் உடனே வழக்கை திரும்பப்பெறுவதற்கு அரசாங்கம் தயாராகியது. பிறகு கூடிய விரைவில் நாங்கள் அவருக்குக் கடந்தகால அந்தஸ்துகளுடன் பதவி உயர்வு கொடுக்கத் தயார் என்று நீதிமன்றத்திற்கு எழுதிக் கொடுத்தது. அவ்வாறு அரசாங்கத்துக்கு எதிராக அந்த வழக்கில் நூறு சதவீத வெற்றி பெற்றேன். 2005 பிப்ரவரி 23 முதல் கடந்த காலத் தகுதிகளுடன் என்னை டி.ஜி.பியாக உயர்த்தியதாக 2008 மே மூன்றாம் தேதி பிரமோஷன் உத்தரவானது.

இதற்கிடையே இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. 2005 செப்டம்பர் மாதம் எனக்கு எதிராக புதிய ஒன்பது பாயின்ட்டுகள் உள்ள சார்ஜ் ஷீட் கொடுத்தார்கள். அரசாங்கத்துக்கு எதிராக நானாவதி கமிஷனில் வாக்கு மூலம் அளித்தது, பிறகு அவை அனைத்தும் பத்திரிகைகளுக்குக் கசியவைத்தது, உள்துறை செயலரின் கூட்டத்தை இரகசியமாக ரெக்கார்ட் செய்தது போன்றவைதான் முக்கிய குற்றச்சாட்டுகள். நானாவதி கமிஷன் முன்பாகக் கொடுத்த வாக்குமூலத்தைப் பயன்படுத்தி எவருக்கு எதிராகவும் கிரிமினல் - மற்றும் சிவில் வழக்கு தொடுக்க முடியாது என்று நான் வாதிட்டேன், துறை சம்பந்தப்பட்ட நடவடிக்கை மட்டும்தான் இது என்று அரசாங்கமும் வாதிட்டது. இறுதியில் தீர்ப்பு வந்தது. சி.ஏ.டீ.யின் வரலாற்றில் மிகவும் நீண்ட தீர்ப்பு. (174 பக்கம் கொண்ட தீர்ப்பு) நூறு சதவிகிதமும் எனக்கு சாதகமாக இருந்தது. “தீர்ப்பு ஸ்ரீகுமாருக்கு சாதகம்; அரசாங்கத்துக்கு வெட்கக்கேடு” என்ற ரீதியில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து முடக்கி வைத்திருந்த எனது பென்ஷன் மற்றும் சலுகைகளும் எனக்குக் கிடைக்கலாயிற்று.

அவர்கள் எனக்கு எதிராக எதற்காக வழக்குப் போட்டார்கள்? என்னைப் பெரும் பயங்கரவாதியாகத் தான் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் வர்ணித்தார். ஊழலோ, சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமான செயலோ, சலுகைகளோ, பணியில் தவறுகளோ, ஒழுங்கீனமோ அதுக்குக் காரணம் அல்ல. காலணி அணியாமல் வேலைக்கு வந்தால், சட்டையின் பட்டன் போடாமல் வந்தால் கூட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட சிறு காரணம் கூட என் பெயரில் இல்லை. எனது கடமையை நேர்மை தவறாமல் செய்தேன் என்பதுதான் என் மீதான குற்றச் சாட்டு. குஜராத்தைப் பொறுத்தவரையில் அது மிகப் பெரிய குற்றம்தான்.

இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கும் போது நீதிமன்றம் அரசாங்கத்திடம் சில விபரங்களைக் கேட்டது: 2002இல் கலவரம் நிகழும்போது இருந்த எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் நீங்கள் ஒரு வழக்குகூட போடவில்லை. இவரா கலவரத்தைத் தூண்டிவிட்டவர்? இந்த அப்பாவியான சிவில் சர்வென்ட் ஆன இவரா மிகப் பெரிய குற்றம் செய்தவர்? இந்த மனிதனா மிகப் பெரிய பாதகன்? இந்த மனிதனை ஓய்வு பெறச் செய்து ஒன்றரை ஆண்டுகளாகத் தொல்லை கொடுக்கிறீர்கள்; இன்னும் இதைத் தொடரத்தான் போகிறீர்களா?

நீதிமன்றத்தின் கேள்விகளைக் கேட்ட அட்வகேட் ஜெனரல் பயந்து போனார். நீதிமன்றம் மீண்டும் கேட்டது. “தொல்லைகளை இனியும் தொடரப் போகிறீர்களா?” “இல்லை, இது அரசாங்கத்தின் ஒரு விதியின் அடிப்படையில் செய்தது.”

நான் கூறுவது உண்மைதானே. அதனால்தானே எனக்கு பெர்ஜரி சார்ஜ் (நீதிமன்றத்தில் பொய் சொன்னதாக குற்றம் சுமத்துதல்) கொடுக்காமல் இருந்தனர். நான் சொன்னவற்றில் ஒரு வரியாவது பொய்யாக இருந்திருந்தால் எனக்கு பெர்ஜரி சார்ஜ் தந்து என்னை சஸ்பென்ட் செய்யலாம். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்பதனால் நான் கொடுத்த வாக்குமூலங்கள் உண்மையானவை என்பதும் நிரூபணமாகி விட்டது.

இவ்வளவு நடந்த பின் அரசாங்கம் தலை தாழ்த்தியது.

குஜராத் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் வாய்மொழியாகக் கேட்டதை நானும் கேட்கிறேன், “நிரபராதிகளைக் கொலை செய்யும் யதார்த்தங்களை அறிக்கை கொடுத்த நான்தானா மிகப் பெரிய குற்றவாளி?”

10
காட்டுமிராண்டித்தனம்

சூரத்தில் மகனுடன் வாழ்கிற, தூக்கம் இழந்த ஒரு தாய் இருக்கிறாள் - சாகியா ஜஃப்ரி. மாத்திரைகளின் உதவியின்றித் தூங்க முடியாத சாகியா, கலவரத்தில் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. எசான் ஜஃப்ரியின் மனைவியாவார். என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவர் கண்ணீர் விடுவார் - கணவனைக் காப்பாற்ற முடியாமல் போயிற்றே என்று புலம்பியவாறு.

அகமதாபாத்தின் கிழக்குப் பகுதியில் மேகானி நகரில் இருக்கிறது ஜஃப்ரி குடும்பம் தங்கி இருந்த குல்பர்கா சொசைட்டி. ஆறு ஆண்டுகள் கழிந்தும் பயமுறுத்தும் நிலையில் அனாதைபோல் நிற்கும் கட்டிடத்தையும் சுற்றுபுறத்தையும் அங்கே காணலாம். நுழைவாயில் கேட்டும், கதவுகளும் மேல் கூரையும் அனைத்தும் கருகிப் போன நிலையில். முப்பத்தி ஐந்துக்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்த தோட்டம்தான் குல்பர்கா சொசைட்டி. கலவரம் ஏற்பட்டபோது அருகாமையிலுள்ள சேரிகளில் குடியிருந்து வந்த முஸ்லீம்களும் பாதுகாப்பு தேடி அங்குவந்து சேர்ந்தனர். ஜஃப்ரியால் தங்களைப் பாதுகாக்க முடியும் என்றுதான் அவர்கள் நம்பினார்கள்.

