Monday, March 2, 2015

மிகுந்த ஆர்வத்தைத் தூண்டும் அமித்ஷா மீதான போலி என்கவுன்டர் வழக்கு கோப்புகள்

 

வியாழன், 19 பிப்ரவரி 2015 16:37

 

மிகுந்த ஆர்வத்தைத் தூண்டும்
அமித்ஷா மீதான போலி என்கவுன்டர் வழக்கு கோப்புகள்
- உத்தம் சென்குப்தா

(மும்பை பிராச்சி பிங்லே பிளம்பர், டில்லி அனுராதாராமன், போபால் கே.எஸ்.ஷயானி ஆகியோருடன் இணைந்து)

பொது அறிவுக்கு ஏதோ ஒரு வகையில் எதிரானது என்ற ஆசை காட்டி ஏமாற்றும் சொற்றொடர் பா.ஜ.கட்சியின் தேசிய தலைவர் அமித் அனில்சந்ர ஷா வின் செவிகளில் இனி வர இருக்கும் நீண்டதொரு காலத்திற்கு ஒலித்துக் கொண்டே இருக்கக்கூடும். ஷொராபுதீன் ஷெய்க் போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவித்து , 2014 ஆம் ஆண்டின் இறுதிநாளைக்கு முந்தைய நாள் மும்பை சிபிஅய் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தபோது இச்சொற் றொடர் கூறப்பட்டது.

மத்திய புலனாய்வுத் துறையின ரால் ஷாவுக்கு எதிராக அகமதாபாத்தி லிருந்து கொண்டு வரப்பட்ட  நட்சத் திர சாட்சிகளான தசரத் படேல், ராமன் படேல் ஆகிய இரண்டு கட்டுமானத் தொழிலதிபர்களும் ஷாவுக்கு நெருக் கமான காவல்துறை அதிகாரிகள் தங்களை அச்சுறுத்தி தங்களிடமிருந்து பணம் பறித்தனர் என்றும், தங்களை அச்சுறுத்த ஷொராபுதீனின் கூலிப் படையினரை அனுப்பினர் என்றும் புலன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள். குறிப்பாக, தற்போது பிணையில் இருக்கும்  அபே சூடசாமா மற்றும் டி.அய்.ஜி.வன்சாரா என்ற இரு அதிகாரிகளில்  குஜராத் அரசால் மீண்டும் பணியமர்த்தப்பட்ட சூடசாமா தனது வாக்குமூலத்தில் ஷாவின் பெயரை விட்டுவிட்டது மட்டுமல் லாமல், பணம் பறிக்கப்பட அச்சுறுத்தப் பட்டவர்கள் அனைத்து அதிகாரங் களையும் படைத்த மாநில உள்துறை அமைச்சருடன் தொலைபேசி மூலம் பேசவைக்கப்பட்டனர் என்றும் கூறினார். இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண் டும் என்று 2010 இல் உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகு ஷொராபுதீன் ஷெய்க் பற்றி வாக்குமூலம் அளிப் பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கும் படி தங்களுக்கு ஷா அறிவுறுத்தினார் என்றும் அவர்கள் கூறினர்.

ஷாவின் அதிகாரிகளுடன் தாங்கள் நடத்திய பல பேச்சு வார்த் தைகளில் ஒன்றை இந்த கட்டுமான தொழிலதிபர்கள் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்திய குற்ற வியல் தண்டனை சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி மூன்று வாக்கு மூலங்களையும், 164 ஆவது பிரிவின் படி ஒரு வாக்குமூலத்தையும்  அளித் துள்ளனர். 161 இன் கீழ் காவல்துறை யிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா; ஆனால் 164 இன் கீழ் ஒரு நீதிபதி முன் அளிக்கப்பட்ட வாக்கு மூலம் சாட்சியாக ஏற்றுக் கொள்ளப் படும்.
என்றாலும், நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலதி பர்களின் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்ள மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.பி.கோசாவி மறுத்துவிட்டார். பல வாரங்கள், மாதங் களுக்குப் பின்னர் அவர்களால் அளிக்கப் பட்ட மூன்று வாக்குமூலங்களும் எள் ளளவும் மாற்றமின்றி ஒரே மாதிரி இருப் பதாக 30-12-2014 அன்று அளித்த தீர்ப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இது பொது அறிவுக்கு ஏதோ ஒரு வகையில் எதிராக இருப்பதாகத் தோன்றுகிறது என்று தனக்குத் தோன்றியதாகக் கூறிய நீதிபதி , அவர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளாமல்  தள்ளுபடி செய்து விட்டார். இத்தகைய சாட்சியங்கள் காவல் துறை யினரால் சொல்லிக் கொடுத்துக் கூறப் பட்டவை என்ற அளவில் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய நீதிபதிகளை அவை நிர்பந்திக்கின்றன என்று பல வழக்கு ரைஞர்கள் கூறுகின் றனர். இது போல்தான் இந்த வழக்கிலும் ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. என்றாலும், கட்டுமானத் தொழிலதிபர்கள் தங்களது வாக்குமூலங்களில் புதியதாக சிலவற்றைச் சேர்த்து இருக்கின்றனர் என்று தனது அதே தீர்ப்பில் நீதிபதி கோசாவி கூறியிருப்பது அவரது கூற்றில் உள்ள முரண்பாட்டைக் காட்டுவதாக உள்ளது. இந்த இரண்டு வாதங்களையும் ஏற்றுக் கொள்வது ஏதோ ஒரு வகையில் பொது அறிவுக்கு எதிரானதாக இருக்கக் கூடும் என்று உச்சநீதிமன்ற வழக்குரை ஞர் ஒருவர் கிண்டலாகக் கூறினார்.  ஷொராபுதீன் ஷெய்க்கும் அவரது மனை வியும் கடத்திச் செல்லப்பட்ட நாளிலும், பின்னர் அவர்கள்  2005 இல் கொல்லப் பட்ட நாளிலும், அச் செயலைச் செய்த காவல் துறை அதிகாரிகளுடன் ஷா பலமுறை தொலை பேசியில் தொடர்பு கொண்டிருந் தார் என்ப தற்காக மத்திய புலனாய்வுத் துறை அளித்த தொலைபேசி பேச்சுக்களின் ஆவணங்களில் அவரை அச்செயலுடன் தொடர்புபடுத்துவதற் கான நியாயம் எதுவும் இருப்பதாகத் தான் காணவில்லை என்று கோசாவி கூறி யுள்ளார்.

மத்தியப் புலனாய்வுத் துறை அளித்திருந்த வெளியில் சென்ற, உள்ளே வந்த தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், அவை எத்தனை வினாடிகள் பேசப்பட்டன என்பது உள்ளிட்ட விவ ரங்கள் களத்தில் என்னதான நடக்கிறது என்பதை ஷா அறிந்திருந்தார் என்றே காட்டுகின்றன. உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு உள் துறை அமைச்சர் வழிகாட்டும் அறிவு ரைகள் வழங்குவது எதிர்பார்க்கக் கூடியதே என்றாலும்,  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் இல்லை. என்றாலும் இந்த தொலைபேசி அழைப் புகள் எதனையும் மெய்ப்பிக்கவில்லை என்ற ஷாவின் கூற்றை மத்தியப் புலனாய்வுத் துறை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. துடிப்புடன் செயல்படும் அமைச்சர் என்பதால் ஷா கள அதிகாரி களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள விரும்புபவர் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்திற்குக் கூறினார். இந்த வாதத் தில் நியாயம் இருப்பதாகக் காண்பதாகக் கூறிய நீதிபதி, அதிகாரம் மிகுந்த அமைச் சர் ஒருவர் களப் பணி அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது வழக் கத்திற்கு மாறானது என்று கருத சிறப்பு புலனாய்வுத் துறைக்கு உரிமை உள்ளது என்றாலும், உண்மையில் தீவிரவாதம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் போது ஷாவின் இந்த நடத்தையைப் பற்றி கேள்வி கேட்பதற்கு எந்த காரணமு:ம இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.

இந்த வாதம் இரண்டு வழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட இயன்றதாகும். களப்பணி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருக்கும் செயல்திறம் மிகுந்த அமைச்சர் ஷா தனது கண் களையும் காதுகளையும் எப்போதுமே திறந்து வைத்திருப்பார் என்று கூறுவதை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத் தில்,  அவரது அறிதலுடனேயே போலி என்கவுன்டர்கள் நடந்து கொண்டிருந்தன என்பதையும் அவர் நிச்சயமாக அறிந்தே இருக்க வேண்டும் என்று கூறப்படு வதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண் டும். ஷொராபுதீன் ஷெய்க், அவரது மனைவி  கவ்செர்பி, குற்றத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன் டர்களில் கொல்லப்பட்டதை குஜராத் மாநில காவல்துறை தானே நேரடியாக விசாரணை நடத்தி கண்டுபிடித்தது அல் லவா? 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இரண்டு தனித் தனியான குற்றப்பத்திரிகைகளில், காவல் துறை அதிகாரிகளின் புகழ், பெயர் மற்றும் பதவிஉயர்வுக்காக இம்மூவரும் கொல் லப்பட்டனர் என்று குஜராத் காவல் துறை கூறியிருக்கிறது. மாநில அரசுக்கு விசாரணை நடத்த ஆணையிட்ட உச்சநீதிமன்றம், இந்த அறிக்கையி னால் மனநிறைவடையாமலேயே இருந்தது. உச்சநீதிமன்றத்திற்கு அளிக் கப்பட்ட அறிக்கைகளிலும், குற்றப் பத்திரிகைகளிலும்  உள்ள குறை பாடுகள், முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, மத்தியப் புலனாய்வுத் துறை இதில் உள்ள பெரிய சதித்திட்டம் பற்றியும், குஜராத் மாநில உயர் அதி காரிகள் இந்த சதியில் ஈடுபட்டிருப்பது பற்றியும்  விசாரிக்கவேண்டும் என்று 2010 இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட் டது. ஷா உள்ளிட்ட 38 பேர் மீது குற்றச்சாட்டுகள் பிறப்பிக்கப்பட்டு, 710 அரசு சாட்சிகளின் சாட்சியங்கள் உள் ளிட்ட 32,000 பக்க குற்றப்பத்திரி கையை குப்பை என்று கூறி ஒதுக்கிய நீதிபதி கோசாவி இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக ஷா மீது போடப்பட்டது என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். அதனையடுத்து, மத்திய புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறையின் பங்களிப்பு பற்றிய கேள்விகளை எழுப்பிய நீதிபதி  குற்றம் சாட்டப்பட்ட இரு உயர் காவல் துறை அதிகாரிகளான பி.சி.பாண்டே மற்றும் ராஜ்குமார் பாண்டியன் ஆகி யோரை வழக்கில் இருந்து  விடுவித் துள்ளார்.

ஒருவருக்கு துயரமும் மூவருக்கு மகிழ்ச்சியும்

நாக்பூர் செல்வதற்காக மும்பையில் ரயில் ஏறிய 52 வயது பிரிஜ்மோகன் லோயா அமைதியான வார இறுதி நாட்களைக் கழிக்கலாம் என்று எதிர் நோக்கியிருந்தார். ஷொராபுதீன் ஷெய்க் போலி என்கவுன்டர் வழக் கில் விசாரணை நீதிபதியாக அவர் ஜூலை மாதத்தில் பொறுப்பேற்றி ருந்தார்;

அது முதற்கொண்டே அவரது நேரம் பதற்றம் மிகுந்ததாகவே கழிந்து வந்தது. 20-12-2014 ஞாயிற்றுக் கிழமை யன்று நாக்பூரில் நடைபெற உள்ள திருமணம் ஒன்றில் அவர் கலந்து கொள்ள இருந்தார். அன்றிரவு மாநில அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு செய்வாய்க்கிழமை அன்று நீதிமன்றத்திற்குத் திரும்பி வர அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் திங்கள் கிழமை காலை அவர் கண் விழிக் கவேயில்லை. தூக்கத்திலேயே கடுமை யான மாரடைப்பின் காரணமாக அவர் இறந்துவிட்டார். அவரது திடீர் இறப்பு மும்பையில் இருந்த நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர்களுக்கும் அதிர்ச்சி யையும், சோகத்தையும் அளித்தது. நீதிபதி லோயா நல்ல உடல் நலத்துடன் இருந்தார் என்று அவருக்கு நெருக்க மான வட்டாரங்கள் தெரிவித்தன என்று   2-12-2014 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

நல்ல உடல் நலத்துடனும், எப்போதுமே மிகுந்த உற்சாகத்துடனும் காணப்படும் நீதிபதி லோயா என்று வழக்குரைஞர் விஜய் ஹையர்மாத் கூறினார்.

----------------

குஜராத் டி.அய்.ஜி. வன்சாரா கடிதம்

போலி என்கவுன்டர் நடத்துவது மாநில அரசின்  ஒரு கொள்கை யாகவே இருந்தது என்பதை ஒப்புக் கொண்டு குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அப்போது சிறையில் இருந்த குஜராத் டி.அய்.ஜி. வன்சாரா 2013 செப்டம்பரில் எழுதிய கடிதம்

இந்த அரசு இருக்க வேண்டிய இடம் ஒன்று டலோஜா மத்திய சிறையாகவோ அல்லது சபர்மதி மத்திய சிறையாகவோதான் இருக்க வேண்டும். தொடர்ந்து என்கவுன்டர்களை நடத்திக் கொண்டிருந்ததன் மூலம் இந்த அரசுபலத்த ஆதாயங்களை அறுவடை  செய்துள்ளது.

----------------

2009 இல் குஜராத் டி.அய்.ஜி. ராஜ்நிஷ்ராய் அளித்த வாக்குமூலம்

வன்சாரா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை அவர் கைது செய்த பிறகு அவரது ஆண்டு ரகசிய குறிப்பேட்டு அறிக்கை மிக நன்று என்பதில் இருந்து சராசரி என்று குறைக்கப்பட்டது. நார்கோ சோதனை நடத்துவதற்கு அவர் அனுமதி கோரிய அடுத்த நாளே அவர் ஷொராபுதீன் வழக்கு அவரிடம் இருந்து மாற்றப்பட்டுவிட்டது.

----------------

காரணம் தெரியாத கொலைகள்

22.11.2005 ஷொராபுதீன் ஷெய்க்கும், அவரது மனைவி கவுசர்பியும், துளசிராம் பிரஜாபதியும் ஆந்திர மாநிலம் ஜஹீராபாத்தில் இருந்து குஜராத் காவல்துறையினரால் பிடித்து வரப்பட்டனர்.

23.11.2005 ஷெராபுதீனும், கவுசர்பியும் குஜராத் மாநில வய்காட் மற்றும் பரூச் வழியாக டிஷா பண்ணை வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

25.11.2005 அர்ஹாம் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷொராபுதீன் ஷெய்க் கொல்லப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர் அவரது மனைவி கவுசர்பியும் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் மட்டும் இன்னமும் விளங்கவில்லை.