கோத்ரா சம்பவத்தின் மறுநாள் - பிப்ரவரி 28 அன்று காலையில் ஒரு கும்பல் அங்கு முற்றுகை இட்டது. ஐந்து மணி நேரம் ஜஃப்ரி, சோனியாகாந்தி, முதலமைச்சர் நரேந்திர மோடி போன்ற பலரைத் தொடர்பு கொண்டார். போலிஸ் பாதுகாப்புக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

மூன்று மீட்டர்க்கு மேல் உயரமான மதில் சுவர்கள் அந்தத் தோட்டத்தைச் சுற்றி இருக்கின்றன. அருகாமையில் இருக்கின்ற வீடுகளில் இருந்து சமையல் கியாஸ் சிலிண்டர்களைத் தூக்கி வந்து வெடிக்க வைத்து அந்த மதில் சுவரைப் பிளந்து உடைத்தார்கள்.

“கொல்லாதீர்கள்” என்று வேண்டிய ஜஃப்ரியிடம் அவர்கள் பணம் கேட்டனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு ஜஃப்ரி வெளியே வந்தார். பணத்தைக் கொடுத்து திரும்பி நடக்கத் துவங்கிய ஜஃப்ரியை நான்கைந்து பேர் பிடித்து நிறுத்தினார்கள். இன்னொரு குழுவினர் கொடுவாளால் அவர் தலையை வெட்டிப் பிளந்தார்கள் பிறகு கைகளையும், கால்களையும் அறுத்தெறிந்தார்கள். ஒரு தடியைக் கொண்டு வந்து படுக்க வைத்து அவரை உயிருடன் எரித்தார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் கும்பல் உள்ளே புகுந்து மற்றவர்களையும் வெட்டிக் கொலை செய்து எரித்தனர். பெண்களைக் கொல்வதற்கு முன் அவர்களை வன்புணர்ச்சி செய்தனர். ஜஃப்ரியின் மகள் அமெரிக்காவில் இருந்ததனாலும் மனைவி வெளியூர் சென்று இருந்ததனாலும் உயிர் பிழைத்தார்.

ஏனைய இடங்களில் செயல்பட்டது போல் முஸ்லிம்களை அவர்களுக்கே சொந்தமான கியாசும், மண்ணெண்ணெயும் எடுத்துத்தான் தீ வைத்தனர். நெருப்பை வன்முறையாளர்கள் பிரதான ஆயுதமாக மாற்றியதற்கு காரணம் இருந்தது, முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் பிணத்தை எரிப்பது இஸ்லாத்துக்கு எதிரானது. அதனால்தான் அந்த முறையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

நான் கொடுத்திருந்த நான்கு வாக்கு மூலங்கள்தான் ஜஃப்ரியின் மனைவி கொடுத்த வழக்கின் அடிப்படை. ஜஃப்ரி தங்கள் பாதுகாப்புக்கு மோடியை போனில் அழைத்தபோது மறுமுனையில் இருந்து மோடி ஆபாசமாகத் திட்டியதாகக் கேட்டுநின்றவர்கள் சொல்கிறார்கள். 2002 பிப்ரவரியில் முதல் முறையாக மோடி ராஜ்கோட்டில் இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது, எதிர் வேட்பாளருக்காக பிரச்சாரம் நடத்தியவர்களில் முதன்மையானவர் ஜஃப்ரி. அதுதான் மோடியின் விரோதத்துக்குக் காரணம். ஆனால் இப்போது வேறுமாதிரியான பிரச்சாரம் நடக்கிறது. ஒவ்வொருமுறை கலவரம் ஏற்படும் போதும் லைசன்ஸ் பெற்றுள்ள துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்துக்களை ஜஃப்ரி சுட்டுக் கொலை செய்திருந்தார் என்று சிலர் கூறுகின்றனர். அவர்களிடம் “நீங்கள் ஏன் அப்போது புகார் செய்யவில்லை” என்று கேட்டால் “அதெப்படி நடக்கும் சார்!” என்பதுதான் அவர்களின் பதில். ஜஃப்ரி அநியாய வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தார் என்பது அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டு. ஏராளமானவர்களை அவ்வாறு கசக்கி பிழிந்திருந்தார் அதனால் தான் மக்கள் வெறுப்புக்கு ஆளானார் என்பதும் சும்மா நின்றிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து ஜஃப்ரி துப்பாக்கி எடுத்து சுட்டார் என்பதும் அதனால் மக்கள் அவரைச் சூழ்ந்து விட்டார்கள் என்பதும் மூன்றாவது கதை.

1977-இல் காங்கிரஸ் குஜராத்தில் எல்லா இடத்திலும் தோல்வியைச் சந்தித்தபோது அகமதாபாத்தில் வெற்றி பெற்றவர் ஜஃப்ரி. ஒரிஜினல் வலதுசாரி கம்யூனிஸ்ட். பிறகு ஜஃப்ரி காங்கிரஸில் சேர்ந்தார். மிகவும் நல்ல பின்னணி கொண்டவர். மற்றவர்களெல்லாம் பெரிய பங்களாக்களில் அல்லது ஃபாம் ஹவுசில் நகரத்தில் வசிக்கையில், நகர் எல்லையில் நெருக்கமான காலனியில் உள்ள தன்னுடைய வீட்டில் வாழ்ந்தவர் அவர். கேரளாவில் பி.கே. வாசுதேவன் நாயருடைய புல்லுவழி என்ற கிராமத்தில் இருக்கும் வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். ஒரு பழைய வீடு. ஜஃப்ரியைப் பற்றி நான் சிந்திக்கும் போதெல்லாம் பி.கே.வி.யைப் பற்றியும் நான் சிந்தித்துப் பார்ப்பதுண்டு.

பேர்ஷ்யாவில் இருந்து வந்த போரா முஸ்லிம்கள்தான் குல்பர்கா சொசைட்டியில் இருந்தவர்கள். கலவரத்தின்போது அவர்களின் வீட்டு வேலைக்கு வந்தவர்களும், விவசாயக் கூலிகளாக வந்தவர்களும்தான் வன் புணர்ச்சி செய்தவர்களில் அதிகம். “என்பிள்ளையாக நினைத்திருந்த நீயா இப்படிச் செய்யறே?” என்ற அவர்களின் கேள்வி யார் காதிலும் விழவில்லை. அதற்குப்பிறகு பலரையும் கொன்று எரித்தார்கள். முழுமையாக எரிந்து சாம்பலாகி அடையாளம்கூட இல்லாமல் செய்தபிறகுதான் பல இடங்களிலும் வன்முறையாளர்கள் பிரிந்து சென்றார்கள்.

சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு பத்திரிகையாளர் அகமதாபாத்தில் ஒரு ஃபோட்டோ கிராபருடன் ஜஃப்ரியை எரித்துக் கொன்ற குல்பர்கா சொசைட்டிக்குச் சென்றார். அந்தக் கட்டடத்தின் புகைப்படம் எடுக்கச் சொன்னபோது ஒன்றும் புரியாதது போல் அவர் விழித்து நின்றார். எதார்த்தத்தில் அவர் பயந்து தான் நின்றிருந்தார். அந்தப் புகைப்படக்காரர் சொன்னார், “சார், என் உயிர் போய் இருக்கும், அங்கு தான் என்னை நீங்க அனுப்புகிறீர்கள் என்று முன்னமே தெரிந்து இருந்தால் நான் போயிருக்கமாட்டேன்” அவர் சொன்னது வாஸ்தவம்தான். வி.எச்.பி. ஒற்றர்களின் வளையத்திற்குள்தான் தற் போது அந்தப் பகுதிகள் முழுவதும். அங்கு வருபவர்களை அவர்கள் கவனமாகக் கண்காணிக்கிறார்கள். அந்தப் பகுதியில் எஞ்சியிருந்த முஸ்லிம்களும் எங்கேயோ வெளியேறிச் சென்று விட்டனர்.

11
ஊடகங்களின் இருமுகங்கள்

நானாவதி கமிஷனில் 423 பக்கங்கள் கொண்ட நான்கு வாக்குமூலங்களும் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் (சிட்) இன் ஒரு ஸ்டேட்மென்ட்டும் நான் கொடுத்தவை. Ôசிட்Õ விசாரிக்கின்ற பத்து வழக்குகளில் ஒன்று கோத்ரா வழக்காகும். கோத்ரா வழக்கு ஒரு சதித்திட்டம் என்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஜி.பி.யிடம் அன்றைய ஐ.பி.யின் தலைவர் கேட்டிருந்தார் அல்லவா? அது அன்றைய மத்திய அரசின் அக்கறையாக இருந்தது.

நரோத பாட்யா பகுதியில்தான் அன்று எனது தலைமையிலான எஸ். ஆர்.பி. கேம்ப். அங்கேதான் அகமதாபாத்தில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் கூட்டுக் கொலைகளில் ஒன்று நடைபெற்றது. கலவரம் துவங்கிய தினம் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் எங்களிடம் வந்து அவர்களை கேம்புக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றனர். கேம்பை அவர்களுக்காகத் திறந்துவிட நான் உத்தரவிட்டேன். மாலையானதும் மேலும் அதைப்போன்று சில குடும்பங்கள் அடைக்கலம் கேட்டு வந்த நேரத்தில் நான் அங்கு இல்லை; வீட்டுக்கு சென்றிருந்தேன். அதனால் அங்கிருந்தவர்கள் அவர்களுக்குக் கதவைத் திறந்து கொடுக்கவில்லை; அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். அவர்கள் 170 பேர்கள் இருந்தனர். படையினர் அவர்களை கதவு திறந்து ஏன் காப்பற்றவில்லை? மேலிடத்தில் இருந்து எவரோ தலையிட்டது காரணமாக இருக்கலாம். ‘சிட்’ ஆய்வு செய்கின்ற வழக்கில் நரோத பாட்யாவும் உள்ளடங்கும். எனவே இந்த இரண்டு வழக்குகளிலும் எனக்குத் தெரிந்த தகவல்களையும் விபரங்களையும் நான் ‘சிட்’டில் தெரியப்படுத்தி இருக்கிறேன்.

அது போலவே “இந்துக்களின் பழிவாங்கும் தீ சுடர் விட்டு எரியும். அதைத் தடுக்க வேண்டாம்” என்று மோடி கூறிய விபரம் டி.ஜி.பி சக்கரவர்த்தி என்னிடம் கூறி இருந்தார். அந்தக் காரியத்தையும் நான் தெளிவுச்சான்றாகக் கொடுத்து இருக்கிறேன். அவ்வாறு ‘சிட்’ விசாரணை செய்கின்ற பத்து வழக்குகளிலும் என்னால் பல்வேறு அத்தாட்சிகளைக் கொடுக்க முடிந்தது.

கலவரவேளையில் போலிசில் இருக்கின்ற முஸ்லிம் ஊழியர்களுக்குக்கூட அவர்களின் குடும்பத்தினரைக் காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டி வந்தது. எங்கள் எஸ்.ஆர்.பியிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். முஸ்லிம் போலிசுகள் அவரவர் குடும் பத்தினரை போலிஸ் கேம்பில் தங்க வைக்குமாறு கலவரத்தின் முதல் நாளே அறிவுறுத்தினேன். அதனால் எவருக்கும் ஆபத்து விளையவில்லை.

டீஸ்டா செதெல்வாத்தின் மும்பை மையமான “சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டீஸ் அண்ட் பீஸ்” தான் எனக்கு பக்க பலமாக இருந்தது. கலவரம் நிகழும்போது இங்கு வந்து ஆபத்தான வழிகளில் பயணித்து டீஸ்டாவும் அவர் குழுவினரும் கண்டெடுத்த

அத்தாட்சிகள் இல்லாமல் போயிருந்தால் எனது போராட்டங்கள் இலக்கை அடைந்திருக்காது. டீஸ்டாவின் முயற்சிகளின் பயனாக உச்சநீதிமன்றம் மிகவும் பிரபலமான இரண்டு வழக்குகளை மஹாராஷ்ட்ராவில் விசாரணை செய்யக் கோரியது. பெஸ்ட்பேக்கரி வழக்கும், பல்க்கிஸ் பானு வழக்கும். இவை இரண்டிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். தண்டனை பெற்றவர்களில் ஒரு காவல் அதிகாரியும் உட்பட்டிருந்தார். நீதி வென்றது. தீர்ப்பை வழங்கிய 2004 ஏப்ரலில் நீதிமன்றம் கூறியது: “பெஸ்ட் பேக்கரியில் குழந்தைகளையும், பெண்களையும் எரித்துக் கொல்லும்போது நவீன காலத்து நீரோ சக்கரவர்த்திகள் வீணை வாசித்துக் கொண்டு இருந்தார்கள்.”

அத்தாட்சிகள் இல்லை என்று கூறிமுடித்த வழக்குகள் இரண்டாயிரத்துக்கு மேல் இருக்கின்றன. இந்திய வரலாற்றில் முதல்முறையாக சுமார் இரண்டாயிரம் வழக்குகளை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டபோது டீஸ்டா முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. தேசம் அவரை வணங்க வேண்டும். நீதியையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதில் உறுதியும் அர்ப்பணிப்புமுடைய ஃபீல்ட் மார்ஷல் தான் அவர்.