ஷொராபுதீன் கொல்லப்பட்ட 23ஆம் தேதியும் அதற்கு முன்னும் பின்னும் குஜராத் மாநில குற்றப் பிரிவு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா

பேசிய தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை

23.11.2005    5 அழைப்புகள்

24.11.2005     3 அழைப்புகள்

25.11.2005    5 அழைப்புகள்

29.11.2005    1  அழைப்பு

(தொடரும்)

நன்றி: தி அவுட்லுக் 16-2-2015 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://www.viduthalai.in/readers-choice/133-2012-02-18-07-12-19/96508-2015-02-19-11-11-36.html#ixzz3TFQogRor



மிகுந்த ஆர்வத்தைத் தூண்டும் அமித்ஷா மீதான போலி என்கவுன்டர் வழக்கு கோப்புகள் - 2

வெள்ளி, 20 பிப்ரவரி 2015 15:28

நேற்றைய தொடர்ச்சி...
- உத்தம் சென்குப்தா

(மும்பை பிராச்சி பிங்லே பிளம்பர், டில்லி அனுராதாராமன், போபால் கே.எஸ்.ஷயானி ஆகியோருடன் இணைந்து)

தொலைதூரத்தில் உள்ள டில்லிக்கு அருகில் உள்ள லத்தூருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப் பட்டு எரி யூட்டப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளு மன்றத்திற்கு எதிரில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

நாளிதழ்களின் உட்பக்கங்களில் இந்த நிகழ்ச்சி எந்த வித முக்கியத்துவமும் இன்றி சாதாரணமாக இடம் பெற்றது. அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 4 அன்று உஜ்ஜயினியிலிருந்து ஷொராபுதீன் ஷெய்க்கின் சகோதரர் ருபாபுதீன் இந்தியத் தலைமை நீதிபதிக்கு இவ் வாறு எழுதுகிறார்: இந்த நிகழ்வினால் மிகுந்த கவலைக்குள்ளாகியிருக்கும் நான் பலத்த அதிர்ச்சி அடைந் துள்ளேன். வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிபதியின் அகால மரணத்தால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன். அடுத்து அப்பதவிக்கு வர இருக்கும் நீதிபதிகளை  அச்சுறுத் தும் நோக்கத்துடன் நடத்தப்பெற்ற ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அது இருக்கக்கூடும் என்ற அய்யம் எனக்கு ஏற்படுகிறது.

அவரது அய்யங்களை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. என்றாலும் உஜ் ஜனியில் வாழும் அந்த விவசாயி நீதி கிடைக்கவேண்டும் என்று 9 ஆண்டு காலமாக சோர்வின்றி தொடர்ந்து போராடி வருகின்றார்.  இந்த வழக்கை விசாரித்து வரும் ஜே.டி. உட்பட்டை மும்பை நீதி மன்றம் 5 மாதங்களுக்கு முன் ஜூன் 2014 ல் பூனாவுக்கு மாற்றி விட்டது என்ற செய்தியை அறிந்ததும் அவர் மனம் தளர்ந்து போனார். இந்த வழக்கை விசாரிக்கத் துவங்கும் அதே நீதிபதிதான் அந்த வழக்கை விசாரித்து முடிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் மிகத் தெளிவாக ஆணை பிறப்பித்திருப்பதை நினைவு படுத்தி மும்பை உயர்நீதி மன்ற நிர்வாகக் குழுவின் கவனத்தை ஈர்த்து எழுதிய கடிதத்தில் ருபாபுதீன் தனது கவ லையை வெளிப் படுத்தியிருந்தார்.

ஆனால், 2013 மே மாதத்தில் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கிய நீதிபதி உட்பட் ஒரு வருட காலத் துக்கும் குறைவாகவே அப்பதவியில் நீடித்தார். மத்தியில் பா.ஜ.க. ஆட் சியைக் கைப்பற்றிய  ஒரு மாதத் திற்குள்ளாக உட்பட் மாற்றப்பட்டு விட்டார்; அவருக்குப் பின் வந்த லோயாவும் இறந்துபோனார்.

இந்த ஓராண்டு காலத்தில் இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றம் மேற் கொண்டபோதும், அதற்குப் பின்னும், அமீத் ஷா ஒரு முறை கூட, வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப் பட்ட அன்று கூட, நீதிமன்றத்துக்கு நேரில் வந்ததேயில்லை. சர்க்கரை நோயாளி என்பதால் அவரால் பயணம் செய்ய முடியவில்லை என்றோ, டில்லியில் தனது பணிகளில் அவர் மூழ்கியுள்ளார் என்றோ ஏதோ ஒரு சாக்குபோக்கைக் கூறி அவரது வழக்கறிஞர் ஷா நேரடியாக நீதிமன்றத்துக்கு வருவதில் இருந்து தவிர்ப்பு  அளிக்கவேண்டும் என்று எழுத்து மூலமாக அல்லாமல், வாய்மொழி மூலமாக மட்டுமே தெரிவித்து தவிர்ப்பு வாங்கி வந்துள்ளார்.

6-6-2014 அன்று ஷா நீதிமன்றத்திற்கு நேரில் வராததற்கு தவிர்ப்பு வழங்கிய நீதிபதி உட்பட் ஷா ஒரு நாள் கூட நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக நேரில் வந்தது கிடையாது என்பது பற்றிய தனது அதிருப்தியை வெளியிட்டதுடன், ஜூன் 20 அன்று விசாரணைக்கு ஷா தவறாமல் நேரில் வரவேண்டும் என்று ஆணை யிட்டார். என்றாலும் 20 அன்றும் கூட ஷா நீதிமன்றத்திற்கு நேரில் வரவில்லை;  நீதிமன்றத்திற்கு நேரில் ஷா வராமல் இருப்பதற்கு ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை நீங்கள் கூறி தவிர்ப்பு கேட்டு வருகிறீர்கள் என்று கூறிய நீதிபதி உட்பட் வழக்கு விசாரணையை ஜஓன் 26க்கு ஒத்தி வைத்தார். ஆனால் அவர் 25 ஆம் தேதியே பூனாவுக்கு மாற்றப் பட்டு விட்டார்.

தனது மகள் பூனாவில் படித்துக் கொண்டிருப்பதால், தனக்கு பூனாவுக்கு மாறுதல் வேண்டும் என்று நீதிபதி உட்பட் கோரியதாக மும்பை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.  நீதிபதி உட்பட்டை இவ் வழக்கின் விசாரணைக்காக மறுபடியும் திரும்ப அழைக்கவேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதி பதிக்கு தான் எழுதிய கடிதத்தில் ருபாபுதீன் கேட்டிருந்தார். காலம் தாழ்த்தி அக்கோரிக்கைக்கு ஆகஸ்ட் 28 அன்று ருபாபுதீனுக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அனுப்பியிருந்த பதிலில், தங்கள் கோரிக்கை 3 நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழுவின் முன் வைக்கப் பட்டபோதிலும், உட்பட்டின் மாறுதலைத் திரும்பப் பெறுவதற்கான சரியான காரணம் எதனையும் அக்குழு காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

உட்பட்டுக்குப் பின் வந்த நீதிபதி லோயா தாராளமனம் படைத்தவராக ஒவ்வொரு விசாரணை நாளிலும் நேரில் வருவதில் இருந்து ஷாவுக்கு தவிர்ப்பு அளித்து வந்தார். ஆனால், தனது இறுதியான குறிப்பு ஒன்றில் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யும் நாள் வரை நேரில் ஆஜராவதில் இருந்து ஷாவுக்கு தவிர்ப்பு வழங்கப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஷாவிடம் மென்மை யாக நடந்து கொண்டதாக தோன்றினாலும்  குற்றச்சாட்டிலிருந்து ஷாவை விடுவிக்கும் எண்ணம் லோயாவுக்கு சற்றும் இல்லை என்று தெரிகிறது.

லோயாவுக்குப் பிறகு வந்த நீதிபதி கோசாவி வழக்கை டிசம்பர் 4 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே அவருக்கு வேறுவிதமான எண்ணங்கள் இருந்துள்ளன. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க ஷா செய்துகொண்ட விண்ணப் பத்தையே நீதிபதி கோசாவி முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். ஷாவின் வழக்கறிஞர்கள் தொடர்ந்து டிசம்பர் 15-16 இரு நாட்களும் முன்வைத்த வாதங்களைக் கேட்டார். அதன்பின் மத்தியப் புலனாய்வுத் துறை வழக்கறி ஞரின் வாதத்தையும் கேட்டார். பதினைந்து நாட்களுக்குப் பின், டிசம்பர் 30 ம் தேதியன்று அவருக்கு முன்பு இருந்த நீதிபதி லோயா நாக்பூரில் இறந்த நாளி லிருந்து சரியாக ஒரு மாதத்திற்குள்,  ஷாவின் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்துவிட்டார்.

விசாரணை என்னும் சங்கடத்திற்கு ஆளாகாமல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க விண்ணப்பம் செய்துகொள்ள மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உள்ள உரிமை போலவே ஷாவுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அத்தகைய மனுக்களை விசா ரணை நீதி மன்றங்கள் மிகமிக அரிதாகவே ஏற்றுக் கொள்கின்றன என்று சில புகழ்பெற்ற நீதித்துறை வல்லுநர்கள் கூறு கின்றனர். அவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு போதிய காரணங்கள் உள்ளன. விசாரணைக்கு முன்பே அனைத்து சாட்சியங்களையும் சீர்தூக்கிப் பார்ப்பது இயலாது என்பதுதான் அந்த காரணம்.

இவ்வழக்கின் சாட்சியங்களைப் பரிசீலித்த பிறகு, இந்த என்கவுன்டருக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருக்கிறது என்பது தெரியவருகிறது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்திருந்த நிலையில்,  ஷாவுக்கு எதிரான அரசியல் சதி இது என்று விளக்கம் அளித்து நீதிபதி கோசாம்பி அவசரம் அவசரமாக ஷாவை விடுவித்து இந்த தீர்ப்பை அளித்ததுதான் அவர்களை மேலும் அதிர்ச்சி அடையச் செய்தது. சந்தேகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படு கின்றன; ஆனால் சாட்சியங்களின் அடிப்படையில்தான் தண்டனை அளிக்கப்படுகிறது என்று உச்சநீதி மன்ற வழக்கறிஞர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார். ஆவணங்களில் அளிக் கப்பட்டுள்ள அனைத்து சாட்சியங் களை விசாரிப்பது மற்றும்  அவர்கள் அளித்த வாக்கு மூலங்கள் மற்றும் உண்மைகளுக் கிடையே   உள்ள முரண்பாடுகளை வெளிக் கொண்டு வருவதற்காக அவர்களை குறுக்கு விசாரணை செய்வது  என்ற  நோக்கம் கொண்டதுதான் நீதிமன்ற விசாரணை யாகும்.

எனவே விசாரணைக்கு முன்பே குற்றச்சாட்டிலிருந்து ஒரு வரை நீதிபதி விடுவிப்பது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வாகும்.
இந்த நீதிமன்ற ஆணையை எதிர்த்து மத்திய புலனாய்வுத் துறை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்; அங்கு அந்த மேல் முறையீடு பல ஆண்டுகள் நிலுவை யில் இருக்கக்கூடும். குற்றச் சாட்டி லிருந்து விடுவிப்பது என்ற தொடக்க பிரச்சினைகளைப் பற்றி இறுதி முடிவு எட்டப்படுவதற்குள் தெய்வநீதியே கிடைத்துவிடக்கூடும் என்று ஒரு வழக்கறிஞர் கேலியாகக் கூறினார்.

மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் 2013 ம் ஆண்டு தொடக்கத்தில் தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார். மத்திய புலனாய்வுத் துறை எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையில் ஷொராபுதீன் வழக்கை 2012 இல் குஜராத் மாநிலத் துக்கு வெளியே உச்ச நீதிமன்றம் மாற்றிவிட்டது. முழுமையான, நேர்மை யான விசாரணை நடைபெற வேண்டும் என்ற கவலையுடன் இந்த விசாரணைக்கு ஒரு நேர்மையான நீதிபதியை மும்பை உயர்நீதிமன்றம் நியமிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விரும்பியது. மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுவினால்தான் வழக்குகள் நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இத்தகைய குழுவில் தலைமை நீதிபதியின் தலைமையில் இரண்டு நீதிபதிகள் இருப்பார்கள்.

ஷொராபுதீன் வழக்கை நீதிபதி உட்பட்டுக்கு ஒதுக்கியபோது, அந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தலைமை நீதிபதி தவிர்த்துவிட்டார் என்பதையும், இந்த விவரத்தைத் தன்னுடன் பகிர்ந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த நடத்தையைப் பற்றி பலபட புகழ்ந்து பேசியதையும் ஒரு முன்னணி வழக்குறைஞர் நினைவு கூர்ந்தார். நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது ஒரு விவேகமான செயல் என்று கருதப் பட்டது போலும்.

-----------------

2007 இல் பிரஜாபதி என்கவுன்டர் வழக்கில் அளிக்கப்பட்ட தடயவியல் அறிக்கை

பிரஜாபதியின் கூட்டாளிகள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த காவல்துறையினரின் முகத்தில் மிளகாய்பொடி தூவிவிட்டு பிரஜாபதியை விடுவித்துக் கொண்டு சென்று விட்டதாக குஜராத் காவல்துறையினர் கூறினர். ஆனால் தடயவியல் சோதனை அறிக்கையில் மிளகாய்ப் பொடி இருந்ததற்கான அறிகுறியே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஆஷிஷ் பாண்டேக்கு ஏற்பட்ட காயம் அவரே ஏற்படுத்திக் கொண்டது என்று கூறப் படுவதை மறுக்க முடியாது. காவல்துறையினர் மீது சுடப்பட்ட குண்டுகளில் ஒன்று காவல்துறை கைத்துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது. அவர் ஷொராபுதீன் வழக்கு அவரிடம் இருந்து மாற்றப்பட்டுவிட்டது.

-----------------
2007 இல் குஜராத் காவல்துறை தலைவர் பி.சி.பாண்டேயின் நடத்தை

ஷொராபுதீன் வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு குஜராத் மாநில காவல்துறை தலைவர் பாண்டேவுக்கு உச்சநீதிமன்றத்திலிருந்து மூன்று நினைவூட்டுக் கடிதங்கள் வரவேண்டி இருந்தது. விசாரணைக் குழுவில் சூடசாமா மற்றும் என்.கே.அமீன் ஆகிய இருவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் எழுத்து மூலம் உத்தரவிட்டிருந்தார். இவர்கள் இருவரும் பின்னர் குஜராத் காவல்துறையினால் கைது செய்யப் பட்டவர்கள் ஆவர். ரஜ்நிஷ் ராய் வழக்கில் அய்.பி.எஸ். அதிகாரிகளைக் கைது செய்த அடுத்த நாளே வழக்கு டைரிகளைப் பார்க்க அமித்ஷா விரும் புகிறார் என்று கூறி பாண்டே ரஜ்நிஷ்ராயை டில்லிக்கு அனுப்பிவிட்டார்.

(தொடரும்)

நன்றி: தி அவுட்லுக் 16-2-2015 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://www.viduthalai.in/readers-choice/133-2012-02-18-07-12-19/96556----------2.html#ixzz3TFROrne4



மிகுந்த ஆர்வத்தைத் தூண்டும் அமித்ஷா மீதான போலி என்கவுன்டர் வழக்கு கோப்புகள் - 3

சனி, 21 பிப்ரவரி 2015 15:25


நேற்றைய தொடர்ச்சி...


உத்தம் சென்குப்தா

(மும்பை பிராச்சி பிங்லே பிளம்பர், டில்லி அனுராதாராமன், போபால் கே.எஸ்.ஷயானி ஆகியோருடன் இணைந்து)

அதனால், இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, அதே தலைமை நீதிபதியின் தலைமையின் கீழ் இருந்த உயர்நீதிமன்றம் நீதிபதி உட்பட்டை பூனாவுக்கு மாற்றியது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக அந்த வழக்கறிஞர் கூறினார். குற்றச்சாட்டுகள் பிறப்பிக்கப் படாததன் காரணமாக வழக்கே தொடங்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் கருதியிருக்கலாம் என்று அவர் வாதிட்டார். மாறுதல் வேண்டிய நீதிபதியின் தனிப்பட்ட கோரிக்கையை ஏற்று மாறுதல் அளித்தது உயர்நீதி மன்ற அதிகார வரம்புக்கு உட்பட்டது தான்.