டீஸ்டாவைப் போன்ற மனித உரிமை செயல்பாட்டினருடன் எனக்கு என்றுமே துணையாக இருந்தவை ஊடகங்களாகும். முக்கியமாக தேசிய ஊடகங்கள். ஊடகங்களின் இன்னொரு முகத்தையும் பார்க்க வேண்டி வந்தது என்பதுதான் குஜராத் கலவரத்தின் மற்றொரு துயரமான விஷயம். கலவரத்தின் முதல் நாட்கள் ஒன்றில் ஒரு குஜராத்தி பத்திரிகை வெளியிட்ட செய்தி இவ்வாறு இருந்தது, ‘கலோர் பகுதி காலனியில் 12 இளம் பெண்களின் மார்பகங்களை அறுத்து எடுத்து தூர எறிந்தார்கள்.’ இரண்டு நாட்களுக்கு பின் அவர்களே எழுதினர், ‘அன்று வெளிவந்த செய்தி தவறு என்று இப்போதுதான் எங்களுக்கு தகவல் கிடைத்தது.’

அறிந்தே செய்ததுதான். இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு எதிராக உளவுத்துறை தலைவர் என்ற முறையில் நான் அந்தந்த நாட்களில் உடனுக்குடன் அறிக்கை அனுப்பி இருந்தேன். இந்த விஷயம் நானாவதி கமிஷன் கோப்புகளில் பார்த்தால் தெரியும். ஆனால், இன்று வரை அவைகளின் அடிப்படையில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதன் மறுபக்கம்தான் தேசிய ஊடகங்கள். அவர்கள் கலவரங்களின் காட்சிகளை வெளியுலகிற்குக் கொண்டு வந்தார்கள். இங்கு சந்தர்ப்பத்துக்கு உகந்த இன்னொரு கேள்வி. எதனால் எந்தக் காட்சியையும் இதற்குப் பொறுப்புள்ள போலிஸ் படமெடுக்கவில்லை? என்பதுதான், எடுத்திருந்தால் அதற்குப் பொறுப்பானவர்கள் அகப்படுவார்கள் என்பதனால்தான்.

12
மக்கள் திரள்

கடந்த சட்டசபை தேர்தலுக்குமுன் என் டி. டி.வி ஒரு டாக் ஷோவை அகமதாபாத்தில் நடத்தினார்கள். நரேந்திர மோடிக்கு எதிராகப் பேசுவதற்கு அவர்கள் என்னைத்தான் அழைத்தனர். நான்கைந்து முஸ்லிம் பிரமுகர்களும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தனர். அதில் ஒரு பிரமுகர் முஸ்லிம் வியாபாரி நான் மோடியைப் பற்றிச் சொன்னதை எதிர்த்தார் என்பது மட்டுமல்ல மோடிக்கு ஆதரவாகவும் பேசினார். “ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அது உண்மைதான். ஆனால் அதுமட்டுமல்ல கடந்த ஓராண்டுக் கால மோடியின் வளர்ச்சிச் செயல்பாட்டினால் எனக்கு ஒரு கோடி ரூபாய் லாபம் கிடைத்து இருக்கிறது” இவ்வாறு நீண்டது அவரது பேச்சு. மோடியின் கடந்த பிறந்த நாளை, அங்குள்ள முஸ்லிம் வியாபாரிகள் கூட்டாக மிகப் பெரிய கேக்கை வெட்டிக் கொண்டாடினர். இவர்களை அனைவரையும் தனியாகக் கூப்பிட்டுக் கேட்டால் “அதுதானே எங்களுக்குப் பாதுகாப்பு” என்று கேட்பார்கள்.

என்.டி.டிவியின் உரையாடல் முடிந்த உடனேயே சூழ்நிலை தாறுமாறாகியது. மோடியை எதிர்ப்பதற்கு இவன் யார் என்ற மட்டில் சூழ்ந்து கொண்டனர் பி.ஜே.பி. யினர். நிகழ்ச்சியைக் கேட்க வந்தவர்களில் அதிகமானவர்கள் மோடியின் தீவிர ஆதரவு ஆட்கள். ஏதாவது பேசினால் அவர்கள் கூச்சல் போடுவார்கள் “உனக்கு ஏன் இராஜிநாமா செய்ய முடியாதா? உனக்கு திரும்பிப் போக ஏன் தோன்றவில்லை?”  போன்ற கேள்விகள்தான் அவர்கள் என்னைக் கேட்டது. சிலர் வந்து என் சட்டையைப் பிடித்து இழுக்கவும், மோதவும் தொடங்கினர். பி.ஜே.பி.யின் தேசிய ஆலோசகர் நிம் பால்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். விவாதம் முடிந்த உடன் அவர் என்னை அழைத்து ஹோட்டலின் சமையல் கூடப் பக்கமாக வெளியேற்றி என்னை என் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார். தேர்தலுக்கு முன் அடிஷனல் டி.ஜி.பியைத் தாக்கினார்கள் என்ற செய்தி வந்தால் கட்சிக்கு நல்லதில்லை என்பதனால் தான் இந்தக் கரிசனம். மாறாக என் மீது கொண்ட அக்கறையல்ல.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் டி.ஜி.பியின் வழிகாட்டலின் பேரில் என் வீட்டுக்கு போலீஸ் காவல் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் காவலுக்கு நிற்க வைக்கப்பட்டுள்ளவர்களின் முதன்மைப் பணி எனது பாதுகாப்பைவிட எனது செயல்களையும் திட்டங்களையும் மேலிடத்திற்குத் தெரிவிப்பதுதான். நான் அதை சட்டைச் செய்யவில்லை. இதற்கு நடுவேயும் என் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தெரியும். முன்னே டீஸ்டாவைத் தொடர்புகொண்டு இருந்ததும் இரகசியமாகத்தானே.

பிறகு பல சந்தர்ப்பங்களிலும் எனது நிலைப்பாட்டை சங்க் பரிவார் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டதாக எனக்குத் தெரியும். அபூர்வமாக மிரட்டல் கடிதங்கள் எனக்குக் கிடைத்து இருக்கின்றன. தனிப்பட்ட முறையிலான எதிர்ப்பைக் கண்டு நான் பயப்படவில்லை. மோடி என்னைக் கொலை செய்வதற்கு ஆளை ஏற்பாடு செய்வார் என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் பிரதம மந்திரி அங்கியை தைத்து நடக்கின்ற நபர் மோடி. என்னைவிடப் பெரிய பலபேரை எதிர்கொள்வதற்கே அவருக்கு நேரம் போதாமல் இருக்கிறது.

ஃபிரண்ட் லைன் பத்திரிகையின் குஜராத் நிருபர் டியோன் புன்ஷாத். அவர் ‘எக்ஸ்பெரிமென்ட்ஸ் வித் ஹெய்ட்ரட் இன் குஜராத்’ என்ற நூலை எழுதினார். வெளியீட்டுக்கு 25 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார். டியோனிடம் நான் சொன்னேன். யாரும் வரமாட்டார்கள், யாருக்கும் அந்த அளவு தைரியம் இருக்காது என்று. யாருமே வரவில்லை. சர்விஸில் இருக்கும் உத்தியோகஸ்தர்களில் இருந்து வந்தது நான் மட்டுமே. இறுதியில் நிகழ்ச்சிக்கு நானே தலைமை தாங்க வேண்டியிருந்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பேசினார்கள். என்.ஜி.ஓக்கள் யாரும் வரவில்லை.