ஆனால், இந்த வழக்கை ஒரே நீதிபதி தொடக்கம் முதல் இறுதி வரை நடத்தவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் மிகத் தெளிவாக ஆணையிட் டிருந்த நிலையில், நீதிபதி உட்பட்டின் மாறுதல் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மாறுதல் அளிப்பது பற்றி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை உயர்நீதி மன்றம் கேட்டிருக்கலாம். இது போன்ற மாறுதல்களை உச்சநீதி மன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதேனும் இருக்கிறதா என்று ஓய்வு பெற்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியை ஒருவர் கேட்டபோது, இது பற்றி எழுதப்பட்ட விதி எதுவும் இல்லையென்றாலும்,  இத்தகைய சூழ் நிலையில் எந்த உயர்நீதிமன்றமும் இத்தகைய மாறுதலைச் செய்திருக்காது என்று கோபமாக பதிலளித்தார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதனைச் செய்துள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மோகித் எஸ். ஷா இருந்து வந்தார். நீண்ட காலம் பணியாற்றிய தலைமை நீதிபதிகளில் அவரும் ஒருவர். ஷா பதவி ஏற்றுக் கொள்ளும் முன்பு 2003 முதல் 2010 வரை  8 தலைமை நீதிபதிகள் பணியாற்றியுள்ளனர். ஷா உள்ளிட்ட மூன்று தலைமை நீதிபதி களுக்கு பதவி உயர்வு அளிப்பது நீதி பரிபாலனத்துக்கு எதிரானதாக இருக் கும் என்று  உச்ச நீதிமன்ற கொலிஜியம் (நீதிபதிகள் நியமனக் குழு) 17-3-2013 அன்று ஒரு மனதாக முடிவு செய்தது, நீதித் துறை வரலாற்றில் இதற்கு முன் எப்போதுமே நிகழ்ந்திராததாகும். அப்போது இந்திய தலைமை நீதிபதி யாக இருந்த அல்தாமஸ் கபீர் மத்திய அரசுக்குக் கீழ்க் கண்டபடி எழுதி யிருந்ததாக  17-3-2013 இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி களாகப் பதவி வகிப்பதற்கு அவர்கள் தகுதியானவர்கள் அல்ல; அவ்வாறு நியமிப்பது  நீதி பரிபாலனத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று  கொலிஜியம் (நீதிபதிகள் நியமனக் குழு) ஒரு மனதாக மேற்கொண்டுள்ள முடிவின்படி,  நியாயமான காரணங் களுக்காகவும், அவர்களது தகுதி, திறமை, பணிமூப்பு போன்ற சம்பந்தப் பட்ட அனைத்து உண்மைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டும் இந்த மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதி பதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப் படவில்லை. இந்த முடிவினால் பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒருவர் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  பாஸ்கர் பட்டாச்சார்யா; மற்றொருவர் உத்தர்கண்ட் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பாரின் கோஷ். அவர்கள் இருவரும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர்.

காலம் கடந்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வந்தது

குஜராத் காவல்துறையினரின் செயல் பாடுகளே, அவர்கள் எதனையோ மறைக்க முயல்கின்றனர் என்ற அய்யத்தை எழுப்பின. 2005 நவம்பரில் ஷொராபுதீன் கொல்லப்பட்டபோது, அரசியல் தலைவர்களைக் கொல்ல லக்ஷர்-இ-தொய்பா அமைப்பினால் அனுப்பப்பட்ட தீவிரவாதி அவன் என்று காவல்துறையினர் தொடக்கத்தில் கூறி னார்கள். இந்த தீவிரவாதி சூரத்திலிருந்து அகமதாபாத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் மடக்கப் பட்டு சரண் அடையும்படி அவனுக்குக் கூறப்பட்டது. ஆனால் அவன்  காவல் துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்போது நடந்த சண்டை யில் அவன் சுட்டுக்  கொல்லப்பட்டான் என்று வழக்கை முடிக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தனது கண் காணிப்பின் கீழ் இந்த வழக்கில் மறு படியும் விசாரணை நடத்தவேண்டும் என்று 2007 ஜனவரியில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.  இந்த விசாரணையை குஜராத் காவல் துறைத் தலைவர் பி.சி.பாண்டே ஆறு மாதத்திற்கு தடுத்து நிறுத்தியதை அடுத்து ஜூன் மாதத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.  ஆந்திர காவல்துறையினரின் உதவியுடன் ஷொராபுதீன் ஆந்திர மாநிலத்திலிருந்து பிடித்து வரப்பட்டான் என்பதை காவல்துறை 2007 ம் ஆண்டின் இறுதியில் ஒப்புக் கொண்டது. பின்னர்,  ஷொரா புதீன் விவகாரத்தில் ஆந்திர காவல் துறைக்கு எந்த பங்கும் இல்லை என்றும், பெயர், புகழ், பதவி உயர்வுக்காக ஷொராபுதீனைக் கொன்றவர்கள் குஜராத் காவல்துறையினர்தான் என்றும் உச்ச நீதிமன்றத்திற்கு குஜராத் காவல்துறை கூறியது. மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கை பற்றி உச்சநீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட  எட்டு அறிக்கைகளில் ஒன்றில், காணாமல்போன ஷொராபுதீ னின் மனைவி கவுசர் பியும் ஒரு போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என்பதையும், அவரது உடல்  இல்லோல் கிராமத்துக்கு எடுத்துச் சென்று எரிக்கப் பட்டது என்பதையும் குஜராத் காவல் துறை ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும் என்று எழுப்பப்பட்ட   கோரிக்கையை குஜராத் காவல்துறை தீவிரமாக எதிர்த்து வந்த நிலையில்தான், இந்த வழக்கின் அணுகு முறையில் மேற்கண்ட  மாற்றம் நேர்ந்தது. ராம் ஜெத்மலானி,  தற்போதைய இந்திய அட்டர்னி ஜெனரலான முகுல் ரோஹட்கி, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள யு.யு.லலித் என்று ஒரு மூத்த வழக்கறிஞர்களின் பட்டாளமே விசாரணையை மாநில காவல்துறை முடித்து, குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த பிறகு, மத்திய புலனாய்வுத் துறை விசாரணையை நடத்த உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகார எல்லை இல்லை என்று கூறி குஜராத் மாநில அரசுக்காக வாதாடினார்கள். ஒரு நியாயமான விசாரணை நடத்தப்பட்டது என்றும், குற்றம் புரிந்ததாக தெரியவரும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது கூறப்பட்டது.

என்றாலும், புகழுக்கும் பதவி உயர்வுக் கும் ஆசைப்பட்டு குற்றவாளிகளை என்கவுன்டரில் கொல்வதற்கு அய்.பி.எஸ். அதிகாரிகள் ஹைதராபாதுக்கு சென்றனர் என்று கூறியிருந்தது சற்று நெருடியது. அதற்கு குஜராத்திலேயே தேவையான குற்றவாளிகள் இல்லாமல் போய் விட் டார்களா? ஷொராபுதீன் கொல்லப்பட்ட போது அவரிடம் ஆயுதம் எதுவும் இருக்க வில்லை; அவரும், அவரது மனைவியும் அகமதாபாதுக்கு கொண்டு வரப்பட்டு புறநகரில் இருந்த ஒரு பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் தனித் தனி யாகக் கொல்லப்பட்டனர் என்று உச்ச நீதி மன்றத்துக்குக் கூறப்பட்டது. அவர்களை 48 மணி நேரம் உயிருடன் விட்டு வைத்திருந்ததற்கு முக்கியமான காரணம் என்ன?

மத்தியபுலனாய்வுத் துறை விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை மனு உச்சநீதி மன்றத்தில் 2010 வரை நிலுவையில் இருந்தது. அத்தகைய விசாரணைக்கு தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்துவிட்டு மத்திய புலனாய் வுத் துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் 2010இல் உத்தரவிட்டது. மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும்,  குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை யினரிடம் நார்கோ சோதனைகளை குஜராத் காவல்துறை மேற்கொள்ள வில்லை என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி மாநில காவல்துறை எட்டு அறிக்கைகள் அளித்தபோதிலும், அந்த அறிக்கைகளில் பல்வேறுபட்ட மிகப்பெரிய குறைகள், தவறுகள், முரண் பாடுகள் உள்ளன; குஜராத் காவல் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையும், பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளும் சரியான முறை யில், சரியான திசையில் செய்யப்பட்டுள் ளன என்று கூறுவதற்கில்லை என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கை குஜராத் மாநிலத்துக்கு வெளியே இருக்கும் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்  என்று 2012 செப்டம்பரில் மத்திய புலனாய்வுத் துறையின் கோரிக் கையை ஏற்று ஆணையிட்டபோது, பிரஜாபதி வழக்கில் சுதந்திரமான விசா ரணையை நடத்துவதற்கு தொடர்புடைய ஆவணங்களை குஜராத் காவல்துறை மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்க வில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப் பிட்டுள்ளது. ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவியுடன் பேருந்தில் துளசிராம் பிரஜாபதி என்ற மூன்றாவது நபர் பயணம் செய்து கொண்டிருந்தார் என்று நம்பப்படுகிறது. ஷொராபுதீன் வழக்கில் பிரஜாபதிதான் முக்கியமான சாட்சி  என்ற முடிவுக்கு மத்திய புலனாய்வுத் துறை வந்தபோது, இந்த இரண்டு வழக்குகளும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை அல்ல என்பதை குஜராத் காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பிரஜாபதி ராஜஸ்தான் சிறையில் இருந்தவன் என்றும், ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவி போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஓராண்டு கழித்து, 2006 டிசம்பரில் பிரஜாபதி கொல்லப்பட்டான் என்றும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.

2006 டிசம்பரில் பிரஜாபதி அகம தாபாத்துக்குக் கொண்டு வரப்பட்டு, ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டான் என்று குஜராத் காவல்துறை தொடக்கத்தில் ஒப்புக் கொண்டது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. மறுபடியும் ரயிலில் அவன் ராஜஸ் தானுக்குத் திரும்பக் கொண்டு செல்லப் பட்ட போது, கழிவறையில் ஒளிந்து கொண்டிருந்த அவனது கூட்டாளிகள் காவல்துறையினரின் கண்களில் மிள காய்த்தூளை தூவிவிட்டு பிரஜா பதியை அழைத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர் என்றும், என்றாலும் மறுநாள் காலையில் தேசிய நெடுஞ் சாலையில் பயணம் செய்த பிரஜா பதியை கைது செய்ய முயன்றபோது நடைபெற்ற சண்டையில் துப்பாக்கி குண்டடி பட்டு அவன் இறந்துவிட் டான் என்றும்  காவல் துறையினரால் கூறப்பட்டது.

ஆனால்,  இதனை முற்றிலுமாக மறுத்து, அதற்கு எதிர்மாறாக, பிரஜா பதியும் ஒரு போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டான் என்று குஜராத் காவல்துறை 2010 ல் அறிவித்தது. 30-7-2010 இல் ஒரு குற்றப்பத்திரிகையும், அடுத்த நாள் ஒரு கூடுதல் குற்றப் பத்திரிகையும் பதிவு செய்யப்பட்டது.  அதைப் பற்றி குறிப்பிட்ட உச்சநீதி மன்றம்,   குற்றவியல் தண்டனை சட்டத்தின் 207 ஆவது பிரிவின்படி கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறை களை முறையாகவும், சரியாகவும் கடைபிடிக்காமலேயே  அந்த குற்றப் பத்திரிகையையும், வழக்கையும் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மிக விரைவாக 2010 ஆகஸ்ட் 2ஆம் தேதியன்றே, மாஜிஸ்டிரேட் அனுப்பி வைத்தார் என்று குறிப்பிட்டுள்ளது.

ஒரு போலி என்கவுன்டர் வழக்கில் பிரஜாபதி கொல்லப்பட்டான் என்பதை ஒப்புக் கொண்டதற்குப் பிறகும்,  இதற்கும் ஷொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்குக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்றே குஜராத் காவல்துறைதொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால்  வேறு விதமாக எண்ணிய மத்திய புலனாய்வுத் துறை யினர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்,  தன்னை ரிமாண்ட் செய்யும்போதாவது, சிறைக்குக் கொண்டு செல்லப்படும்போதாவது தான் கொல்லப்படலாம் என்று உதய்பூர் மாவட்ட ஆட்சியருக்கும், தேசிய மனித உரிமை ஆணையத் துக்கும் பிரஜாபதி எழுதியிருப்பதை சுட்டிக் காட்டினர்.

--------------------------

2010 இல் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி அளிக்க  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.கே.அமீன் விடுத்த கோரிக்கை

மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப் பட்ட அமீன் தான் அப்ரூவராக மாறுவதற்கு 2010 இல் அனுமதி கேட்டிருந்தார். அதன் மீது மாஜிஸ்டிரேட் எந்த ஆணையும் பிறப்பிக்காமல், இதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா என்று கூறுமாறு வேறு இரண்டு குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு தாக்கீது அனுப்பினார்.

சபர்மதி சிறையில் உள்ள தனது கணவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆகஸ்ட் 21 அன்று அமீனின் மனைவி குற்றம் சாட்டினார்.  தான் அப்ரூவராக மாறுவதாகக் கூறிய தனது கோரிக்கையை அமீன் 2011 ஜனவரி 18 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்த விவகாரத்தில் மாஜிஸ்டிரேட் சட்டத்தினாலேயே அறியப்பட்டிராக ஒரு நடைமுறையை கடைப் பிடித்தார் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

(தொடரும்)

நன்றி: தி அவுட்லுக் 16-2-2015 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

 



மிகுந்த ஆர்வத்தைத் தூண்டும் அமித்ஷா மீதான போலி என்கவுன்டர் வழக்கு கோப்புகள் - 4

ஞாயிறு, 22 பிப்ரவரி 2015 14:40

- உத்தம் சென்குப்தா

(மும்பை பிராச்சி பிங்லே பிளம்பர், டில்லி அனுராதாராமன், போபால் கே.எஸ்.ஷயானி ஆகியோருடன் இணைந்து)

ஷொராபுதீன் ஏன் இறந்தான்?

ஷொராபுதீன் ஏன் இறந்தான்? ஷொராபுதீன் வாழ்வதற்கான நியாயத்தை இழந்துவிட்டான்  என்று அமித் ஷா கூறியதாக ஒரு சாட்சியின் வாக்குமூலத்தை மத்திய புலனாய்வுத் துறை  தாக்கல் செய்தது. அப்படியே யானாலும் நமது கேள்விக்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை. மூன்று அய்.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறைக் குழு ஏன் ஹைதரா பாத்துக்கு பயணம் செய்து, தேசிய காவல்துறை அகாதமியின் விருந் தினர்  விடுதியில் தங்கி, மறுநாள் காலையிலேயே  காலிசெய்துவிட்டு புறப்பட்டு விட்டனர்? தங்கள் இரை யின் நடமாட்டத்தைப் பற்றிய குறிப் பிட்ட தகவல் அக்குழுவிடம் இருந் தது. (உச்சநீதிமன்றத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவலின்படி ஷெராபுதீனை நெருங்குவதற்கு பிரஜாபதி கருவியாக இருந்திருக்கக் கூடும்.  ஷொராபுதீன் எந்த சொகுசு பேருந்தில் பயணம் செய்து கொண்டி ருக்கிறார் என்பதை துல்லியமாக அவன் அறிந்திருந்தான்.)  ஹைதரா பாத் பேருந்து நிலையத்தில் அவனை அவர்களை கைது செய்யவில்லை. ஆந்திர காவல்துறைக்கும் அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. இடை வெளி விட்டு அவர்கள் அந்தப் பேருந்தைப் பின்தொடர்ந்து சென் றார்கள். ஜஹீராபாத்தில் பேருந்தை அவர்கள் இடைமறித்தார்கள். காவல் துறை அதிகாரிகள் பேருந்துக்குள் ஏறி நேரடியாக இருக்கை எண் 29, 30 க்கு சென்று அங்கிருந்த இரண்டு பேரை கீழே இறங்கச் சொன்னார்கள்.