மோடிக்கு எதிராகவோ இந்துத்துவத்திற்கு எதிராகவோ ஒரு திரைப்படத்தைக்கூட குஜராத்தில் வெளியிட முடியாது. நர்மதை அணை போராட்டக் குழுவுக்கு சாதகமாக ஏதோ சொன்னதற்காக அமீர்கானின் படத்தை வெளியிட சம்மதிக்கவில்லை. ‘பர்ஸானியா’ என்ற பெயரில் நஸ்ருதீன் ஷாவின் ஒரு திரைப்படம். ராஹீல்தொலாக் கித் இயக்கிய ஆங்கிலத் திரைப்படம். ஜஃப்ரியைக் கொலை செய்த குல் பர்கா சொசைட்டியில் அஷர்மோடி என்ற பத்து வயது பார்சிச் சிறுவனைக் காணவில்லை. ஜஃப்ரியிடம் தன் தாய் தந்தையருடன் அடைக்கலம் தேடியவன் அவன். அவனுக்கு என்ன நிகழ்ந்தது என்று இன்றும் தெரியவில்லை. அவன் தாய் என்னை எப்போது பார்த்தாலும் அழுவார். அவனை மையப்படுத்தியது தான் அந்தத் திரைப் படம். அதையும் வெளியிட சம்மதிக்கவில்லை. அரசாங்கம் நேரடியாக எதையும் செய்வதில்லை. எதையும் தடை செய்யவும் இல்லை. மக்களை, கூட்டத்தை வைத்து தங்களின் காரியத்தை சாதித்தல்தான் அவர்களின் பாணி. யாராவது போலிசிடம் கேட்டால் “எங்களால் என்ன செய்ய முடியும். மக்கள் விரும்பவில்லை.” என்றுதான் பதில் வரும்.

13
மார்க்சிஸ்டுகளும் காங்கிரஸ்காரர்களும்

எனது தொலைபேசி இப்போதெல்லாம் மௌனம்தான். எவரும் என்னை அழைக்கமாட்டார்கள். எனது தொலை பேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பதுதான் அனைவரும் பயப்படக் காரணம். இன்டலிஜென்ஸி பியூரோவில் இருந்தபோது ஏராளமானவர்களின் தொலைபேசிகளை அரசாங்க வழிகாட்டுதலின் பெயரில் டேப் செய்திருக்கின்ற நபர்தான் நான். அதனால் எனக்கு அது தெரியும். எனக்கு வருகின்ற கடிதங்கள் திறந்து வாசிப்பதும், நகல் எடுப்பதும் எனக்குத் தெரியும். ஒட்டிய கவரை சுவடு தெரியாமல் திறக்கக்கூடிய கருவிகள் ஐ.பி.யிடம் இருக்கின்றன.

ஐந்து கோடி செலவு செய்து நரேந்திர மோடியின் அலுவலகத்தில் தொலைபேசி டேப் செய்கின்ற கருவியை வாங்கினார்கள். அதுவும் எங்கிருந்து? இஸ்ரேலில் இருந்து. எந்த போனையும் டேப் செய்ய இதனால் முடியும்.

வழக்கில் நான் வெற்றி பெற்றபோது குஜராத்தில் எனது சக உத்தியோகஸ்தர்களான 72 அதிகாரிகளில் ஒருவர் மட்டும்தான் என்னை அழைத்துப் பேசியவர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எவரும் அழைக்கவில்லை. தேர்தல் கமிஷன் நியமித்த சைக்கியா என்ற அலுவலர் மட்டும்தான் அழைத்தார். தேர்தல் முடிந்தவுடன் அவரை இட மாற்றமும் செய்தார்கள். சைக்கியாவிடம் நான் கேட்டேன் “தாங்கள் சுயப்பாதுகாப்புக்குத் தேவையானது செய்திருக்கிறீர்கள் இல்லையா? என் தொலைபேசி டேப் செய்யப்படுகிறது.” மீட்டிங்குகளில், பார்ட்டிகளில் எங்கே வைத்து முஸ்லிம் அதிகாரிகளின் மனைவிமார்கள் என் மனைவியைப் பார்த்தாலும் ‘விஷ்’ செய்து உடனே இடத்தை விட்டுச் செல்வார்கள்.

நான் பெற்றுக் கொண்ட இரண்டு போலிஸ் அவார்ட்களுக்கும் என் பெயரை சிபாரிசு செய்தவர்கள், கேரளா மாநிலத்தில் எனது மேலதிகாரிகளாக இருந்தவரான பி.ஆர். சந்திரன், சத்தார் குஞ்ஞு இருவரும் தான். அவர்கள் இருவரும் “நீ இங்கு அப்பாவிமாதிரி இருந்தே, எப்படி இப்படியெல்லாம் செயல்பட்டே?” என்று கேட்டார்கள். இருவரிடமும் நான் நடைபெற்ற விபரங்களை எடுத்துக் கூறினேன். “ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா!” என்று இருவரும் என்னைப் பாராட்டினார்கள்.

உண்மை கூறுவதானால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் பூகம்பம் வந்தாலும், நாய் கடித்தாலும் அது சம்பவிக்கலாம். அரசியலமைப்பிடம் உள்ள நன்றி விசுவாசம் என்றும், ஆன்மீயம் என்றும், கூறுவதெல்லாம் வெறும் அலங்காரத்துக்கு மட்டும்தான். பச்சையாகச் சொல்வதானால், சகோதர நேசம்தான் என்னை பயமற்றவனாக்கியது. நிச்சயமாக இதயத்தின் பிரதிபலிப்புதான். மூளையின் அல்லது புத்திசாலித்தனத்தின் பிரதிபலிப்பல்ல. அதனால்தான் இதை எல்லாம் செய்ய முடிந்தது. நான் மிகப் பெரிய சாதனைகள் செய்து இருக்கிறேன் என்று நானே கூறவில்லை. ஆனால் இந்த அளவுக்கு செய்தவன் நான்தானா என்று எப் போதும் நம்ப முடிந்ததில்லை.

சமீபத்தில் என் தாய் மறைந்தார். ஆயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்டவர்கள் சடங்குகளுக்கு வந்தனர். வந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மார்க்ஸிஸ்டுகள்தான்; பக்கா மார்க்சிஸ்டுகள். ஆனால் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் அவர்களில் எவரும், ஒருவர்கூட நான் எடுத்த நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் கூறியது: “சாரே...! இருந்தாலும் மோடி, ஆள் திறமைசாலியில்ல?” என்றுதான்.

நிலைமை இதுதான் என்றாலும் குஜராத்தில் பெரும் பகுதி மக்கள் நான் மேற்கொண்ட நிலைப்பாட்டை அங்கீகரிக்கக் கூடியவர்கள்தான். ஆனால் எவருக்கும் அதை வெளியே சொல்ல தைரியம் இல்லை. நான் எங்கு சென்றாலும் மக்கள் சொல்வார்கள்: “சார்! உங்க நிலைப்பாடு நிஜமானதுதான். ஆனால் என்ன செய்யமுடியும் சார்! உண்மைக்கு விலை இல்லை சார்!” அதாவது அவர்களால் ஒரு பைசாவுக்கான ‘ரிஸ்க்’கூட எடுக்க முடியாது. ஆனால் அதைச் செய்கின்ற நபர் மீது அவர்களுக்கு என்றும் மதிப்புதான்.

நான் இந்து மதத்தின் மூலச் சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டு அதற்காக வாழ்கிறவன். ஓர் அதிகாரி என்ற நிலையில் பார்த்தால் நமது அரசியலமைப்பின் மூலசித்தாந்தங்களுக்கும், இந்து மத மூல சித்தாந்தங்களுக்கும் எந்தவித வேற்றுமையும் இல்லை. மதச் சார்பின்மை, நீதி போன்றவை யாவும் உள்ளன. எனவே இந்துத்துவம் என்பது இந்து மதத்துக்கே ஆபத்தானது. மதச்சார்பின்மைதான் அனைத்துக்குமான மருந்து. மதச்சார்பின்மையால் மட்டுமே குஜராத்தை காப்பாற்ற முடியும்.

கேரளத்தில் எனக்கு விருது கொடுத்த பிறகு பாலமோகன் தம்பி சார் என்னிடம் கேரளாவுக்கு வந்துவிடச் சொன்னார். ஆனால், இடதுசாரிகள் என்னை கேரளாவிலுள்ள எந்தப் பதவிக்கும் அழைக்கவில்லை. கேரளாவில் ஒரு பதவி தருகிறேன் என்று கூறி அழைத்தது உம்மன் சாண்டி ஒருவர் மட்டும்தான். அதற்குள் நான் வழக்கின் சிக்கலில் அகப்பட்டு இருந்தேன். அதனால் அது வேண்டாம் என்று சொன்னேன்.

சில ஆண்டுகளுக்கு முன் மோடியுடன் வேறுபட்டு நிற்கின்ற சந்தர்ப்பத்தில் ஒருமுறை கேரளா சென்றபோது காங்கிரஸ் பிரமுகர்களை நான் போய்ப் பார்த்தேன். கேரளாவில் ஏதாவது ஒரு பொதுத் துறை நிறுவனத்திலாவது ஒரு பொறுப்பு கிடைத்தால் தேவையற்ற இந்த யுத்தத்திற்கு நான் நிற்க வேண்டியதில்லை என்று நினைத்து இருந்தேன். காங்கிரஸ் தலைவர்களின் அறிவுரை விசித்திரமாக இருந்தது; டில்லியில் சென்று தங்கியிருந்து தினமும் சென்று அஹமத் படேலைப் பாருங்கள். இறுதியில் அவர் ஏதாவது துறையை ஏற்பாடு செய்து தருவார்.

“சரி, அப்படிச் செய்கிறேன்” என்று கூறிய நான் தொடர்ந்து “தற்போது அதுக்கு நேரமில்லை” என்றேன். அதுக்கு காரணம் கேட்டார்கள். அவர்களிடம் நான் கூறினேன்  “காசி, ராமேஸ்வரம், கைலாசம் போன்ற இடங்களுக்கு ஒரு பயணம் மேற்கொள்கிறேன். அதை முடித்தபின் அப்படிச்செய்கிறேன்” என்றேன். டில்லி போய் தவம் இருப்பதை விட காசிக்குப் போவது மேலானது என்று நான் கூறியதற்கு அர்த்தம் அவர்களுக்குப் புரிந்து இருக்குமோ என்னவோ.

எனது 35 ஆண்டு சேவையில் ஒரு கப் தேனீருக்கான ஊழல் நான் செய்யவில்லை. எனக்கு சொந்தமாக கார் இல்லை. வழக்கை நடத்துவதற்கு இருந்த காரை விற்க வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட என்னை தலைவர்களின் வீடுகளில் ஏறி இறங்கச் சொல்பவர்களைப் பார்த்து அனுதாபப்படுவதைத் தவிர என்ன செய்ய முடியும்?

அதே வேளையில் சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியனும், பத்திரிகையாளருமாக இருந்த முன்னாள் கேரளா சட்டசபை சபாநாயகர் கங்காதரன் பெயரில் கொடுக்கப்படும் விருது எனக்கு வழங்கியது கேரளம்தான் என்று நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். சி.அச்சுதமேனன், கே.ஆர். கௌரி, எம்.எஸ்.சாமிநாதன், டாக்டர். எம்.எஸ்.வல்யத்தான் போன்ற மகான்களுக்குக் கொடுத்த அந்த விருதுக்கு எளியவனான என்னைத் தேர்ந்தெடுத்ததுக்கு மேலான வெகுமதி என்ன வேண்டும்?  விருதுத் தொகையாகக் கிடைத்த ரூபாய் 25000. நான் டீஸ்டாவின் நிறுவனத்துக்கு நன் கொடையாக வழங்கினேன்.

14
காக்கா பிடித்தல்

என்னுடன் பணியாற்றுகின்றவர்களில் பலர் என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பது. “சார்! எதுக்காக நீங்க மோடியுடன் சண்டை போட்றீங்க?” என்று. அவர்களிடம் நான் கூறுவேன், எனக்கும் மோடிக்கும் இடையில் இழுபறிச் சண்டை ஒன்றும் நடக்கவில்லை. முஸ்லிம் கர் பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, கருவைக் கசாப்பு செய்வதை நேரில் கண்ட என்னால் பொறுக்கடியவில்லை. அவலப்படும் அவர்களின் புகார்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது எனக்கு பொறுக்க முடியவில்லை. கலவரத்துக்கு பிறகு நீதி, நியாயத்தையும் சட்ட ஒழுங்கையும் தலை கீழாக்கிப் புரட்டினார்கள். நான் இதை எல்லாம் நேர்மையுடன் எழுதிக் கொடுத்தேன். அவ்வளவுதான்.”

“எல்லாம் சரி. நீங்க அது செய்யாமல் இருந்திருக்கலாம். இப்ப பாருங்க அதே மனுஷன் மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார் பார்த்தீங்களா?” மீண்டும் வராமல் இருந்தால் பிரச்சினை இல்லை. அதாவது நிலையான ஒரு கொள்கைப் பிடிப்பே தேவையில்லை.
“மோடிசார் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவார் என்று உங்களுக்கு முன்கூட்டி தெரிந்து இருந்ததா சார்?”