ஷொராபுதீனின் மனைவியை பேருந் திலேயே இருக்கச் சொன்னார்கள். ஆனால் அவ்வாறு இருக்க மறுத்த அவர் தனது கணவனைப் பின் தொடர்ந்து செல்லவே விரும்பி, வலியுறுத்தினார்.

ஷொராபுதீன்,அவரது மனைவி, பிரஜபாதி ஆகியோரை இந்தூர் பேருந்து நிலையத்தில் அவர்களது குடும்பத்தினர் வழியனுப்பி வைத் தனர். ஹைதராபாதில் கலிமுதீன் என்பவருடன் அவர்கள் தங்க இருக் கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஹைதராபாதிலிருந்து அவர்கள் யாத்திரையாக சாங்லிக்குச் செல்ல இருந்தார்கள்  என்று அவரது சகோதரர் கூறினார்.

நவ்ரங்கபுராவில் படேல் சகோ தரர்களுக்குச் சொந்தமாக இருந்த பாபுலர் பில்டர்ஸ் நிறுவன அலுவ லகத்தில் 2004 இல் நடந்த ஒரு குற்ற நிகழ்வுக்காக ஷொராபுதீன் காவல் துறைக்கு தேவைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வரவேற்பு பகுதி யில் யாரோ ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அடை யாளம் தெரியாத குற்றவாளிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த வரவேற் பாளர் எவரது பெயரையும் அதில் குறிப்பிடவில்லை. அச்சத்தை ஏற் படுத்தி, பணத்தைப் பறிப்பதற்காக ஷொராபுதீனின் கூலிப்படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பின்னர் படேல் சகோ தரர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு சுட்டவர்கள் சில்வஸ்டர் மற்றும் பிரஜாபதி என்று காவல்துறையினர் பின்னர் தெரிவித்தனர். 2004 க்கும் 2005 டிசம்பருக்கும் இடையில் ஷொராபுதீன் என்ன செய்து கொண் டிருந்தான்?  நிகழ்ச்சி நடந்து ஓராண் டுக்குப் பிறகுதான் ஷொராபுதீனைக் கைது செய்ய காவல்துறைப் படை ஹைதராபாதுக்கு அனுப்பப்பட்டதா? இதற்கு மறுபக்கம் ஒன்றும் இருக்கிறது. உள்ளபடியே  பெயர், புகழ், பதவி உயர்வு தேடி வேறொரு மாநிலத் துக்குள் நுழையும் ஆபத்தான செயலை காவல்துறையினர் மேற் கொள்வார்கள் என்று நம்புவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

ஒரு மாற்றுக் கருத்து முடிவுக்கு மத்திய புலனாய்வுத் துறை வந்தது. குற்றமிழைத்தவர்கள் என்று கருதி னால் சட்ட வழியில்லாமல் நேரடியாக தண்டனை அளிக்கலாம் என்று கருதும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்கள் இந்தக் காவல்துறை அதிகாரிகள் . தாங்கள் இடும் வேலையைச் செய்பவர் களுக்கு பணம் கொடுக்கும் இந்த அதிகாரிகளின் பட்டியலில் ஷொராபு தீனும் இருந்தான்; அவர்கள் சொல் லும் வேலையை அவன் செய்வான். ஒன்று பேராசை கொண்டவனாக அதிக பணம் அவன் கேட்டிருக்கலாம் அல்லது காவல்துறை அதிகாரிகளை பிளாக்மெயில் செய்யத் தொடங்கி யிருக்கலாம். அதனால் அவனைத் தீர்த்துக் கட்டவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கலாம். ஷொராபுதீனைக் கடத்திச் சென்றதை நேரில் பார்த்த சாட்சிகள் என்பதால் அவர்கள் காவல்துறையினரை சிக்கவைத்து விட இயலும் என்பதால் பிரஜாபதியும், ஷொராபுதீன் மனைவி  கவுசர்பியும் கொல்லப்பட்டிருக்கலாம்.

அல்லது ஷொராபுதீன் தனக்குத் தேவையில்லாத விஷயங்களை அதிகமாக அறிந்திருந்தானா? ஒன்பது ஆண்டுகள்,  மூன்று விசாரணைகள், மத்திய புலனாய்வுத் துறையின் குற்றப்பத்திரிகை ஆகிவற்றிற்குப் பிறகும்,  இந்த வழக்கில் அகண்ட இடைவெளிகள் இன்னமும் இருப்ப தாக எங்களிடம் பேசிய நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கோடிட்டுக் காட்டினர். ஷொராபுதீன் வழக்கை தோண்டி அதன் ஆழம் வரை சென்றால், குஜராத்தில் நடந்த ஒரு அரசியல்வாதியின் கொலை வழக் கில் இருக்கும் முடிச்சு அவிழும் என்று அவர்களில் பலரும் நம்புகின்றனர். ஆனால் இதற்கான தொடர்பு என்ன? சாட்சியம் என்ன? பயனுள்ள வகையில் நடவடிக்கை மேற்கொள்ள இயலாதவாறு, அதிக அளவிலான காலம் கடந்துவிட்டது.

இந்தப் புதிரில் இன்னமும் விடை கிடைக்காமல் இருக்கிற முக்கியமான கேள்வியே இந்த போலி என்கவுன் டர்கள் பற்றி குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்பே அறிந் திருந்தாரா?  அவற்றிற்கு அனுமதி அளித்திருந்தாரா? அவற்றை மறைக்க உதவினாரா? என்பதே. விசாரணை நீதிமன்றத்தில்  தங்களின் நிலைப்பாடு நியாயப்படுத்தப்பட்டது என்று அமித் ஷாவும், பா.ஜ.க.வும் நினைக்கலாம். என்றாலும், மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த, துடிப்புடன் செயல் படும் அமித் ஷா தனது கண் முன்னா லேயே நடந்து கொண்டிருந்ததை அறியாமல் இருந்திருக்க முடியுமா என்று மற்றவர்களுக்கு ஏற்படும் அய்யத்தைப் போக்குவது அவ்வளவு எளிதானதாக இருக்க முடியாது.

நாட்டில் உள்ள மிகச் சிறந்த வழக் குரைஞர்கள் என்று கருதப்படுபவர்கள் ஷாவுக்காக மட்டுமே வாதாட வில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட சில காவல்துறை அதிகாரி களுக்கும் வாதாடினர். அவர்களை மாநில அரசு மீண்டும் பணியில் அமர்த்துவதில் காட்டிய வேகம் அந்த அய்யத்தை இன்னமும் கூட்டவே செய்கிறது.

அமைச்சர் துப்பாக்கியின் விசையை அழுத்தவில்லை என்பது உண்மையாக இருக்கலாம்; ஷொராபு தீனை அவர் சந்திக்காமலும் கூட இருந்திருக்கலாம். இந்த போலி என் கவுன்டர்களுடன் அவரைத் தொடர்பு படுத்துவதற்கான நேரடியான சாட்சி யங்கள் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை இந்த விவகாரத்தில் அவர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லாமலேயே இருக்கலாம். கொலை நடந்த இடத்தில் அவர் இல்லை. கொல்வதற்கான ஆணையில் அவர் கையெழுத்திட்டிருக்கவில்லை. மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கை விசாரித்தபோது, மாநிலத் துக்கு வெளியே தான் இருக்கும்படி பார்த்துக் கொண்டது அவரைப் பொருத்தவரை வேண்டுமானால் நியாயமானதாக இருக்கலாம். எனவே அவருக்கு அநியாயம் நடந்துவிட்டது என்றும், முந்தைய அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு அரசியல் காரணங்களுக்காக தன் மீது குற்றம் சுமத்தி சிக்கவைத்துவிட்டது என்றும்  கூச்சலிட்டு பாதுகாத்துக் கொள்வது அவருக்கும், அவரது வழக்குரைஞர் படைக்கும் எளிதானதாக இருந்தது.