“தெரிந்து இருந்தது”

“தெரிந்தும் எதுக்காக இதைச் செய்தீங்க?”

உன்னை எம்.ஏ வரை படிக்க வைத்து ஐ.பி.எஸ். பெறவைத்து இருந்தும் எதற்காக இந்த மடத்தனத்தைக் காண்பித்தாய் என்பதுதான் இந்த உரையாடலின் பச்சையான அர்த்தம். என் ஊரில் என்னிடம் மிகவும் விருப்பம் கொண்டவர் உட்பட அனை வரும் கேட்டிருந்தார்கள் “ஸ்ரீகுமாரே! இந்த அளவுக்கு அபத்தம் காட்டியிருக்க வேண்டுமா? சும்மா தாளத்துக்குத் தகுந்ததுபோல் சுவடு வைத்து இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது இல்லையா?”

குஜராத்தில் உயர்ந்த பொலிஸ் ஆஃபிசராக இருந்தவர் கேரளாவுக்குச் சென்று சொன்னார் “நான் அங்கு ஏராளமானவர்களின் உயிரைக் காப்பாத்தினேன்” என்று. ஏன் இதை எல்லாம் அவர் நானாவதி கமிஷன் எதிரில் சொல்லவில்லை? என்று ஒருவர்கூட திருப்பிக் கேட்காமல் இருந்தது பாக்கியம்! இப்போது ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்-இன் விசாரணை நடை பெறுகிறது. எதனால் விபரங்கள் கொடுக்காமல் இருக்கிறீர்கள்? ஒரு வார இதழில் தெளிவான நேர்காணல் வந்தது. அதன் பிரதியொன்றை ஒரு கடிதத்துடன் கமிஷனுக்கு எதனால் அனுப்பக் கூடாது? இதுதான் கெட்டிக்காரர்களின் உலகம்.

எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகள் ஒழிக்க வேண்டும் என்பதுதான். எங்குதான் அவர்கள் நெஞ்சுரத்துடன் எழுந்து நின்று காரியங்களை அழுத்தமாகக் கூறி இருக்கிறார்கள்? சோஃபிஸ்டிகேட்டட் சைக்கோ ஃபான்ஸ் ஆக மாறி இருக்கிறார்கள். இதைவிடச் சிறந்தது உள்ளூர் ஆட்களை உதவி கலக்டர் போன்ற பதவிகளுக்கு எடுப்பதுதான். அவர்கள் தங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவருபவர்கள். கேரளாவில் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருந்தது என்றால், என் ஊர் மக்கள், உடன் படித்தவர்கள், அரசியல் கட்சிகள் போன்று ஏராளமானவர்கள் தலையிட்டு இருப்பார்கள். ஆபத்தில் இருந்து காப்பாற்ற யாராவது இருந்திருப்பார்கள்.

கேவலம் ஒரு லோக்கல் டி.எஸ்.பிக்குக் கிடைக்கின்ற பாதுகாப்புகூட எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஆல் இந்தியா சர்விஸ் என்பது மிகவும் பாதுகாப்பில்லாதது. அதனால்தான் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் பெற்றவர்கள் முன் கூட்டித் தெரிந்து காக்காய் பிடிக்கிறார்கள். அவர்கள் பொறுப்புக்கு வந்த உடன் அதிகாரப் பதவிகளில் யார்யார் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டு அவர்களின் பட்டியலில் இடம்பெற முயற்சி மேற்கொள்கிறார்கள். முன்கூட்டியே காக்காய் பிடித்தலில் இந்த உத்தியோகஸ்தர்கள் மிக மும்முரமாக போட்டியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சரின் இங்கிதம் என்னவென்று முன்கூட்டித் தெரிந்து கொண்டு அவர் வாய்திறப்பதற்குள் அதைத் தயாரித்து கோப்புகளில் வைத்து அவர் மேஜையில் கொண்டு வந்து வைப்பார்கள். முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் கையெழுத்து போட்டால் போதும். எதாவது விவாதம் அதன்மீது ஏற்பட்டால் முதலமைச்சர் கூறுவார், “என்னால் என்ன செய்ய முடியும். இப்படி ஒரு பிரப்போசல் இருந்தது. அதை நான் ஏற்றுக் கொண்டேன். அவ்வளவே.”

இதைப்போன்ற நீச நோக்குடைய பிரப்போசல்களின் விளைவு என்ன என்பதைச் சொல்கிறேன். முஸ்லிம்கள் சங்க பரிவாரின் வன்முறை பற்றி கொடுத்த வழக்குகளில் பப்ளிக் பிராசி கியூட்டராக வந்தது வி.எச்.பி.யின் தலைவர்கள். அதை வைத்து அரசாங்கத்தைக் குற்றம் சொல்ல முடியாது. காரணம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தான் பப்ளிக் பிராசிகியூட்டரைக் கண்டுபிடித்து தீர்மானித்து அனுப்பி வைத்தது; மோடியின் - சங்க பரிவாரின் Ôகுட்புக்Õகில் இடம்பிடிப்பதற்காக மாவட்ட ஆட்சியினர் செய்தது தான் இது. பிற்காலத்தில் கமிஷன், அல்லது ஜீடிஷியல்பாடி அதைப் பற்றிக் குற்றம் சாட்டினாலும் கேள்வி கேட்பதானாலும் முதலமைச்சராலும் மற்றவர்களாலும் சந்தேகத்துக்கு இடமின்றித் தப்பிக்க முடியும். “மாவட்ட நியமனம் செய்ய முடியும்?” என்பதாக இருக்கும் அவர்களின் கேள்வி. இப்பேர்பட்ட உத்தியோகஸ்த பேர்வழிகளின் தேவை என்னவாக இருக்கும்? காக்கா பிடித்தலில் போட்டி தான் நடைபெறுகிறது. அவைகளின் உச்ச நிலைகள்தான் குஜராத்தில். இன்று குஜராத்தில் நடைபெறுவது, நாளை மற்ற மாநிலங்களிலும் பரவலாகலாம்.

பிரித்தாளும் சூழ்ச்சி முழுமையடைந்துகொண்டிருக்கிறது, குஜராத்தில் பல்வேறு நகரங்களிலும் - முஸ்லிம் ஏரியா, இந்து ஏரியா என்று. எதிர்காலத்தில் அவர்களுக்குள் மிசைல்கள் ஏவும் நிலைமை வரலாம். முஸ்லிம்கள் என்ற வர்க்கத்திடம் எவ்வித அனுதாபமும் தேவையற்றது என்பதுதான் இங்குள்ள இந்துக்களின் ஒரு பகுதியினரின் நிலைப்பாடு. இங்கு பணியாற்றும் மலையாளி ஆசிரியைகள் கூறுகிறார்கள், “இந்துக் குழந்தைகளின் பெற்றோர்கள் இங்கு அட்மிஷனுக்கு வரும்போதே எங்களிடம் கூறுவது, எக்காரணம் கொண்டும் எங்க பிள்ளையை எந்த முஸ்லிம் பிள்ளைகளின் அருகிலும் அமர வைக்கக் கூடாது என்பதுதான்”. கேரளாவில் இதை நினைத்துப் பார்க்க முடியுமா?