ஆனால், அதற்கு மாறாக, ஒரு மாறுபட்ட பங்கினை ஷா ஆற்றியுள் ளார் என்பதற்கான, நீதிபதி கோசாவி குறிப்பிட்டது போன்ற,  செவி வழி செய்திகள் மலையளவு இருக்கவே செய்கின்றன. ஒரு மூத்த உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சுருக்கமாக, ஆனால் தெளிவாகக் கூறுகிறார்: திட்டமிடுவது, கூலிப்படை கொலைகாரர்களை நியமிப்பது போன்ற செயல்களை பின்னால் இருந்து இயக்கும் பெரு மூளை (மாஸ்டர் பிரெய்ன்) ஒன்று குற்றவியல் வழக்குகளில் இருப்பதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். கடந்த காலத்தில் கணவர்கள், நண்பர்கள், வணிகப் பங்குதாரர்கள் அனைவரும் இது போன்று செய்திருக் கின்றனர்; அதற்காக தண்டனையும் பெற்றிருக்கின்றனர். சட்டத்தின் கீழ், துப்பாக்கியின் விசையை அழுத்து பவர் போலவே கொலைக்கு வெற் றிலைபாக்கு வைப்பவரும் குற்றவாளி தான்.

----------------------

விசாரணை அறிக்கையை மாற்றி எழுதக் கூறிய அமைச்சரின் ஆணையை ஏற்க மறுத்த காவல்துறை ஆய்வரின் துணிவு

மத்திய புலனாய்வுத் துறைக்கு, ஷொராபுதீன் ஷெய்க் போலி என்கவுன்டர் வழக்கை தொடக்கத்தில் விசாரித்து அறிக்கை அளித்த  குஜராத் காவல்துறை ஆய்வாளர் வசந்தலால்ஜிபாய் சோலங்கி அளித்த வாக்குமூலம்

2006 நவம்பர் முதல் வாரத்தில் அய்.ஜி. கீதா ஜோஷ்ரி அவரது அலுவலகத்துக்கு வந்து தன்னைச்  சந்திக்கும்படி எனக்கு உத்தரவிட்டார். அதன்படி காந்தி நகருக்குச் சென்று அவரை நான் சந்தித்தேன். வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று ஆரம்பத்தில் அவர் என்னிடம் கேட்டறிந்து கொண்டார். சிறிது நேரத்திற்குப் பின் அன்று ஒரு பங்யங்கர நிகழ்ச்சி நடந்ததாகக் கூறிய அவர், கூடுதல் டி.ஜி.பி. ய்கர் மற்றும் டி.ஜி.பி. பி.சி.பாண்டே ஆகியோருடன் தன்னையும் அழைத்து அவரது அலுவலகத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விசாரணையின் முன் னேற்றம் பற்றி விசாரித்ததாக கீதா கூறினார். உள்துறை அமைச்சர் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்று கூறிய கீதா, என்னைப் பற்றி அவர் விசாரித்ததாகவும் கூறினார். வன்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் போன்ற மூத்த காவல்துறை அதிகாரிகளை ஆபத்தில் சிக்கவைக்கக்கூடிய அறிக்கைகளை எழுதுவதற்கு காவல்துறை ஆய்வாளரான நான் எவ்வாறு துணிந்தேன் என்று அமித் ஷா கேட்டதாக கீதா என்னிடம் கூறினார்.

எனது விசாரணைஅறிக்கைகளை கிழித்தெறிந்து விடும் படியும், நான் கீதாவின் கீழ் பணியாற்றுபவன் என்பதால் விசாரணை அறிக்கைகளை மாற்றி எழுதுவதற்கு என்னை சரிக்கட்டவேண்டிய பொறுப்பு கீதாவுக்கு இருப்பதாகவும் அமித்ஷா கீதாவிடம் கூறியதாக கீதா என்னிடம் தெரிவித்தார். அமைச்சர் கூறியதைக் கேட்ட கூடுதல் டி.ஜி.பி. ராய்கர், தான் விரைவில் ஓய்வு பெற இருப்பதால், எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என்று அமைச்சரிடம் கூறினார் என்று கீதா என்னிடம் தெரிவித்தார். அமைச்சருடனான அந்த சந்திப்பைப் பற்றி விளக்கிய பிறகு, அமைச்சரின் அறிவுரையின்படி எனது விசாரணை அறிக்கைகளில் சில மாற்றங்களை நான் செய்யவேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளைக் காப்பாற்று வதற்கு அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றைப் புதியதாக நான் தயாரிக்க வேண்டும் என்றும் கீதா என்னிடம் கூறினார். அதற்கு நான் குஜராத்தி மொழியிலேயே அம்மையீர், எனது லால்ஜிபாயை கடவுளை விட மேலாக நான் மதிக்கிறேன். சொர்கத்தில் இருக்கும் அத்தகைய எனது தந்தையே இதுபோன்ற வேலைகளைச் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டாலும் கூட நான் கீழ்ப்படியமாட்டேன் என்று கூறினேன். இதைக்கேட்ட கீதா அதிர்ச்சி அடைந்து போனார். இந்த வழக்கில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அந்தப் பெண் ஏதுமறியாத அப்பாவி என்றும், இது போன்ற ஒரு கொடூரமான குற்றம் இழைக்கப்பட்ட வழக்கில், சட்டத்திற்குப் புறம்பான செயல் களில் நாம் ஈடுபட்டால், கடவுள்கூட நம்மை மன்னிக்க மாட்டார் என்று கீதாவிடம் நான் எடுத்துக் கூறினேன்.

நீங்கள் என்னிடம் காட்டிய  எண் PE 66/2006 வழக்கின், குறிப்பு ஆணை மற்றும் கடிதப்போக்குவரத்து உள்ளிட்ட  ஆவணங்கள் அனைத்தையும் நான் மிகுந்த கவனத்துடன் பரிசீலித்துப்பார்த்தேன். உதய்பூரில் இருந்த துளசிராம் பிரஜாபதியைச் சென்று பார்ப்பதற்கு அனுமதி கேட்டு நான் கீதாவுக்கு எழுதியிருந்த கடிதம், (அதன் பேரில் தானும் என்னும் வந்து விரஜாபதியைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கீதா எழுதியிருந்த குறிப்பும் அடங்கிய) கடிதப்போக்குவரத்துக் கோப்பில் காணப்படவில்லை. இது பற்றி கடிதத்தின் அலுவலக நகலும் கோப்பில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அகமதாபாத் வட்டம் குற்றவியல் சி.அய்.டி. உதவி மாவட்டக் கண்காணிப் பாளராக டாக்டர் எம்.கே.அமீன் நியமிக்கப்பட்ட  பிறகு எனது விசாரணை ஆவணங்களை 2007 மார்ச் மாதத்தில் அவரிடம் நான் ஒப்படைத்துவிட்டேன். அதனால் என்னிடம் கேட்கப்பட்டபோது, எனது அறிக்கையும், அசல் குறிப் பாணையும் அழிக்கப்பட்டு விட்டன என்று நான் கூறினேன். துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்ட பிறகு இது நடந் திருக்கலாம்.

(நிறைவு)

நன்றி: தி அவுட்லுக் 16-2-2015

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://www.viduthalai.in/readers-choice/133-2012-02-18-07-12-19/96670----------4.html#ixzz3TFQb0u95

No comments:

Post a Comment