இரண்டாவது விஷயம், முஸ்லிம்கள் பயந்தாங்கொள்ளிகளாக உள்ளனர். அந்தக் காரணத்தினால்தான் கிடைக்க வேண்டிய உரிமைகளை மீட்டெடுக்க அவர்களால் இயலாமல் போகிறது. ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும், கோரிக்கைகள் கொடுப்பதற்கும் அவர்களால் முடிவதில்லை. என்னிடம் பல்வேறு முஸ்லிம் சகோதரர்களும் மதிப்புடனும் அன்புடனும் சொல்வதுண்டு: “நீங்க பெரிய ரிஸ்க் எடுத்தீங்க! இருந்தும் என்ன பயன் சார்? உண்மை அதுதானே.”

12
இறுதி வெற்றி அருகே

குஜராத்திலுள்ள பெரும்பான்மையான அதிகாரிகளைப் போன்று முஸ்லிம் என்றால் வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற சிந்தனைப் போக்கு என்னிடம் ஒரு பொழுதும் இருந்தது இல்லை. அதுக்கு காரணம், என் தாத்தா பாலராமபுரம் ஜி.ராமன் பிள்ளைதான். அவர் சுதந்திரப் போராட்டவீரரும், காங்கிரஸ் பிரமுகருமாக இருந்தவர். முஸ்லிம்களுடன் சமத்துவமாகவும் சம பாவத்துடனும்தான் அவர் பழகி வந்தார். தாத்தாவின் செல்லப்பிள்ளையாகவே நான் வளர்ந்தேன். முஸ்லிம்களை இன்னொரு பிரிவினர் என்று மனதார அவர் ஒருபோதும் நினைத்ததில்லை, தாத்தாவிடம் இருந்த அந்த மனநிலை தான் எனக்கும் கிடைத்தது. நாளை பதவி உயர்வு மட்டும் அல்ல, வேறு எதைத் தருகிறேன் என்று சொன்னாலும், மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களைக்கூட நான் இப்படிக் கொலை செய்யமாட்டேன்.

குஜராத் கலகக் காலம் எனக்குத் துன்பியல் காலமாக இருந்தது. உண்மையில் கூடுதல் டி.ஜி.பி (இன்டலி ஜென்ஸ்) என்ற பதவியில் இருந்து நான்கு வாக்குமூலங்களும் ஏராளமான அறிக்கைகளும் கொடுத்ததன் வாயிலாக எனது கேரியரை நாசப்படுத்தினேன் என்றாலும் ஒரு மனிதன் என்ற நிலையில் ஆனந்தமல்ல; பரமானந்தத்தைத்தான் நான் அனுபவித்தேன். அனுபவிக்கிறேன். நான் செய்ய வேண்டியவற்றைச் செய்துவிட்டேன். என் மனச்சாட்சி எனக்கு நேராக ஒருபோதும் துப்பாக்கியை நீட்டாது.

நான் மிகப் பெரிய கடவுள் நம்பிக்கையாளன். கடவுளின் ஒத்துழைப்பால்தான் உளவுத்துறைத் தலைவனாக நான் நியமனம் செய்யப்பட்டேன். இல்லாவிட்டால் இதை எல்லாம் வெளிப்படுத்த எனக்கு வழி இருந்திருக்காது. அதைப் போன்று ஒரு கமிஷன் ஏற்படுத்தியதால் சான்றுகள் கொடுக்க முடிந்தது. கூடுதல் டி.ஜி.பி. என்றில்லை எவ்வளவும் உயர் பதவியில் ஒருவருக்கும் சுயமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இவை எதையும் வெளிக் கொண்டுவந்திருக்க முடியாது. கமிஷன் வந்ததால் தான் இவை சாத்தியம் ஆனது. முதலில் 74 பக்கமுடைய அறிக்கை கொடுத்தும் நடவடிக்கை இல்லாததனால், 2002 ஜுன் 15க்கும் செப்டம்பர் 20 மற்றும் 28 தேதிகளில் இன்டலிஜென்ஸ் அறிக்கை கொடுத்து இருந்தேன். ஒவ்வொரு அறிக்கைகளிலும் பரிகார நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்,  இல்லை என்றால் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்றும் சம்பவங்கள் சிக்கலாகும் என்றும் முன் எச்சரிக்கை கொடுத்து இருந்தேன். உங்களுடைய உளவுத்துறைத் தலைவர் இந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை அளித்த பிறகும் ஏன் நீங்கள் அதன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தீர்கள்?- இந்தக் கேள்விக்கு பதில் இல்லை. நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு தீங்கு செய்யப் போவது இவைதான்.

ஸ்பெஷல் இன்வெஸ்டிகேடீவ் டீம் (சிட்) விசாரணைக்கு வருவதும் மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. தெருவில் அவிழ்த்துவிடப்பட்டவன் முறையாளர்களிடம் “உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்ற உத்தரவாதம் கொடுத்து தெருவில் இறக்கிவிட்டு தான் அவர் கலவரத்தை நிகழ்த்தினார். ஏதோ சில வழக்குகளிலாவது கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தால், மோடியின் வார்த்தைகள் மதிப்பிழந்து போய்விடும்!

அதற்கான சட்டப் போரில்தான் நான் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். டீஸ்டாவும் அவர் சங்கமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தீவிரப் போரில் அவர்களுடன் என்னையும் இணைத்து இருக்கிறேன். சுமார் இரண்டாயிரம் வழக்குகள் மீள் விசாரணைக்காகக் காத்துக் கிடக்கின்றன. இரண்டாயிரத்துக்கு அதிகமான வழக்குகள் மறுவிசாரணைக்கு உத்தரவு போடுவது என்பது இந்தியாவின் நீதி நியாய அடிப்படையின் வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்வாகும். அது மோடியின் தலைக்கு மேலே காலம் முழுவதும் தொங்கப் போகிற மிரட்டல் வீச்சரிவாள்தான். அதிகமாக ஒன்றும் தேவையில்லை. ‘சிட்’ விசாரணைக்கு எடுத்திருக்கின்ற பத்து வழக்குகளிலாவது தண்டனை வழங்கப் பட்டால் போதும்; நரேந்திர மோடி வீழ்ந்து விடுவார். அந்த வீழ்ச்சியின் பிறகு ஏற்படுகின்ற புதிய உதயம்தான் எனது போராட்டங்களின் வெற்றியாகப் போகிறது.

மலையாளத்தில்: கே.மோகன்லால்

தமிழில் : ஜோப்ஸன்

உதவி : ஸ்ரீபதி பத்மனாபா
நன்றி : மலையாள மனோரமா ஓணம் சிறப்பிதழ் 2008

No comments:

Post a Comment